Published:Updated:

``வாடா மல்லி’ கதை கொடுத்த உந்துதல்!’ - `திருநங்கையர் நூலகம்’ குறித்து பிரியாபாபு

பிரியாபாபு
பிரியாபாபு

“ஆவணங்கள்தானே தோழர் எல்லாவற்றுக்கும் முக்கியத் தேவையா அமையிது. அதனாலதான் திருநங்கை குறித்த ஆவணங்களைத் தொகுத்து நூலகமா அமைச்சிருக்கேன்” - பிரியாபாபுவின் சிரிப்பில் அத்தனை மகிழ்ச்சி!

இரண்டாண்டுகளாகத் திருநங்கை ஆவண மையத்தை நடத்திவரும் பிரியாபாபுவை மதுரையில், அவர் வசிக்கும் வீட்டில் சந்தித்தோம். வீட்டின் வரவேற்பறையில், ‘திருநங்கையர் நூலகம்’ நம்மை இனிதே வரவேற்றது. 1990 முதல் தற்போதுவரை வெவ்வேறு காலகட்டங்களின் திருநங்கையர் குறித்த புத்தகப்பார்வைகள், ஆய்வுக்கட்டுரைகள், செய்திகள் எல்லாமே இங்கே வரலாறுகளாய், பரிணாம வளர்ச்சியின் அடையாளங்களாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ‘திருநங்கை’ என்ற சொல் திருத்தம் வரை சரித்திரம் தாங்கி நிற்கிறது, அந்த அறை!

பிரியாபாபு
பிரியாபாபு

திருநங்கையர் குறித்த பொதுப்புரிதலை இந்த நூலகம் எவ்வாறு மாற்றப்போகிறது என பிரியாபாபுவிடம் கேட்டபோது, “கல்வியும் வாசிப்பும்தான் சமூகத்தோட ஆதாரம். புதுத் தலைமுறையான மாணவர்களிடையே திருநங்கையர் குறித்த புரிதல் தெளிவை இந்த நூலகம் ஏற்படுத்துது. வெறுமனே அமைப்பா மட்டும் செயல்பட்டா மாணவர்களிடம் நெருங்க முடியாது. வாழ்க்கையில எப்போ திருநங்கையரைப் பார்த்தாலும் மாணவர்களுக்கு இந்த நூலகம் நினைவுக்கு வரும். அதுதான் இந்த முயற்சிக்கான பலன்” என்கிறார்.

அங்கே, சில மாணவிகள் புத்தகங்கள் வாசித்துக்கொண்டிருந்தனர். “இங்க வர்ற மாணவர்களிடம் நாங்க முதல்ல சொல்றது, ‘இந்த நூல்களையெல்லாம் படிங்க’ என்கிற வார்த்தைதான்” என்றவர், “வாசிப்புகள், ஆவணப்படங்கள், குறும்படங்கள் மூலம் மாணவர்களிடம் புரிதலை விதைக்கிறோம். இதை மறுமலர்ச்சியாகத்தான் நான் பார்க்கிறேன். சர்வதேச நிறுவனத்தில் வேலைபார்த்துட்டு இருக்கேன்.

அதில் கிடைக்கிற வருவாயை வெச்சுதான் இவற்றையெல்லாம் செய்றேன். சமூகப்பணி, ஆர்க்கிடெக்ட், பிசியாலஜி, சைக்காலஜி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மாணவர்கள் தங்களோட புராஜெக்ட் மற்றும் ஆய்வுகளுக்காக இங்கே வர்றாங்க. தங்களுக்கான ஆய்வுத்தலைப்புகள் குறித்தும் கலந்துரையாடுறாங்க. கல்விநிறுவனங்கள் பலவற்றுடனும் நாங்கள் நல்லுறவுகொண்டிருக்கோம். எங்களுக்கான சுதந்திரத்தை அந்த வளாகங்கள் வழங்குகின்றன. இதெல்லாம்தான் மாணவர்களிடம் நாங்க போய்ச்சேர வழிகொடுக்குது” என்றார்.

