Published:Updated:

`தெற்காசியாவின் மிகப்பெரிய தோட்டம்!'- சர்வதேச ரோஜா தினத்தைக் கண்டுகொள்ளாத ஊட்டி அதிகாரிகள்

உயிர் வருத்தும் கொடிய புற்று நோயால் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுமி மெலிண்டாவின் கடைசி ஆறு மாத நம்பிக்கையின் அடையாளமாக செப்டம்பர் 22 சர்வதேச ரோஜா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

Ooty Rose Garden
Ooty Rose Garden ( Arun.K )

மலருக்கு மயங்காத மனமே இல்லை என்பார்கள். அதுவும் ரோஜாக்களுக்கு மக்கள் மத்தியில் தனி மவுசு உண்டு. Rosaceae என்ற அறிவியல் பெயர்கொண்ட இந்த மலர்களுக்கு சீசன் என்பதே கிடையாது. ஆண்டு முழுவதும் பூக்கும் தன்மை கொண்டது. அன்பின் குறியீடாக உள்ள இந்த ரோஜா மலருக்கு தனிப் பூங்கா அமைக்கும் நோக்கில் மணி மகுடமாய் ரோஜா பூங்கா ஒன்று அமைக்கப்பட்டது.

Ooty Rose Garden [ green rose]
Ooty Rose Garden [ green rose]

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் இயங்கிவரும் ஊட்டி ரோஜா பூங்கா ஆசியாவில் உள்ள ரோஜா பூங்காக்களில் மிகவும் சிறப்புவாய்ந்த பூங்காவாக உள்ளது. தெற்காசியாவில் மிகப்பெரிய ரோஜா பூங்கா ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா. இந்தப் பூங்கா நூற்றாண்டு நினைவாக கடந்த 1995-ம் ஆண்டு ஊட்டி விஜயநகர் பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் படிமட்ட முறையில் முழுக்க முழுக்க ரோஜா நாற்றுகளைக் கொண்டு பிரமாண்ட பூங்கா நிறுவப்பட்டது.

இந்தப் பூங்காவில் அரியவகை பச்சை ரோஜா முதல் பல்வேறு வண்ணங்களில் சிறியதும் பெரியதுமாக 4,100 ரகங்களில், 29,000 ரோஜா செடிகள் உள்ளன. ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் முதல் தேர்வாக அரசு தாவரவியல் பூங்காவும் அதற்கு அடுத்ததாக ரோஜா பூங்காவும் இருந்துவருகிறது.

Ooty Rose Garden
Ooty Rose Garden

மேலும், ஆண்டுதோறும் கோடை சீசனில் நடத்தப்படும் ரோஜா கண்காட்சியைக் காண வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். உலக அளவிலும் ஆசிய அளவிலும் சிறந்த ரோஜா பூங்காவுக்கான விருதுகளை ஊட்டி ரோஜா பூங்கா பெற்றுள்ளது. இது மட்டுமல்லாது ஒவ்வொரு ரோஜாவின் பெயர் மற்றும் அதன் சிறப்பு குறித்து பதாகை வைக்கப்பட்டுள்ளன.

மேலும், ரோஜா மலர்கள் குறித்து எழுதப்பட்டுள்ள கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. ஆசிய அளவில் சிறப்புவாய்ந்த ரோஜா பூங்காவில் சர்வதேச ரோஜா தினம்கூட கடைப்பிடிக்கப்படாதது சுற்றுலா ஆர்வலர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Ooty Rose Garden
Ooty Rose Garden

இது குறித்து சுற்றுலா வழிகாட்டி ஜான் கூறுகையில், ``புற்றுநோய் பாதிப்பில் இறந்த கனடா நாட்டு சிறுமி மெலிண்டாவின் நினைவாய் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 22-ம் தேதி சர்வதேச ரோஜா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. ரோஜா மலர்களுக்கு சிறப்புவாய்ந்த ஊட்டி ரோஜா பூங்காவில் ரோஜா தினம் கடைப்பிடிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது" என்றார்.

இது குறித்து சென்னையைச் சேர்ந்த சுற்றுலாப்பயணி ஒருவர் கூறுகையில், ``இந்தியாவில் இப்படி ஒரு ரோஜா பூங்கா இருப்பது பெருமையாக உள்ளது. ஒரே இடத்தில் இத்தனை வகைகளில் ரோஜாக்களைப் பார்க்க முடியாது. இதுபோன்று ரோஜா தினங்களைக் கொண்டாடுவதன் மூலம் ரோஜாக்கள் குறித்து மக்கள் அறிந்துகொள்ள வாய்ப்பாக அமையும். மேலும், சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவார்கள்'' என்றார்.

Ooty Rose Garden
Ooty Rose Garden

இது குறித்து தோட்டக்கலைதுறை அதிகாரிகளிடம் கேட்டபோது ``இதுவரை இந்தப் பூங்காவில் ரோஜா தினம் கொண்டாடப்படவில்லை. இனி வரும் ஆண்டுகளில் கொண்டாடப்படுவது பற்றி முடிவு எடுக்கப்படும்" என்றனர்.