Published:Updated:

`எங்கள் மீதான பார்வை மாறியிருக்கிறது!’ - கொரோனா களப்பணியில் அசத்தும் வாணியம்பாடி திருநங்கைகள்

கொரோனா களப்பணியில் திருநங்கை
கொரோனா களப்பணியில் திருநங்கை

``22 திருநங்கைகள் ஊரடங்கில் களப்பணியாற்றுகிறோம். மக்களுடன் மக்களாகக் கலந்ததில் பெருமகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த நேரத்தில் எங்கள் மீதான பார்வையும் மாறியிருக்கிறது’’ என்று பெருமிதம் கொள்கிறார் திருநங்கை மாலா. 

திருப்பத்தூர் மாவட்டத்தில், காவல்துறையினருடன் இணைந்து திருநங்கைகளும் ஊரடங்குப் பணியில் ஆர்வமுடன் சேவையாற்றி வருகிறார்கள். வாணியம்பாடி புதூரில் போக்குவரத்தைச் சரிசெய்து வாகன ஓட்டிகளை வழிநடத்திக் கொண்டிருந்த திருநங்கை மாலாவைச் சந்தித்துப் பேசினோம். நம்மிடம் அவர், ``எனக்கு வயது 34 ஆகிறது. என்னுடைய தாத்தா தான் சுதந்திரத்துக்குப் பிறகான திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியின் முதல் எம்.எல்.ஏ-வாக இருந்தவர். புற்றுக்கோயில் அருகில் உள்ள கேத்தாண்டப்பட்டிதான் என்னுடைய சொந்த கிராமம். சிறு வயதிலேயே பெண்மையை உணர்ந்தேன். பெற்றோரிடம் அந்த நேரத்தில் மறைக்க வேண்டியிருந்தது.

கொரோனா களப்பணியில் திருநங்கை
கொரோனா களப்பணியில் திருநங்கை

இதனால், 12 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்கப் பெற்றோர் வரன் பார்க்கத் தொடங்கினர். ஒரு பெண்ணின் வாழ்க்கையைக் கெடுக்க விரும்பாமல் என்னுள் ஏற்பட்டுள்ள மாற்றத்தை வெளிப்படையாகக் கூறிவிட்டேன். ஆரம்பத்தில் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பிறகு என்னை ஏற்றுக்கொண்டனர். எனினும், பெற்றோரை நோகடிக்க விரும்பாமல் வீட்டிலிருந்து வெளியேறினேன். அப்போதுதான் சரோஜினி அம்மாவின் அறிமுகம் கிடைத்தது. அவரும் திருநங்கைதான்.

என்னைப்போன்ற பல திருநங்கைகளை அன்போடு அரவணைத்துப் பாதுகாப்பதால் அவரை `அம்மா’ என்றுதான் எல்லாருமே அழைக்கின்றோம். நான் ஐ.டி.ஐ வரை படித்துள்ளேன். தகுதிக்கேற்ப வேலைக்கேட்டுப் பல இடங்களில் மன்றாடினேன். வேலை கொடுக்க யாரும் முன்வரவில்லை. இந்த நிலையில்தான் கொரோனா ஊரடங்குப் பணியில் திருநங்கைகளும் தன்னார்வலர்களாக இணைந்துசெயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் அழைப்புவிடுத்தனர். முதலில் காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றியைத் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம். திருப்பத்தூர் நகரில் 10 திருநங்கைகளும் வாணியம்பாடியில் 12 திருநங்கைகளும் களப்பணியாற்றி வருகிறார்கள்.

திருநங்கை மாலா
திருநங்கை மாலா

ஊரடங்கில் வெளியில் வரும் வாகன ஓட்டிகளும் மனசு சங்கடப்படுகிற மாதிரி எங்களிடம் நடந்துகொள்வதில்லை. நாங்கள் சொன்னால் ‘சரிம்மா... சரிம்மா’ என்று ஏற்றுக்கொள்கிறார்கள். ஒரு சிலர் மட்டுமே பார்வையிலேயே வெறுப்புணர்வைக் காட்டுகிறார்கள். அவர்களிடம், `எங்களுக்குப் பிள்ளைகுட்டிகள் இல்லை. உங்கள் நல்லதுக்காகத்தான் சொல்கிறோம். மாஸ்க் அணிந்துகொண்டு வெளியில் வாருங்கள். கை கிளவுஸ் போடுங்கள். தேவையில்லாமல் வெளியில் வராதீர்கள். உங்கள் உயிர் எங்களுக்கு முக்கியம்’ என்று பொறுமையாக எடுத்துச்சொன்னால் புரிந்துகொள்கிறார்கள்.

எங்களுக்குச் சம்பளம் இல்லை. அதை எதிர்பார்த்தும் இதைச் செய்யவில்லை. மக்களுடன் மக்களாகக் கலந்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த நேரத்தில் எங்கள் மீதான பார்வையும் மாறியிருக்கிறது. எங்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தால் திருநங்கை சமுதாயமும் மீண்டு மேலே வரும். பெருக்கிற வேலை கிடைத்தாலும் சந்தோஷமாகச் செய்கிறோம். எங்களை ஒதுக்கி வைக்காமல் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். வயசாக வயசாகப் பயம் வருகிறது. பிள்ளைக்குட்டி இல்லை. கடைசிக் காலத்தில் எங்களை யார் பார்த்துக்கொள்வார்கள்.

கொரோனா களப்பணியில் திருநங்கை
கொரோனா களப்பணியில் திருநங்கை

வேலை வாய்ப்பு இருந்தால் பிற்காலத்தில் எங்களைப் பார்த்துக்கொள்வோம். கடைக்குக் கடை சென்று கைதட்டி இரவல் கேட்க மாட்டோம். பல திருநங்கைகள் வாழ்வாதாரம் இல்லாத காரணத்தினால் பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார்கள். இந்த அவலநிலை மாற வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும். நாங்களெல்லாம் மாலை 7 மணிக்குமேல் வீட்டிலிருந்து வெளியில் செல்வதில்லை. ஒழுக்கமாக வாழ்க்கையை நடத்தி வருகிறோம். இதேபோல், ஊரடங்கு முடிந்த பின்னரும் உங்களில் ஒருவராக வாழ்வதற்காகவே ஆசைப்படுகிறோம்’’ என்றார் உருக்கமாக.

அடுத்த கட்டுரைக்கு