அரசு சார்பாக இயக்கப்படும் நகரப் பேருந்துகளில் பெண் பயணிகள், டிக்கெட் கட்டணம் இல்லாமல் பயணம் செய்துகொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. இது பலதரப்பட்ட பணிகளுக்கும் செல்லும் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. குறைவான சம்பளத்துக்கு தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்குச் செல்பவர்கள் இந்தத் திட்டத்தால் பெரிதும் பயனடைந்து வருகிறார்கள்.

இருப்பினும், அரசுப் பேருந்துகளின் டிரைவர் மற்றும் கண்டக்டர் சிலர், கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் பெண்களை அலட்சியப்படுத்தும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன. அத்தகையதொரு சம்பவம் சமீபத்தில் நெல்லையில் நடந்திருப்பது அதிகாரிகளின் கவனத்துக்கு வந்ததால் பேருந்தின் நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நெல்லை ராஜகோபால்புரம் கிராமத்தில் இருந்து நெல்லை சந்திப்பு செல்லும் பேருந்து கடந்த 10-ம் தேதி வந்துள்ளது. சாராள் தக்கர் மகளிர் கல்லூரி நிறுத்தத்தில், அந்தப் பேருந்தில் இரு அரசு ஊழியர்களும் மூன்று மாணவிகளுமாக மொத்தம் 5 பெண்கள் ஏறியுள்ளனர்.
பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் இறங்க வேண்டிய ஐந்து பேரிடமும் அந்தப் பேருந்தின் நடத்துநர் தலா ஏழு ரூபாய்க்கு டிக்கெட் கொடுத்து பணத்தைப் பெற்றுள்ளார். அனைவரும் இறங்கிய பின்னரே, அந்தப் பேருந்து பெண்கள் இலவசமாகப் பயணிக்கக் கூடிய அரசு நகரப் பேருந்து என்பது அந்தப் பெண்களுக்குத் தெரியவந்துள்ளது. அதனால் அவர்கள் அனைவரும், தங்களிடம் நடத்துநர் டிக்கெட் பணத்தைப் பெற்றது குறித்து அதிகாரிகளுக்குப் புகார் தெரிவித்தனர்.
பெண்களிடம் டிக்கெட் கட்டணம் வசூலித்தது குறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள், சம்பந்தப்பட்ட நடத்துநரை சஸ்பெண்ட் செய்ததுடன், பாதிக்கப்பட்ட பெண்களிடம் அவர்களின் டிக்கெட் கட்டணத்தையும் திருப்பிக் கொடுத்தார்கள்.

இது குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரியிடம் கேட்டதற்கு, ``பெண்கள் கட்டணமில்லாமல் பயணிக்கக் கூடிய பேருந்துகளில் அது பற்றி எழுதி ஒட்டியுள்ளோம். சம்பவம் நடந்த பேருந்தின் நடத்துநர் வேண்டுமென்றே டிக்கெட் தொகையை வசூலித்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. அதனால் அவரை எச்சரிக்கும் வகையில் சஸ்பெண்ட் செய்ததுடன், பேருந்தில் பயணம் செய்த பெண்களையும் கண்டுபிடித்து பணத்தை திருப்பிக் கொடுத்தோம். இனிமேல் இதுபோன்று நடக்காது என்பதையும் அவர்களிடம் தெரிவித்தோம்” என்றார்.