Published:Updated:

ஒரே ஒரு போன்கால்... பதறிய அதிகாரிகள்... அகற்றப்பட்ட பேனர்கள்... கரூரில் கலக்கிய டிராஃபிக் ராமசாமி

துரை.வேம்பையன்
நா.ராஜமுருகன்

டிராஃபிக் ராமசாமி, "டிஜிட்டல் பேனர்களை அகற்றினால் மட்டும் போதாது. அதற்காக ஊன்றப்பட்டுள்ள கம்புகள் ஒன்றையும் விடாமல் அப்புறப்படுத்த வேண்டும்" என்று கறார் காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

போக்குவரத்தைச் சரிசெய்யும் டிராஃபிக் ராமசாமி
போக்குவரத்தைச் சரிசெய்யும் டிராஃபிக் ராமசாமி ( நா.ராஜமுருகன் )

கரூரில் நான்கு நாள்களாக முகாமிட்டுள்ள டிராஃபிக் ராமசாமி, கரூர் பேருந்துநிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர்களை அகற்ற வலியுறுத்தினார். அதன்படி, பேனர்கள் அகற்றப்பட்டாலும், விடாத டிராஃபிக் ராமசாமி, "டிஜிட்டல் பேனர்களை அகற்றினால் மட்டும் போதாது. அதற்காக ஊன்றப்பட்டுள்ள கம்புகளையும் ஒன்றுவிடாமல் அப்புறப்படுத்த வேண்டும்" என்று கறார் காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வீடியோ எடுக்கும் டிராஃபிக் ராமசாமி
வீடியோ எடுக்கும் டிராஃபிக் ராமசாமி
நா.ராஜமுருகன்

கரூருக்கு ஜாஃபர் என்பவர் இயக்கும் தனது பயோகிராபிக் குறும்படத்தில் நடிக்க கரூருக்கு வருகைதந்துள்ளார் டிராஃபிக் ராமசாமி. கடந்த நான்கு நாள்களாகக் கரூரில் தங்கியுள்ளார் அவர். இந்நிலையில், கரூருக்கு வருகைதந்த மறுநாளே, கரூர் பேருந்துநிலையம் அருகே அமைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர்கள் அனைத்தையும் அகற்ற வலியுறுத்தி, வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகளுக்கு போன்மூலம் தகவல் தெரிவித்தார். இதனால், பதறிய நகராட்சி அதிகாரிகள், ஊழியர்களை அனுப்பி, ஒரு பேனர்விடாமல் எல்லாவற்றையும் அப்புறப்படுத்திவிட்டு, 'அப்பாடா' என்று பெருமூச்சுவிட்டனர்.

ஆனால், டிராஃபிக் ராமசாமியோ, அதோடு திருப்தியாகவில்லை. அங்கிருந்து மறுபடியும் மேற்படி அதிகாரிகள் அனைவருக்கும் போனை போட்டு, "டிஜிட்டல் பேனர்களை அப்புறப்படுத்திவிட்டீர்கள். மகிழ்ச்சி. ஆனால், அந்த டிஜிட்டல் பேனர்களை தாங்கிநின்ற கம்புகளை யார் அகற்றுவது? வெறுமனே டிஜிட்டல் பேனர்களை அகற்றினால், போதுமா. இப்படி நிற்கும் கம்புகள், உடைந்து விழுந்து, கீழே செல்வோரின் உயிருக்கு ஆபத்து விளைவித்தால், அதற்கு நீங்கள் பொறுப்பேற்றுக்கொள்கிறீர்களா?

லாரியில் ஏற்றப்படும் கம்புகள்
லாரியில் ஏற்றப்படும் கம்புகள்
நா.ராஜமுருகன்

தவிர, நான் கரூரைவிட்டு நகர்ந்ததும், மறுபடியும் அரசியல் கட்சிகள், இப்படி நிற்கும் கம்புகளில் எளிதாக டிஜிட்டல் பேனர்களைக் கட்டிவிடுவார்களே. அதற்கு நீங்களே வழிவகுக்கிறீர்களா. உடனே, டிஜிட்டல் பேனர்களைத் தாங்கி நின்ற அத்தனை கம்புகளையும் ஒன்றுவிடாமல் அப்புறப்படுத்த வேண்டும். இல்லைன்னா, உங்க அத்தனை பேர்மீதும் கேஸ் போடுவேன். கோர்ட்டு, கேஸ் என்று அலையவைப்பேன். சம்மதமா?" என்று எகிறினார்.

Vikatan

இதனால், பதறிப்போன அதிகாரிகள், "உடனே கம்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கிறோம்" என்று போனை வைத்தனர். உடனே, கரூர் நகராட்சி ஊழியர்களை அனுப்பி, எல்லா கம்புகளையும் பிடுங்கி, லாரியில் ஏற்ற வைத்தனர். அதை நேரில் வந்து பார்வையிட்ட டிராஃபிக் ராமசாமி, ஊழியர்களை அதட்டி வேலைவாங்கினார்; கம்புகள் அப்புறப்படுத்தபடுவதை தனது செல்போனில் வீடியோ எடுத்தார். அதோடு, முக்கியமான போக்குவரத்து நிறைந்த பகுதி என்பதால், டிராஃபிக் பிரச்னை வர, தானே டிராஃபிக் போலீஸ் மாதிரி களத்தில் குதித்து, போக்குவரத்தை சரிசெய்தார்.

வீடியோ எடுக்கும் டிராஃபிக் ராமசாமி
வீடியோ எடுக்கும் டிராஃபிக் ராமசாமி
நா.ராஜமுருகன்

பாதுகாப்புக்காகக் காவலர்களும் அங்கே இருந்தனர். ஊழியர்கள் வேர்க்கவிறுவிறுக்க எல்லா கம்புகளையும் ஒருவழியாக அகற்றி முடித்து லாரியில் ஏற்ற, எங்கேனும் கம்புகள் இருக்கிறதா என்று பார்வையிட்டு, 'இல்லை' என்று உறுதிசெய்த பின்னரே, டிராஃபிக் ராமசாமி அங்கிருந்து நகர்ந்தார். "இங்கே வைக்கப்பட்டிருக்கும் ஃப்ளெக்ஸ்கள் எப்போ எங்க தலையில் விழும்னு பயந்துகிட்டே பயணிப்போம். டிராஃபிக் ராமசாமி சார் புண்ணியத்துல இனி பயமில்லாமல் பயணிப்போம். அரசியல்வாதியின் இந்த டிஜிட்டல் பேனர் வைக்கும் கொட்டத்தை அடக்க இவர் ஒருவராவது இருக்கிறாரே?" என்று பொதுமக்களில் சிலர் சிலாகித்து பேசிக்கொண்டனர்.