Published:Updated:

`புதுக்கோட்டையில் லட்சக்கணக்கான பனைமரங்களை நடணும்!' - அசத்தும் திருநங்கைகள்

புதுக்கோட்டையில் உள்ள நீர் நிலைகளைச் சுற்றிலும், லட்சக்கணக்கான பனை மரங்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கோடு புதுக்கோட்டைத் திருநங்கைகள் அமைப்பினர் ஒவ்வொரு வாரமும் ஒரு நீர்நிலைகளிலும் ஆயிரக்கணக்கான பனைவிதைகளை விதைத்து வருகின்றனர்.

பனை விதைகளை நடவு செய்யும் திருநங்கைகள்
பனை விதைகளை நடவு செய்யும் திருநங்கைகள்

தமிழகத்தின் பாரம்பர்ய மரம் பனைமரம். இந்த மரங்கள் தற்போது அழிக்கப்பட்டு வருவது தான் வேதனை. பனை மரத்தை வளர்த்தெடுக்கும் பணிகளை இயற்கை ஆர்வலர்கள் சிலர் முன்னெடுத்து வருகின்றனர். அவர்களுடன் தற்போது திரு நங்கைகள் பலரும் கரம் கோர்த்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் லட்சக்கணக்கான பனை மரங்கள் நடவு செய்யத் திட்டமிட்ட திருநங்கைகள் அமைப்பினர், விடுமுறை தினங்களில் ஒன்று கூடுகின்றனர்.

பனை விதைகளை நடவு செய்யும் திருநங்கைகள்
பனை விதைகளை நடவு செய்யும் திருநங்கைகள்

அனைவரும் சேர்ந்து அன்று ஒரு நீர் நிலையைத் தேர்ந்தெடுத்து, அந்த நீர் நிலையைச் சுற்றிலும் சேகரித்து வைத்திருந்த பனை விதைகளை நடவு செய்கின்றனர். கடந்த வாரம் குளத்தூர் அருகே இளையாவயல் பகுதியில் உள்ள குளத்தைச் சுற்றிலும் பனை விதைகளை நட்டனர்.

குளத்தூர் நெடுஞ்சேரி பகுதியில் பனை விதைகளை விதைக்கொண்டிருந்த திருநங்கைகளிடம் பேசினோம், ``கஜா புயலில் பனைமரங்கள் பெரும்பாலும், வேரோடு சாயவில்லை. ஆனாலும், அந்த புயல் பாதிப்புக்குப் பிறகு பெரும்பாலான மரங்களில் வளர்ச்சியில்லை. சுற்றிலும் பனைமரங்கள் இருந்த குளம், ஆறு, கண்மாய்கள் மரங்களின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. பனைமரங்கள் தான் மழை பெய்வதற்கு ஆதாரமாக இருக்கிறது.

பனை விதைகளை நடவு செய்யும் திருநங்கைகள்
பனை விதைகளை நடவு செய்யும் திருநங்கைகள்

மேலும், மண் அரிப்பு ஏற்படாமல் தடுக்கிறது. இதுபற்றி திருநங்கைகள் அமைப்பு சார்பில் திருநங்கைகள் அனைவரும் ஒன்று கூடி ஆலோசித்தோம். உடனே, அனைவரும் சேர்ந்து ஒவ்வொரு வாரமும் பனை விதைகளை நடவு செய்து வர்றோம். அதன்படி, ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு பகுதியிலும் பனை விதை, மரக்கன்றுகளை நட்டு வைத்து வருகிறோம். புதுக்கோட்டையில் லட்சக்கணக்கான பனை மரங்களை உருவாக்கணும். அது தான் எங்களோட முக்கிய நோக்கம். தொடர்ந்து பனை மர விதைகளை விதைக்கும் பணிகளைச் செய்வோம்" என்றனர்.