Published:Updated:

``கௌரவமா வாழணும்னு நினைக்கிறேன்..!’’ - கொரோனா மையத்தில் பணிபுரியும் திருநங்கை கலைவாணி

திருநங்கை கலைவாணி

``கௌரவமா வாழணும்னு நினைக்கிற திருநங்கை நான். எதுவும் பெருசா கேட்கலை... ஒரு நிரந்தரமான வேலை வேணும். நான் இப்போது செய்யும் வேலையையே மருத்துவமனைகள்ல எனக்கு நிரந்தரமாக கொடுத்தா போதும். நோயாளிகளுக்கு என் மனதாரப் பணிவிடை செய்வேன்” என்கிறார் திருநங்கை கலைவாணி.

``கௌரவமா வாழணும்னு நினைக்கிறேன்..!’’ - கொரோனா மையத்தில் பணிபுரியும் திருநங்கை கலைவாணி

``கௌரவமா வாழணும்னு நினைக்கிற திருநங்கை நான். எதுவும் பெருசா கேட்கலை... ஒரு நிரந்தரமான வேலை வேணும். நான் இப்போது செய்யும் வேலையையே மருத்துவமனைகள்ல எனக்கு நிரந்தரமாக கொடுத்தா போதும். நோயாளிகளுக்கு என் மனதாரப் பணிவிடை செய்வேன்” என்கிறார் திருநங்கை கலைவாணி.

Published:Updated:
திருநங்கை கலைவாணி

கொரோனா என்னும் வைரஸ் பரவலின் தொடக்கத்தில் உலகமே வீட்டினுள் முடங்கியது. ஒரு பக்கம் வைரஸ் தொடர்பான பயம். நெருங்கிய சொந்த பந்தமாக இருந்தாலும், அறிகுறிகள் இருந்தால், நெருங்கவே பயம். மற்றொரு பக்கம் லாக்டெளன் தரும் வேதனை. லாக்டெளனால் ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கல்களால் உயிரிழந்தவர்களும் அதிகம். ஆனால் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களோ தங்கள் உயிரைப் பணயம் வைத்து பிறர் உயிரைக் காக்கின்றனர்.

கொரோனா நம்மில் பலரின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிட்டது எனலாம். அதிலும் குறிப்பாக இந்த லாக்டெளன். சாமானியர்களுக்கும் ஏழை மக்களுக்கும் இது ஒரு போதாத காலமாகத்தான் இருக்கிறது. அன்றாடம் வேலைக்குச் சென்று, பொருளீட்டி, கஞ்சி குடிக்கும் ஒவ்வொரு சாமானியன் குடும்பத்தின் வயிற்றிலும் அடித்தது கொரோனா. ``ஊரடங்கு போட்டால் ஊர் அடங்கிவிடும். வயிற்றுப் பசி அடங்குமா?" இந்த இரண்டு வருடங்களில் முதல் அலை, இரண்டாம் அலை, மூன்றாம் அலை என அடுத்தடுத்து அவதரித்து, பலரின் வாழ்வையே மாற்றி அமைத்தது கொரோனா. அப்படி கொரோனாவால் தன் வாழ்வே திசைமாறிய ஒருவரின் கதைதான் இது.

திருநங்கை கலைவாணி
திருநங்கை கலைவாணி

சமீபத்தில் நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை டிரேட் சென்டரில் இருக்கும், கொரோனா நோயாளிகளுக்கு ஒருவர் அன்பாகப் பணிவிடை செய்துகொண்டிருந்த காட்சியைக் கண்டோம். அவர், அங்கு ஹவுஸ்கீப்பிங் பணிகள் செய்யும் ஊழியர். அவர் ஒரு திருநங்கை. சென்னை மந்தைவெளியில் உள்ள வன்னையம்பதி ஹவுஸிங் போர்டில் வசிக்கிறார் திருநங்கை கலைவாணி (31). இவருக்கு ஒரே ஒரு சகோதரி ரஞ்சனி. (ரஞ்சனியும் கலைவாணியும் சிறுவயதிலிருந்து தோழிகளாகப் பழகியவர்கள்) ஒன்றாக வசித்துவந்தனர்.

ரஞ்சனிக்கு புற்றுநோய் பாதிப்பு. கலைவாணிதான் தினமும் வருவாய் ஈட்டி, தன் சகோதரியான ரஞ்சனியை கவனித்துக்கொண்டிருந்தார். இப்படி ஓடிக்கொண்டிருந்த இவர்களின் வாழ்க்கையில் பெருங் கடலின் அலைபோல் வந்தது கொரோனா. ஊரெங்கும் கொரோனா தொற்று பெருமளவில் பரவத் தொடங்க, முழு ஊரடங்கை அமல்படுத்தியது அரசாங்கம். திருநங்கை கலைவாணியின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. அன்றாடக் கஞ்சிக்கு அல்லாடும் நிலை, நோயுற்ற சகோதரிக்கு மருந்து வாங்கவும் கையில் காசு இல்லை. இவ்வாறு கலைவாணியின் நிலை இருக்க, துக்கத்தைப் பன்மடங்கு அதிகரித்தது சகோதரி ரஞ்சனியின் மரணம். அவருக்கு ஈமச்சடங்கு செய்வதற்குக்கூட போதிய பணம் கையில் இல்லை. பெரும்பாடுபட்டு செய்து முடித்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையிலிருந்து தற்போதுள்ள நிலைக்கு அவர் மாறியது எப்படி என்று அவரிடம் கேட்டபோது, ``என் சகோதரி மரணத்துக்குப் பிறகு மிகவும் கஷ்டப்பட்டேன். ஒரு வேளை சோற்றுக்குக்கூட வழியில்லாத நிலை. லாக்டெளன் என்பதால் கடைகளும் மூடிக்கிடந்தன. யாரிடமும் பணமும் கேட்டுச் செல்ல முடியவில்லை. அப்போதுதான் அக்கம் பக்கத்தினர் சிலரின் மூலமாக கான்ட்ராக்ட் வேலைகளுக்கு ஆள் எடுக்கும் நிறுவனம் மூலம் ஹவுஸ்கீப்பிங் வேலையில மாசம் பத்தாயிரம் சம்பளத்துக்கு 2020-ல் சேர்ந்தேன். முதல் டியூட்டி கொரோனா டியூட்டி, குரு நானக் காலேஜ்ல போட்டாங்க.

இவ்வளவு கொரோனா நோயாளிகளுக்கு மத்தியில நாம வேலை செய்யறோம்கற பயமோ, தயக்கமோ எனக்குச் சுத்தமா இல்லை. அந்த நேரத்தில என் கஷ்டம் மட்டும்தான் என் கண்ணுக்குத் தெரிஞ்சுது. இந்த மாதிரி வேலையை வெறும் பணத்துக்காக மட்டுமே செய்ய முடியாது. சேவை மனப்பான்மை நிச்சயம் இருக்கணும். அங்கு இருந்த நோயாளிகளுக்கு முகம் சுளிக்காமல் பணிவிடை செய்தேன். கொரோனா நோயாளிகளுக்கு உணவு கொடுப்பது, பாத்ரூமுக்கு அழைத்துச் செல்வது, வயதானவர்களாக இருந்தா டயபர் மாற்றிவிடுவது, யூரின் பிடித்து ஊத்துவது என எல்லா வேலைகளும் செய்வேன். அங்கு பணிபுரிந்த மருத்துவர்கள் நர்ஸ்களிடமும் அன்பா பழகினேன். கொஞ்ச நாள்களிலேயே அங்க ஹவுஸ்கீப்பிங் செய்றவங்களுக்கு என்னை சூப்பர்வைசரா போட்டாங்க. ஆனாலும் அதே வேலை... அதே சம்பளம்தான். அடுத்து 2021-ல இரண்டாம் அலை வந்தபோது எனக்கு சென்னை டிரேட் சென்டரில் இருக்கிற நந்தம்பாக்கம் கோவிட் கேர் சென்டர்ல டூட்டி போட்டாங்க. இங்கு 300-க்கும் மேற்பட்ட படுக்கைகள் இருக்கு. ஷிஃப்ட் படி டூட்டி போடுவாங்க.

திருநங்கை கலைவாணி
திருநங்கை கலைவாணி

இங்கேயும் அதே பத்தாயிரம் ரூபாய் சம்பளத்துக்குத்தான் இப்போ வரை வேலை செய்யுறேன். கான்ட்ராக்ட் வேலைங்கறனால அஞ்சு மாசமோ, ஆறு மாசமோதான் வேலை இருக்கும். மத்த நாள்களில கஷ்டம்தான். கைதட்டிக் காசு வாங்காம, பாலியல் தொழில் செய்யாம, கௌரவமா வாழணும்னு நினைக்கிற திருநங்கை நான். எதுவும் பெருசா கேட்கலை... ஒரு நிரந்தரமான வேலை வேணும். நான் இப்போது செய்யும் வேலையையே மருத்துவமனைகள்ல எனக்கு நிரந்தரமாகக் கொடுத்தா போதும். நோயாளிகளுக்கு என் மனதார பணிவிடை செய்வேன்” என்று உருக்கத்துடன் கூறினார் திருநங்கை கலைவாணி.

மேலும், "என்னைப்போல் கௌரவமாக வாழ நினைக்கும் திருநங்கைகளுக்கு அரசாங்கமும் ஏதேனும் வழி செய்ய வேண்டும் அப்போதுதான் எங்கள் நிலை மாறும்" என ஏக்கம் கலந்த நம்பிக்கையுடன் கூறினார் கலைவாணி. எவ்வளவோ கஷ்டங்களையெல்லாம் நமக்கு கொரோனா கொடுத்திருந்தாலும் பல பாடங்களையும் கற்றுத்தந்திருக்கிறது என்பது மறுக்க முடியாத ஒன்று. கலைவாணியைப்போல் மாற்றத்தை எதிர்பார்த்துப் போராடிவரும் பலரின் கதைகள் வெளியேகூட தெரிவதில்லை. இவர்களின் நிலை மாற வேண்டும்; மாற்ற(ம்) வேண்டும்! மாற்றப்பட வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism