Published:Updated:

`உயர் அதிகாரிகள் முதல் தேர்வுக் குழு வரை!'- சி.பி.சி.ஐ.டி விசாரணையின் அடுத்தகட்டம் #Tnpsc

 டி.என்.பி.எஸ்.சி அலுவலகம்
டி.என்.பி.எஸ்.சி அலுவலகம்

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு விவகாரத்தில் பல உயர் அதிகாரிகளும் சிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர்களில் பலர் விரைவில் இடமாற்றம் செய்யப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் - 4 தேர்வில் நடைபெற்றுள்ள முறைகேடு கடந்த சில நாள்களாக மொத்த தமிழகத்தையும் உலுக்கி வருகிறது. டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் நடந்த முறைகேடு உறுதி செய்யப்பட்டு தவறான வழியில் தேர்வு எழுதிய 99 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் இனி வாழ்நாள் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேர்வு
தேர்வு
மாதிரி புகைப்படம்

இந்த விவகாரம் தொடர்பாக இடைத்தரகர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக, அதிகாரிகளிடமும் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்தத் தேர்வு முறைகேடு தொடர்பாக தினம்தினம் புதிய தகவல்கள் வெளியாகி திருப்பம் அளித்து வரும் நிலையில், சமீபத்தில் நடந்த குரூப் 4 தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படலாம் என்ற தகவல் வெளியானது. இது, முறையான வழியில் தேர்வு எழுதி தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்த தேர்வர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றிப் பேசியுள்ள அமைச்சர் ஜெயக்குமார், ``சிலரின் தவறுக்காக நன்கு படித்து நியாயமான முறையில் தேர்வு எழுதியவர்களைத் தண்டிக்கக் கூடாது. அதனால் தேர்வு ரத்து செய்யப்படாது என்றும் கூறமுடியாது. டி.என்.பி.எஸ்.சி எந்த முடிவெடுத்தாலும் அதில் எங்களால் தலையிட முடியாது” என்று கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகள் முறையான பதில் அளிக்க வேண்டும் எனத் தேர்வர்கள் பலரும் கோரிக்கை வைத்து வந்தனர்.

 டி.என்.பி.எஸ்.சி அலுவலகம்
டி.என்.பி.எஸ்.சி அலுவலகம்

இந்நிலையில், தற்போது நடந்த தேர்வு ரத்து செய்யப்படாது எனப் பெயர் குறிப்பிட விரும்பாத டி.என்.பி.எஸ்.சி அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். ``தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களைத் தவிர மற்றவர்களுக்கு விரைவில் கலந்தாய்வு நடத்திப் பணி நியமன ஆணை வழங்கப்படும். சிலர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த தேர்வும் ரத்து செய்யப்படாது. இது தொடர்பாக வெளியாகும் தகவல்கள் அனைத்தும் பொய்யானவை. நல்ல முறையில் தேர்வு எழுதியவர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். ஏற்கெனவே அறிவித்த 9,300 காலிப் பணியிடங்களும் தற்போது தேர்வெழுதி வெற்றி பெற்றவர்கள் மூலம் நிரப்பப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

`அழியக்கூடிய மை; சிறப்புப்  பேனா; வாழ்நாள் தடை! -எப்படி நடந்தது டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 முறைகேடு?

இதற்கிடையில், `டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் நடந்த முறைகேட்டில் பல உயர் அதிகாரிகளும் சிக்குவார்கள்' என்ற தகவலும் வெளியாகியுள்ளது. குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள்கள் அனைத்தும் உயர் அதிகாரிகளின் மேற்பார்வையிலேயே தயாரிக்கப்படுகின்றன. எனவே, அவர்களுக்குத் தெரியாமல் இந்த முறைகேடு நடந்திருக்க வாய்ப்பில்லை. இதுவரை டி.என்.பி.எஸ்.சி அலுவலகத்தில் பணியாற்றும் கீழ்மட்ட அதிகாரிகள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய உயர் அதிகாரிகளையும் அடையாளம் கண்டறிந்து அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனத் தேர்வர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

 டி.என்.பி.எஸ்.சி
டி.என்.பி.எஸ்.சி

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு விவகாரம் நாளுக்குநாள் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் தற்போது அந்த ஆணையத்தில் முக்கிய நிர்வாகிகளாக உள்ளவர்கள் முதல் தேர்வுக் குழுவினர் வரை அனைவரும் இடமாற்றம் செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.

பின் செல்ல