திருநங்கை
திருநங்கை

திருநங்கை பற்றிய அவருடைய முதல் வாசிப்புகுறித்துக் கூறுகையில், சற்றே உணர்ச்சிவசப்படுகிறார். “ரொம்ப வருஷத்துக்கு முன்ன, சு.சமுத்திரம் அய்யா எழுதிய ‘வாடா மல்லி’ கதையை ‘சிக்கிமுக்கி கற்கள்’ நூலில் வாசிச்சேன். திருநங்கை உணர்வை அப்படியே படம்பிடிச்சுக்காட்டியிருந்தார். அந்தக் கதைதான் எனது முதல் உந்துதல். அதை வாசிக்கும்போது என்னுடைய அப்பாவாக சமுத்திரம் அய்யா எனக்குள் தெரிந்தார். ‘அப்பா’ என்றழைத்தே அவருக்கு அப்போது ‘ஓர் அலிமகளின் கடிதம்’ எழுதி அனுப்பினேன். இந்த மாதிரி உணர்வுப் புரிதல்களை மாணவர்கள் பெறணும் என்பதுதான் நூலகத்தோட நோக்கமே” என்றார்.

சமூகப் பணித்துறை மாணவி ஜெனிஷா, ``ஒரு அவார்டு ஃபங்ஷன்ல பிரியாபாபு அம்மாவைப் பார்த்தேன். அப்புறம், என்னோட புராஜெக்ட் வொர்க் சம்பந்தமா இங்க வந்து படிக்க ஆரம்பிச்சிட்டேன். ஹோம்லி சூழலும் வெளிப்படைத்தன்மையும் இங்க இருக்கு. அதனால, என்னோட குடும்பம் பயமில்லாம அனுப்பிவைக்குது. வர்றதுக்கு முன்னாடி திருநங்கை குறித்த அச்சம் இருந்தது. அவர்களை அணுகுறது கஷ்டம். ரொம்ப பயங்கரமானவங்கன்னுலாம் நினைச்சிருந்தேன். இவர்களோட பழக்கமும், இந்தப் புத்தக வாசிப்புகளும் இப்போ அப்படியே மொத்தமா எண்ணத்தை மாத்திடுச்சு. திருநங்கைகள், ரொம்ப இனிமையானவங்க” என்றார்.

பிரியா
பிரியா

நிர்வாகி ஷாலினி, ``இந்த அமைப்பு தொடங்கினதிலிருந்து நான் இங்கே இருக்கேன். நூலகத்தைப் பராமரிக்கிறோம். நிறைய மாணவர்கள் வர்றாங்க, படிக்கிறாங்க, விவாதிக்கிறாங்க. தப்பான புரிதலோடு இங்க வந்து, தப்பைத் தெளிவுசெஞ்சுக்கிறாங்க” என்கிறார். இங்கே கணக்காளராக இருந்துவரும் 55 வயது ஜெயா, எல்லோருக்கும் பிடித்த அம்மாவாக உலா வருகிறார். ``பத்து வருஷமா பிரியாகூடத்தான் இருக்கேன். என் சிறுவயதில் என்னுடைய உறவினர் என்னை திருநங்கையா அடையாளம் கண்டுக்கிட்டாங்க. அதுபுரியாத எனக்குப் பாலின விளக்கத்தை எடுத்துச்சொல்ல, என் உறவுகளே அப்போ இருந்தாங்க. வளர்ந்ததும் கல்லூரியில பி.எஸ்சி சேர்ந்தேன், தொடரமுடியலை.

வேலைபார்த்த இடங்கள்லயும் திருநங்கைகள் இருந்தாங்க. அதனால திருநங்கைகளோட எல்லாக் காரணிகளுமே எனக்குப் பரிச்சயம்தான். பிரியாவோடு அப்படித்தான் நெருங்கினேன். பக்கத்துலதான் எனக்கு வீடு. ஆனா, இங்கேயேதான் தங்கியிருக்கேன். என் குடும்பமும் என்னைப் புரிஞ்சுக்கிட்டு, என்போக்குல விட்டிருச்சு. திருநங்கை குறித்த ஆவணங்கள் அடங்கிய நூலகம் வைக்கணும்னு பிரியாவுக்குச் சின்னவயதிலிருந்து ஆசை.

நூலகம்
நூலகம்

இன்னும் இதைப் பெரிய அளவுல கொண்டுவருவானு பிரியா மேல எனக்கு நம்பிக்கையிருக்கு” என்றார். அமைப்பையும், நூலகத்தையும் மேம்படுத்தும் திட்டம்குறித்து பிரியாபாபுவிடம் கேட்டோம், “இங்கிருக்கிற நூல்கள், ஆய்வேடுகள் அனைத்தையும் இணையத்தில் தொகுத்துப் பதிவேற்றும் யோசனை உள்ளது. அதுபோக, எங்கள் அமைப்புக்காக மொபைல் ஆப் ஒன்றை உருவாக்கலாமா எனவும் திட்டமிட்டுவருகிறோம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு