`அழியக்கூடிய மை; சிறப்புப் பேனா; வாழ்நாள் தடை! -எப்படி நடந்தது டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 முறைகேடு?

ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரைப் பகுதிகளில் முறைகேடாக டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதியவர்கள் உட்பட மொத்தம் 99 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் - 4 தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 5,575 மையங்களில் 16,29,865 பேர் தேர்வு எழுதினர். கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், நில அளவர், தட்டச்சர் போன்ற பணிகளுக்காக நடத்தப்பட்ட இந்தத் தேர்வின் முடிவுகள் நவம்பர் மாதம் 25-ம் தேதி வெளியானது.

இதில், ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை ஆகிய தாலுகாக்களில் தேர்வு எழுதியவர்கள், தரவரிசைப் பட்டியலில் முதல் 39 இடங்களைப் பிடித்திருப்பது சக தேர்வர்களால் கண்டுபிடிக்கப்பட்டு புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நடந்த விசாரணையில் பிற மாவட்டங்களைச் சேர்ந்த பலர், ராமேஸ்வரம் தேர்வு மையம் வேண்டும் எனக் கேட்டு வாங்கி அங்கே சென்று தேர்வு எழுதியது கண்டறியப்பட்டது. மேலும், அவர்களில் சிவகங்கையைச் சேர்ந்தவர்களே அதிகம் என்பதும் தெரியவந்தது.
அந்த இரண்டு தாலுகாக்களில் உள்ள மொத்த 8 மையங்களில் தேர்வு எழுதியவர்கள் உட்பட முதல் 39 இடங்களைப் பிடித்தவர்கள் என அனைவரையும் நேரில் அழைத்து, டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை நடத்தினர். அப்போது, ராமேஸ்வரத்தில் தேர்வெழுதிய பிற மாவட்டங்களைச் சேர்ந்த பெரும்பாலான தேர்வர்கள் ஒரே மாதிரியான பதிலைத் தெரிவித்துள்ளனர். `எங்கள் பாட்டிக்குத் திதி கொடுப்பதற்காக ராமேஸ்வரம் செல்ல வேண்டியிருந்தது. அதனால் அங்கேயே தேர்வு எழுதிவிட்டு அப்படியே திதி கொடுத்துவிட்டு வந்தோம்’ எனக் கூறியுள்ளனர்.

தேர்வர்களின் பதில் டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகளுக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்துள்ளது. இதையடுத்து சூடுபிடிக்கத் தொடங்கிய இந்த விசாரணையில் இன்று அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம்.
அதன்படி, டி.என்.பி.எஸ்.சி குரூப் - 4 தேர்வில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரையில் முறைகேடு நடந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இல்லாமல் மேலும் 52 பேர், தேர்வுப் பணியில் ஈடுபட்டிருந்தவர்களின் உதவியுடன் விடைத்தாளில் திருத்தம் செய்துள்ளனர். எனவே, குற்றச்சாட்டுக்கு ஆளான 99 தேர்வர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் வாழ்நாள் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தேர்வர்களுக்கு உதவிய இடைத்தரகர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தரவரிசைப் பட்டியலில் முறைகேடாக முதல் 39 இடங்களைப் பிடித்தவர்களுக்குப் பதிலாகத் தகுதியான வேறு 39 தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்குத் தகுதிச் சான்றிதழ் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரையில் மட்டுமே இந்த முறைகேடு நடந்துள்ளதாகவும் டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது பற்றி டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகளிடம் பேசியபோது, ``தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் குரூப் - 4 தேர்வைத்தான் அதிகமானவர்கள் எழுதுவார்கள். இந்த வருடம் சுமார் 16 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். அவர்களில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் சிலமணி நேரங்களில் அழிந்துவிடும் சிறப்பு மை கொண்ட பேனாக்களால் முதலில் தேர்வு எழுதியுள்ளனர். அந்த மை அழிந்த பிறகு இடைத்தரகர்களின் உதவியால் மீண்டும் அந்த விடைத்தாள்களில் சரியான விடையை நிரப்பியுள்ளனர். பின்னர், விடைத்தாள் கட்டுகளில் வைத்துத் திருத்தும் இடத்துக்கு அனுப்பியுள்ளனர்.
இப்படித் தேர்வு எழுதியதால்தான் 39 பேரும் தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். பொதுவாக, அரசுத் தேர்வுகள் ஓ.எம்.ஆர் விடைத்தாள்கள் மூலம்தான் நடத்தப்படுகின்றன. இந்தத் தாள்கள் ஸ்கேன் செய்யப்பட்டு சரிபார்க்கப்படும். அப்படிப் பாதுகாப்பாக இருக்கும் விடைத்தாள்களிலேயே இவர்கள் நூதன முறையில் முறைகேடு செய்துள்ளனர். தேர்வு மையக் கண்காணிப்பாளர்கள்தான் இடைத்தரகர்களாகச் செயல்பட்டு தேர்வர்களுக்கு உதவியுள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது. இருந்தும் உண்மையான இடைத்தரகர்கள் யார் என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த முறைகேடு அப்பகுதியில் இருக்கும் அதிகாரிகளுக்குத் தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரையைச் சேர்ந்த இரண்டு வட்டாட்சியர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ள 99 தேர்வர்கள் இனி டி.என்.பி.எஸ்.சி நடத்தும் வேறு எந்தத் தேர்வையும் எழுத முடியாது. இது மட்டுமல்லாமல் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும், வருங்காலத்தில் வேறு எந்த அரசு தேர்வுகளையும் எழுதமுடியாத வகையில் நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெறுகிறது" என விவரித்தவர்கள்,
`` டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதுபவர்கள் எந்த இடைத்தரகர்களையும் அணுக வேண்டாம், தேர்வு மற்றும் பணி நியமனங்கள் அனைத்தும் நேர்மையாகவே நடைபெறுகின்றன. எனவே, தேர்வில் ஏதேனும் சந்தேகம் மற்றும் புகார் இருந்தால் தேர்வர்கள் அதை நேரடியாக அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம் எனக் கடந்த இரண்டு வருடங்களாகக் கூறப்பட்டு வருகிறது. அப்படி இருந்தும் இந்த ஆண்டும் பெரும் முறைகேடு நடந்துள்ளது.

குரூப் - 4 தேர்வில் இன்னும் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கவில்லை. அதனால் முறைகேட்டில் ஈடுபட்டவர்களைத் தகுதி நீக்கம் செய்துவிட்டு தகுதியானவர்களுக்கு எளிதாகப் பணி நியமனம் வழங்கிவிடலாம். அதற்கான பணிகள் நடந்து வருகின்றன’ என்றார்.