Published:Updated:

`கழுதைகளில் சென்ற பொங்கல் பரிசு!’- நெக்னாமலைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அதிகாரிகள்

கழுதைகளில் சென்ற பொங்கல் பரிசு
கழுதைகளில் சென்ற பொங்கல் பரிசு

வாணியம்பாடி அருகே 1,500 மீட்டர் உயரத்தில் உள்ள மலை கிராமத்துக்கு கழுதைகள் மூலம் பொங்கல் பரிசுப் பொருள்களை சுமந்துசென்று அதிகாரிகள் வழங்கியது, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் தரை மட்டத்திலிருந்து சுமார் 4 கிலோ மீட்டர் மலை உச்சியில் `நெக்னாமலை’ என்ற கிராமம் அமைந்திருக்கிறது. 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகிறார்கள். இவர்கள் அனைவருமே விவசாயத்தையும் கால்நடை வளர்ப்பையும்தான் பிரதான தொழிலாகக் கொண்டுள்ளனர். இந்த மலை கிராமத்துக்கு சாலை வசதி ஏற்படுத்தித் தராததால், அங்கு வசிக்கும் மக்கள் சிரமமடைகிறார்கள்.

நெக்னாமலை கிராமம்
நெக்னாமலை கிராமம்

மலையிலிருந்து மழைநீர் வழிந்தோடும் பாதையைத்தான் (கணவாய்) அந்த மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். பெண்களுக்குப் பிரசவ வலி ஏற்பட்டாலும் யாருக்காவது உடல்நிலை பாதிக்கப்பட்டாலும் டோலி கட்டி மலை அடிவாரத்துக்குத் தூக்கிவர வேண்டும். அங்கிருந்துதான் வாணியம்பாடி அல்லது ஆலங்காயம் மருத்துவமனைக்கு வாகனம் மூலம் அழைத்துச்செல்கிறார்கள். மலையிலிருந்து இறங்கி ஏறுவதற்கே சுமார் 5 மணி நேரம் ஆகிறது.

இதனால், டோலி கட்டி தூக்கி வரப்படும் நோயாளிகள், கர்ப்பிணிப் பெண்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. சில நேரங்களில் உயிரிழப்புகளும் நடந்திருக்கின்றன. அப்படி இறப்பவர்களின் உடல்களையும் டோலி கட்டிதான் மலை உச்சிக்கு தூக்கிச் செல்கிறார்கள். இந்த நிலையில், நெக்னாமலை கிராமத்தைச் சேர்ந்த முனிசாமி (25) என்ற இளைஞர், கோவையில் கடந்த மாதம் 9-ம் தேதி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன் அருள்
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன் அருள்

அவரின் சடலம் 10-ம் தேதி இரவு நெக்னாமலை அடிவாரத்துக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தீப்பந்த வெளிச்சத்தில், மூங்கில் கம்பில் டோலி கட்டி சடலத்தைச் சுமந்துகொண்டு மலை கிராமத்தைச் சென்றடைவதற்குள் விடிந்துவிட்டது. இந்தச் சம்பவம் ஊடகங்களில் செய்தியாக வெளியாகி பல தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதையடுத்து, திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன் அருள் நெக்னாமலை மீது ஏறிச்சென்று மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார். `விரைவில் சாலை வசதி அமைத்துத் தரப்படும்’ என்று உத்தரவாதம் கொடுத்து அதற்கான முயற்சிகளையும் தீவிரமாக எடுத்துவருகிறார். இந்த நிலையில், பொங்கல் பண்டியையொட்டி, தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பையும் ரூ.1,000 மற்றும் வேட்டி சேலையையும் மலைவாழ் மக்களின் இருப்பிடத்துக்கே சென்று வழங்க கலெக்டர் முடிவு செய்தார்.

கழுதைகளில் சென்ற பொங்கல் பரிசு
கழுதைகளில் சென்ற பொங்கல் பரிசு

அதன்படி, வாணியம்பாடி தாசில்தார் சிவப்பிரகாசம் தலைமையிலான அலுவலர்கள் 14 மூட்டைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு பொருள்களைக் கட்டி 14 கழுதைகள் மீது ஏற்றி நெக்னாமலைக்குக் கொண்டு சென்றனர். ஓட்டு கேட்க மட்டுமே எட்டிப்பார்க்கும் அரசியல்வாதிகள் மத்தியில் சிரமத்தைப் பற்றிக் கவலைப்படாமல் மலை மீது ஏறிவந்த அதிகாரிகளுக்கும் அதற்குக் காரணமான கலெக்டர் சிவன் அருளுக்கும் நெக்னாமலை மக்கள் நன்றி தெரிவித்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு