Published:Updated:

`அந்த' 52 விடைத்தாள்கள்; சிக்கிய வட்டாட்சியர்கள்! -ஆய்வில் அதிர்ந்த டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகள்

டி.என்.பி.எஸ்.சி அலுவலகம்
டி.என்.பி.எஸ்.சி அலுவலகம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய செயலாளர் நந்தகுமார் ஐ.ஏ.எஸ், தேர்வுத்தாள்கள் வைக்கப்பட்டிருந்த ராமநாதபுரம் தலைமை கருவூலத்தில் விசாரணையை மேற்கொண்டார்.

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 99 தேர்வாளர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், முறைகேட்டுக்கு உதவிய இடைத்தரகர்கள், தேர்வு மைய பொறுப்பாளர்கள் உள்ளிட்டோரிடம் சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இதனிடையே, முறைகேடு நடைபெற்ற தேர்வு மையங்களை ரத்து செய்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் இனி தேர்வு எழுத உள்ளோரும் அவதிக்குள்ளாகும் நிலை உருவாகியுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி செயலாளர் நந்தகுமார் விசாரணை
டி.என்.பி.எஸ்.சி செயலாளர் நந்தகுமார் விசாரணை

கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி அன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் குரூப்-4 பணிகளுக்கான தேர்வு நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள 5,575 மையங்களில் 16,29,865 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், நில அளவர், தட்டச்சர் போன்ற பணிகளுக்காக நடத்தப்பட்ட இந்தத் தேர்வின் முடிவுகள் கடந்த நவம்பர் மாதம் 15-ம் தேதி வெளியானது.

இந்த நிலையில், தேர்வில் வெற்றியடைந்து தரவரிசைப் பட்டியலில் முதல் 100 இடங்களில் இடம் பிடித்தவர்களில் 35 பேர் குறிப்பிட்ட இரு தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் என்பதால் தேர்வில் முறைகேடு நடந்திருக்கக் கூடும் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.

அந்தத் தகவலில், டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தேர்வர்கள் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை ஆகிய இடங்களில் உள்ள தேர்வு மையங்களைத் தேர்வு செய்துள்ளனர். இவ்வாறு இந்த இரு மையங்களிலும் தேர்வு எழுதியவர்களில் 35-க்கும் மேற்பட்டோர் மாநில அளவில் முதல் 100 இடங்களுக்குள்ளான தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். மேலும், வகுப்புவாரியாகவும் முதல் 50 இடங்களைப் பெற்றுள்ளனர்.

கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகம்
கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகம்

இந்தத் தரவரிசைப் பட்டியல் குறித்து தேர்வாளர்கள் சந்தேகம் எழுப்பியதைத் தொடர்ந்து. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய செயலாளர் நந்தகுமார், தேர்வுத்தாள்கள் வைக்கப்பட்டிருந்த ராமநாதபுரம் தலைமைக் கருவூலத்தில் விசாரணை மேற்கொண்டார். மேலும், கீழக்கரை தாலுகாவுக்குட்பட்ட முத்துப்பேட்டை தேர்வு மையமான கெளசானல் கல்லூரியிலும் ராமேஸ்வரம் தேர்வு மையங்களிலும் ஆய்வு மேற்கொண்டார். இந்த விசாரணையைத் தொடர்ந்து முதலிடம் பிடித்த 100 பேரை நேரில் அழைத்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து, அந்த 100 பேருக்கும் மறுதேர்வு நடத்தப்பட்டது. இவற்றின் மூலம் முதலிடம் பிடித்தவர்களில் 39 பேர் உட்பட 99 பேர் தேர்வில் முறைகேடு செய்திருப்பது தெரியவந்தது.

`அழியக்கூடிய மை; சிறப்புப்  பேனா; வாழ்நாள் தடை! -எப்படி நடந்தது டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 முறைகேடு?

இதையடுத்து முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேரையும் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டதுடன் இவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுதவும் தடை விதிக்கப்பட்டது. இதனிடையே, விடைத்தாள்களில் அழியக்கூடிய பேனா மையைக் கொண்டு விடையை எழுதியதும் சிறிது நேரத்தில் அவை மறைந்த நிலையில் தேர்வு மைய பொறுப்பாளர்களாக செயல்பட்டவர்களின் உதவியுடன் அதில் சரியான விடைகளை எழுதியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவ்வாறு 52 விடைத்தாள்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

வட்டாட்சியர் பார்த்தசாரதி
வட்டாட்சியர் பார்த்தசாரதி

இதைத்தொடர்ந்து ராமேஸ்வரம் தேர்வு மைய பொறுப்பாளராக இருந்த வட்டாட்சியர் பார்த்தசாரதி, கீழக்கரை மைய பொறுப்பாளரான வட்டாட்சியர் வீரராஜா உள்ளிட்ட 12 பேரிடம் சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதற்காக வட்டாட்சியர்கள் இருவரும் நேற்று சென்னை அழைத்துச் செல்லப்பட்டனர்.

மாநிலம் முழுவதும் பரபரப்பை எழுப்பியுள்ள இந்த முறைகேட்டில் மேல்மட்ட அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கும் எனக் கருதப்படுவதால் நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என மற்ற தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், முறைகேடுகளில் ஈடுபட்டவர்களின் செயலால் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை பகுதியில் உள்ள தேர்வு மையங்களை ரத்து செய்துள்ளதற்கு தேர்வர்கள் இடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

வட்டாட்சியர் வீரராஜா
வட்டாட்சியர் வீரராஜா

``தேர்வு அதிகாரிகளின் துணையுடன் நடந்த இந்த முறைகேட்டைத் தடுக்க மாற்று வழிகளை ஆராயாமல், வறுமையான சூழலில் பல கஷ்டங்களுக்கு இடையே அரசு வேலையை எதிர்பார்த்து உள்ளூரில் தேர்வு எழுவோருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தேர்வு மையங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது வேதனை அளிக்கின்றது" என்கின்றனர் தேர்வர்கள்.

அடுத்த கட்டுரைக்கு