Published:Updated:

மெரினா: ``இருப்பது ஒரேயொரு கழிவறை, அதுவும் இந்த நிலையில்..!" - முகம் சுளிக்கும் பொதுமக்கள்

மெரினா

வார நாள்களில் ஆயிரக்கணக்கான மக்கள் மெரினா கடற்கரைக்கு வந்து செல்லும் நிலையில், இந்தப் பகுதியில் ஒரே ஒரு கழிவறை இருப்பதால் மக்கள் பல சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

மெரினா: ``இருப்பது ஒரேயொரு கழிவறை, அதுவும் இந்த நிலையில்..!" - முகம் சுளிக்கும் பொதுமக்கள்

வார நாள்களில் ஆயிரக்கணக்கான மக்கள் மெரினா கடற்கரைக்கு வந்து செல்லும் நிலையில், இந்தப் பகுதியில் ஒரே ஒரு கழிவறை இருப்பதால் மக்கள் பல சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

Published:Updated:
மெரினா

உலகின் இரண்டாவது பெரிய கடற்கரையாகவும், சென்னை மாநகரின் மிக முக்கிய சுற்றுலாத்தலமாகவும் மெரினா கடற்கரை விளங்கி வருகிறது. மெரினா கடற்கரையில் கழிவறை பிரச்னை என்பது நீண்ட நாள்களாகவே இருந்து வருகிறது.

மெரினா கடற்கரைக்குள் வருவதற்கு பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்தும் பிரதான பாதையாக இருப்பது உழைப்பாளர் சிலை அருகில் இருக்கும் பாதைதான். இந்தப் பகுதியில் அதிகமான கடைகளும், தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்களின் நினைவிடங்களும் இருப்பதால் இங்கேதான் எப்போதும் கூட்டம் அலைமோதும். இப்படி மக்கள் அதிகமாக கூடும் இடத்தில், ஒர் இலவச அரசு கழிப்பிடம்தான் இருக்கிறது. வார நாள்களில் ஆயிரக்கணக்கான மக்கள் மெரினா கடற்கரைக்கு வந்து செல்லும் நிலையில், இந்தப் பகுதியில் ஒரே ஒரு கழிவறை இருப்பதால் பல சிரமங்களை சந்தித்து வருவதாக அந்தப் பகுதியில் இருக்கும் வியாபாரிகள், சுற்றுலாப் பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

மெரினா
மெரினா

அந்தக் கழிவறையில் ஆண்களுக்கு ஐந்து அறைகளும், பெண்களுக்கு ஐந்து அறைகளும்தான் இருக்கின்றன. அதிலும் சில கழிவறைகள் சேதமடைந்து காணப்படுகின்றன. மேலும் வெளியே இருக்கும் வாஸ்பேஷன், அதிலிருக்கும் தண்ணீர் குழாய்கள் என அனைத்தும் உடைந்த நிலையில் காணப்படுகின்றன. பொதுவாகவே இங்கு தண்ணீர் வருவதிலும் பிரச்னை இருக்கிறது.

இந்தக் கழிவறையில் கழிவு நீரை வெளியேற்றுவதற்கு செப்டிக் டேங்க் முறையே பயன்படுத்தப்படுகிறது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் இந்தக் கழிவறையைப் பயன்படுத்துவதால், அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் வெளியே உள்ள சாலைக்கு வந்து தேங்கி விடுவதாக மக்கள் குற்றம்சாட்டிவருகின்றனர். இதனால் கழிவறைக்கு அருகாமையில் கடை வைத்திருக்கும் வியாபாரிகள் தொடர்ந்து பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாகச் சொல்லப்படுகிறது.

இப்படி அதிக அளவில் மக்கள் பயன்படுத்தும் கழிவறையை சுத்தம் செய்வதற்கும், பராமரிப்பதற்கும் ஓர் ஆண், ஒரு பெண் என மொத்தமே இரண்டு பேர்தான் இருக்கின்றனர். அவர்களுக்கும் கழிவறைகளை சுத்தம் செய்வதற்கு போதிய உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை எனக் கூறப்படுகிறது. பொதுமக்கள் கடற்கரையில் விளையாடிவிட்டு, கடல் மண்ணோடு கழிவறைக்குள் வருவதால், ஒரு நாளைக்கு பலமுறை கழிவறைகளில் மண்ணடைப்பு ஏற்படுவதாக கவலை தெரிவிக்கின்றனர் தூய்மைப் பணியாளர்கள். மேலும், அந்தக் கழிவுகளை தங்களுடைய கைகளாலேயே அள்ளி சுத்தம் செய்வதாகக் கூறுகின்றனர். இதனாலேயே கூட்டம் அதிகமாக அலைமோதும் நேரங்களில் இந்தக் கழிவறைகள் அதன் பராமரிப்பாளர்களால் மூடி வைக்கப்படுகின்றன என்கிறார்கள் வியாபாரிகளும், பொதுமக்களும்.

கழிவறை
கழிவறை

இது குறித்து அங்கிருந்த வியாபாரிகளிடம் கேட்டபோது, "மக்கள் அதிகமா வருவதால், இந்தக் கழிவறை அடிக்கடி அடைச்சுக்குது. கழிவறையை பராமரிக்குறவங்களும் பாவம்... காலையிலயும், மத்தியானமும் தங்கள் கையாலேயே அடைப்பெடுத்து கழுவி விடுறாங்க. அடிக்கடி இந்த செப்டிக் டேங்க் அடைச்சுகிறதால ரோட்டுல பாதி வரைக்கும் கழிவு நீர் வந்துடுது. இந்தக் கழிவறைக்கு ரொம்ப பக்கத்துலதான் எங்க கடைகள் எல்லாம் இருக்குது. அதுனால ரொம்ப துர்நாற்றம் வீசுது. சுகாதாரமில்லாத நிலையிலதான், நாங்க வியாபாரம் செய்ய வேண்டியதா இருக்கு.

அண்ணா, எம்.ஜி.ஆர் சமாதிகளுக்கு பக்கத்துல இருக்குற கழிவறைகளையும் மூடி வெச்சிருக்காங்க. அதனால, இந்தக் கழிவறைய மட்டுமே பயன்படுத்த வேண்டியிருக்குது" என்றார்.

கழிவறைக்கு அருகில் கடை வைத்திருக்கக் கூடிய பெண் வியாபாரி ஒருவர் நம்மிடம் பேசுகையில், ``பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தக்கூடிய கழிவறைகளை அடிக்கடி சுத்தம் செய்து பராமரிக்க வேண்டியது மிக அவசியம். ஆனா, இந்தக் கழிவறை சுத்தம் செய்யப்பட்டு பல மாதங்கள் ஆகுது. அது மட்டுமல்லாமல் இந்தக் கழிவறைல செப்டிக் டேங்க் சிஸ்டம் இருக்குறதுனால, அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் எல்லாம் வெளிய வந்திடுது. இது தொடர்பா யாராவது புகார் செஞ்சா, அந்த நேரத்துக்கு கழிவு நீரை அகற்றி நடவடிக்கை எடுப்பாங்க. ஆனா, அடுத்த நாள் நிலைமை பழையபடி மாறிடும்.

மெரினா
மெரினா

நோய்கள் பரவல் அதிகமா இருக்குற இந்தக் காலத்துல, பொதுமக்கள் பயன்படுத்தக் கூடிய கழிவறை இப்படி இருக்குறது அச்சத்தை ஏற்படுத்துது. அதனால, அரசு அதிகாரிகள் உடனடியா கூடுதலாக கழிவறைகள் திறந்து, இந்தக் கழிவறையை சுத்தம் செய்து நல்ல முறையில் பராமரிக்க வேண்டும்னு கேட்டுக்குறோம்" என்றனர்.

சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் குவியும் மெரினா கடற்கரையில் கழிவறைகள் தேவையான அளவிலும், சுத்தமாகவும் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். இந்த சுகாதார சிக்கலுக்கு தீர்வு காண்பார்களா அதிகாரிகள்?