Published:Updated:

`தவறு நடந்தது உண்மைதான், ஆனால்..?' -தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி அலுவலகம்
டிஎன்பிஎஸ்சி அலுவலகம்

டி.என்.பி.எஸ்.சி தேர்வு குரூப் 4, குரூப் 2 தேர்வுகளில் தவறு நடந்தது உண்மைதான். ஆனால், குரூப் 4 தேர்வில் தகுதியானவர்களுக்கு விரைவில் கவுன்சலிங் நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 4 தேர்வு முறைகேடு குறித்த தகவல்கள் தினந்தோறும் வெளியாகி வருகின்றன. சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணையை நடத்தி தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 14 பேரைக் கைது செய்துள்ளனர். இந்த முறைகேட்டில் மூளையாகச் செயல்பட்ட சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமாரின் புகைப்படத்தை வெளியிட்ட சி.பி.சி.ஐ.டி போலீஸார், அவர் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.

டிஎன்பிஎஸ்சி
டிஎன்பிஎஸ்சி

இந்தநிலையில் டி.என்.பி.எஸ்.சி செயலாளர் நந்தகுமார் ஐ.ஏ.எஸ் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், `2019-ம் ஆண்டு நடந்த டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்த செய்தி சமூகவலைதளங்கள் மூலம் தெரியவந்தது. உடனடியாக தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அடங்கிய குழுமம் முறைகேடு குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்க செயலர் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலரை அறிவுறுத்தியது. இதையடுத்து, நடந்த ஆய்வுகளுக்குப்பின் தவறு நடந்தது உறுதி செய்யப்பட்டதும், மேல்நடவடிக்கைக்காகக் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. குரூப் 4 தேர்வில் தகுதிவாய்ந்த தேர்வர்கள் கலந்தாய்வுக்கு விரைவில் அழைக்கப்படுவர்.

இதைத்தொடர்ந்து 2017-ம் ஆண்டு நடந்த குரூப் 2 ஏ தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதனால் அதுதொடர்பாகவும் டி.என்.பி.எஸ்.சி ஆய்வு நடத்தியது. சந்தேகத்தின் அடிப்படையில் இத்தேர்வு குறித்து குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள உரிய ஆவணங்கள் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும், கடந்த சில தினங்களாக மோட்டார் வாகன ஆய்வாளர் தேர்விலும் தவறுகள் நடந்திருப்பதால் அத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

தேர்வர்கள்
தேர்வர்கள்
மாதிரி படம்

மோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வைப் பொறுத்தவரை முன்அனுபவச் சான்றிதழ் சரிபார்ப்பு போக்குவரத்து துறை மூலம் செய்யப்பட்டது. அத்துறை அளித்த விவரங்கள் அடிப்படையில் 33 பேருக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. போக்குவரத்து துறை நடத்திய முன்அனுபவச் சான்றிதழ் சரிப்பார்ப்பில் தவறு நிகழ்ந்துள்ளதாகக் கூறி இப்பணியை மறு ஆய்வு செய்ய போக்குவரத்து துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதில் தேர்வாணையத்தின் செயல்பாடுகள் குறித்து எந்தவித ஐயப்பாடும் எழுப்பப்படவில்லை.

2019-ல் நடைபெற்ற குரூப்-1 தேர்வின் முடிவின்படி 181 பேர்களில் 150 பேர் ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்தவர்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இது தேர்வாணையத்தின் மாண்பைக் குலைக்கும் செயல்.
டிஎன்பிஎஸ்சி செயலாளர்

தற்போது நடந்து முடிந்துள்ள ஒருங்கிணைந்த பொறியாளர் பணித் தேர்வு முடிவுகளில் அடுத்தடுத்த பதிவெண்களைக் கொண்ட தேர்வர்கள் தஞ்சாவூர் தேர்வு மையத்திலிருந்து தேர்ச்சி பெற்றுள்ளதாகத் தகவல் வெளியானது. அதுதொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. செய்திகளில் வெளிவந்த பதிவெண்கள் அனைத்தும் வேளாண் பொறியியல் தேர்வு தொடர்புடையதாகும். இத்தேர்வில் அரசு விதிமுறைகளின்படி இளநிலைப் பொறியாளர் பதவி (வேளாண் பொறியியல்) வேளாண் பொறியியல் படித்த மாணவர்களுக்கான முன்னூரிமைப் பதவியாகும்.

வேளாண் பொறியியல் படித்த தகுதியான தேர்வர்கள் இல்லாத பட்சத்தில் மட்டுமே இதர பொறியியல் படித்தவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும். ஆகையால், இத்தேர்வு முடிவுகளில் மற்ற பொறியியல் படித்த தேர்வர்களைக் காட்டிலும் குறைந்த மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் வேளாண் பொறியியல் படித்த தேர்வர்கள் அதிகளவில் இடம் பெற்றுள்ளனர். இதில் எந்தவித தவறுகளும் நடைபெறவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி அலுவலகம்
டி.என்.பி.எஸ்.சி அலுவலகம்

2019-ல் நடைபெற்ற குரூப்-1 தேர்வின் முடிவின்படி 181 பேர்களில் 150 பேர் ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்தவர்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இது தேர்வாணையத்தின் மாண்பைக் குலைக்கும் செயல். இருப்பினும் இதுதொடர்பாக நடந்த ஆய்வில் எந்தவித தவறும் நடைபெறவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இத்தேர்வு முடிவுகள் வெளிவந்த ஒருவார காலத்துக்குள் ஒரே தேர்வாளரை ஒன்றுக்கும் மேற்பட்ட பயிற்சி மையங்கள் உரிமைகோரும் போக்கு உள்ளது.

மேற்கூறிய அனைத்திலும் முறையான புகார்கள் எதுவும் பெறப்படாமல் ஊடகங்களில் வெளியான செய்திகள் அடிப்படையில் தேர்வாணையம் விசாரணை செய்து தகுந்த முகாந்திரம் இருந்த தேர்வுகள் குறித்து விசாரிக்க ஆவண செய்துள்ளது. இனிவரும் காலங்களில் குறிப்பிட்ட புகார்கள், செய்திகள் தேர்வாணையத்தின் கவனத்துக்கு வரும்போது அது எவ்வளவு சிறியதாக இருப்பினும் தாமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்வதுடன் வெளிப்படையான ஆய்வுகள் மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதில் தேர்வாணையம் உறுதியாக உள்ளது.

`யார் இந்த எஸ்.ஐ சித்தாண்டி?' - டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் அதிர்ச்சி கொடுத்த 5 நிபந்தனைகள்

தேர்வர்களும் சமூக பொறுப்பை உணர்ந்து நேர்மையான வழிகளில் மட்டுமே தேர்வை எதிர்கொள்ளுமாறு எந்தவித முறைகேடுகளுக்கும் துணைபோகாமல் இருக்கும்படியும் இடைத்தரகர்களை நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், முறைகேடு குறித்த தகவல்கள் தெரியவரும்போது தேர்வாணையத்தின் கவனத்துக்கு உடனடியாக கொண்டுவரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பல்வேறு ஊடகங்களில் யூகங்களின் அடிப்படையில் வரும் சில செய்திகளைக் கண்டு அச்சமடையாமல் தேர்வாணையத்தின் ஒளிவு மறைவற்ற நடவடிக்கைகள் மீது முழு நம்பிக்கை வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இனிவரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் மட்டுமின்றி வேறு எந்தத் தவறும் நிகாழவண்ணம் இருக்க தகுந்த சீர்திருத்த நடவடிக்கைகள் விரைவாக எடுக்கப்படும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.

பின் செல்ல