Published:Updated:

`பெற்றோர் சம்மதத்துடன் காதல் ஜோடிக்குத் திருமணம்!' - போலீஸார் உதவியுடன் நடத்திவைத்த திருநங்கைகள்

தஞ்சாவூரில் பெண் ஒருவரின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் அவரை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து கொடுக்க இருந்த நிலையில் அதைத் தடுத்து நிறுத்திய திருநங்கைகள் மகளிர் போலீஸார் உதவியுடன் பெண்ணின் காதலனுக்கே திருமணம் செய்து வைத்துள்ளனர்

காதல் ஜோடிக்கு திருமணம்
காதல் ஜோடிக்கு திருமணம் ( ம.அரவிந்த் )

தஞ்சாவூர் அருகே உள்ள உதாரமங்கலத்தைச் சேர்ந்த பெண் ஜெயா. இவருக்கும் செங்கப்பட்டி அருகே உள்ள பாலையப்பட்டியைச் சேர்ந்த சித்திரவேல் என்பவருக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு வரும் 16ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது.

காதல் ஜோடிக்கு திருமணம்
காதல் ஜோடிக்கு திருமணம்

ஆனால், ஜெயா அதே ஊரைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரை நான்கு ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில்தான் ஜெயாவின் விருப்பத்தைக் கேட்காமல் அவரின் பெற்றோர் திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்ததுடன் அழைப்பிதழ்கள் அச்சடித்து உறவினர்களுக்குக் கொடுத்துக்கொண்டிருந்தனர். ஆனால் பெற்றோர்கள் ஏற்பாடு செய்த திருமணத்தில், ஜெயாவிற்கு விருப்பம் இல்லை. இதை அவர்களிடமும் தெரிவித்து இருக்கிறார்.

போலீஸுடன் திருநங்கை
போலீஸுடன் திருநங்கை

அதற்கு அவர்கள், `நாங்கள் சொல்கிற மாப்பிள்ளைக்கு நீ கழுத்தை நீட்டினால் உன் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்' எனக் கூறியதுடன் ஜெயாவை வெளியே அனுப்பாமல் வீட்டிற்குள்ளேயே அடைத்து வைத்துள்ளனர். இதையடுத்து எப்படியோ கஷ்டப்பட்டு தன் காதலன் விக்கேனஷிடம் தனக்கு நடக்க இருக்கும் திருமணம் பற்றி தகவல் தெரிவித்திருக்கிறார். மேலும்,`எப்படியாவது வந்து என்னை அழைத்துச்சென்று விடு; நான் வாழ்ந்தால் உன்னோடுதான் வாழ்வேன்' எனக் கண்ணீர் விட்டு கலங்கியிருக்கிறார்.

அதன் பிறகு விக்கேனஷ் தனது உறவினரான தஞ்சை ரெட்டிபாளையத்தைச் சேர்ந்த சத்யா என்ற திருங்கையிடம் தன்னுடைய காதல் விவகாரம் பற்றி கூறியிருக்கிறார். அதற்கு சத்யா நிதானமாக, `அந்தப் பெண் உன்னை காதலிக்கிறாரா?' எனக் கேட்டிருக்கிறார். `வாழ்ந்தால் என்னோடுதான் வாழ்வேன் எனக் கூறியிருக்கிறார்' என விக்னேஷ் சொல்லியிருக்கிறார். இதைக் கேட்ட சத்யா, `சரி கவலைப்படாத நான் உங்க இருவரையும் சேர்த்து வைக்கிறேன்' என விக்னேஷுக்கு ஆறுதல் கூறி தேற்றியிருக்கிறார்.

திருமண கோலத்தில் காதல் ஜோடி
திருமண கோலத்தில் காதல் ஜோடி

பின்னர் விக்னேஷின் உதவியுடன் சத்யா, ஜெயாவிடம் பேசி அவரின் மன நிலையை அறிந்திருக்கிறார். இதையடுத்து சத்யா தன்னுடன் சில திருநங்கைகளை தனக்கு உதவியாகவும் மற்றும் காதலன் விக்னேஷையும் அழைத்துக்கொண்டு சரபோஜிராஜபுரம் மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்றிருக்கிறார். அங்கு, `விக்னேஷ் காதலித்து வரும் பெண்ணுக்கு, அவரின் விருப்பத்திற்கு எதிராக வேறு ஒருவருக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கப் போகிறார்கள். அதைத் தடுக்க வேண்டும்' எனக் கூறி புகார் அளித்தனர்.

அப்போது சப்இன்ஸ்பெக்டர் ராணி, ``நீங்கள் சொல்வது முக்கியமில்லை. ஜெயா என்ன சொல்கிறார் என்பதுதான் முக்கியம்' என்றிருக்கிறார். அதோடு ஜெயா மற்றும் அவரது பெற்றோரைக் காவல்நிலையத்துக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் ஜெயா, விக்னேஷை திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்தார். பின்னர் அவரின் பொற்றோரும் விக்னேஷுக்கு பெண் கொடுக்க சம்மதித்தனர். இதைத் தொடர்ந்து சரபோஜிராஜபுரத்தில், உள்ள முனியாண்டவர் கோயிலில் விக்னேஷ், ஜெயா திருமணம் நடைபெற்றது.

திருமண ஜோடியுடன்
திருமண ஜோடியுடன்

இதுகுறித்து திருநங்கை சத்யாவிடம் பேசினோம். ``விக்னேஷ் வந்து என்னிடம் இந்தக் காதல் விவகாரம் குறித்துச் சொன்னான். `இரண்டு மனங்கள் ஒன்றிப்போன பிறகு, எதற்காகத் தடை போட வேண்டும். அவர்கள் விரும்புகிறபடி மண வாழ்கையை ஏற்படுத்தி தருவது பெற்றோர்களின் கடமை' என அவரின் பெற்றோரிடம் பேசினோம்.

ஆனால், முதலில் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. இதற்கு பிறகுதான் நாங்கள் காவல்நிலையத்திற்குச் சென்றோம். அங்கு எங்களுக்கு உரிய மாரியதை கொடுத்து வரவேற்றார் சப் இன்ஸ்பெக்டர் ராணி. அவரிடம் நடந்ததைக் கூறினோம். அவர் ஜெயாவின் பெற்றோர்களை வரவழைத்துப் பேசினார். நாங்களும், `இரண்டு மனம் இணைவதுதான் திருமணம். உங்க கவுரவத்திற்காக தேவையில்லாமல் உங்க பொண்ணோட ஆசையில் மண்ணை அள்ளி போட்டுடாதீங்க. உங்க சம்மதத்தோட அவர்கள் திருமணம் நடக்க வேண்டும் என்றுதான் இங்கு அழைத்து வந்தோம். இல்லையென்றால் நாங்களே செய்து வைத்திருப்போம்' எனச் சொன்னோம்.

போலீஸுடன் திருநங்கை
போலீஸுடன் திருநங்கை

அதன்பிறகு அவர்களும் ஒப்புக்கொள்ளவே, எல்லோர் முன்னிலையிலும் கோயிலில் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து ஜெயாவுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த மாப்பிள்ளையும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தோம். அவரிடமும் உடனே இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது. திருமணம் நிச்சயிக்கப்பட்ட அதேநாளில் அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற இருக்கிறது'' என்றார்.