நீலகிரியிலுள்ள சுற்றுலா தலங்களில் பயணிகள் அதிகம் கூடும் சுற்றுலா தலமாக, ஊட்டியிலுள்ள அரசு தாவரவியல் பூங்கா விளங்கி வருகிறது. பல்வேறு வகையான மரங்கள், புல்வெளிகள், லட்சக்கணக்கான பூக்கள் நிறைந்த இந்தப் பூங்காவில் அதிக அளவில் தேனீக்கள் கூடமைப்பது இயல்பான ஒன்றுதான். சில சமயங்களில் தேன்கூடு கலைந்து சுற்றுலாப் பயணிகளையும், பூங்கா பணியாளர்களையும் தேனீக்கள் கொட்டும் சம்பவங்களும் நடைபெறும்.

இந்த நிலையில், பூங்கா வளாகத்திலிருந்த தேன்கூடு ஒன்று கலைந்து தேனீக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறியிருக்கின்றன. பூங்காவைக் கண்டு ரசித்துக் கொண்டிருந்தவர்களை தேனீக்கள் கொட்டத் தொடங்கியிருக்கின்றன. அலறித் துடித்த சுற்றுலாப் பயணிகள் அங்கும் இங்கும் ஓடியிருக்கின்றனர். மேலும், பூங்கா கிணற்றில் குதித்துத் தப்பிக்க முயன்றிருக்கின்றனர். இதைக் கண்ட பூங்கா நிர்வாகத்தினர் உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவித்திருக்கின்றனர். விரைந்து வந்த ஆம்புலன்ஸ் பணியாளர்கள், தேனீக்கள் கொட்டியதில் பாதிப்படைந்த சுற்றுலாப் பயணிகளை மீட்டு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய பூங்கா அதிகாரிகள், ``தேனீக்கள் கொட்டியதில் காயமடைந்த 15-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம்.

பலத்த காயமடைந்த 10-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கேரள மாநிலம், குறுக்குஞ்சேரி பகுதியிலுள்ள கல்லூரியிலிருந்து சுற்றுலா வந்திருக்கின்றனர். தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்" என்றனர்.