Published:Updated:

`சிறப்பு வார்டில் 15 பேர்; கண்காணிப்பில் 381!’ -கரூர் நிலவரம் சொல்லும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

ஆலோசனைக் கூட்டத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
ஆலோசனைக் கூட்டத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ( நா.ராஜமுருகன் )

அத்தியாவசியப் பொருள்களைப் பதுக்கினாலோ, அதிக விலைக்கு விற்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கரூர் மாவட்டத்தின் 18 எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. அனைவரும் சமூகப்பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.

``கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பொதுமக்கள் சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும். தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். அத்தியாவசியப் பொருள்களைப் பதுக்கினாலோ, அதிக விலைக்கு விற்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆலோசனைக் கூட்டத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
ஆலோசனைக் கூட்டத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
நா.ராஜமுருகன்

கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் முன்னிலையில் நடைபெற்றது. பின்னர், அமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

``அத்தியாவசியப் பொருள்கள் தங்கு தடையின்றிப் பொதுமக்களுக்குக் கிடைக்க வழிவகை செய்வது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து துறைவாரியாக அலுவலர்களுடனும், வர்த்தகர் சங்கம், மளிகைப் பொருள்கள் வியாபாரிகள் சங்கம், பால் வியாபாரிகள் சங்கம், உணவக உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரிடமும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தேவையில்லாமல் பொதுமக்கள் நடமாட்டம் இருக்கக் கூடாது.

எம்.ஆர்.விஜயபாஸ்கர்
எம்.ஆர்.விஜயபாஸ்கர்
நா.ராஜமுருகன்

மருந்துகள், மளிகைப்பொருள்கள், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் தங்கு தடையின்றிப் பொதுமக்களுக்குக் கிடைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. வர்த்தகர் சங்கம், மளிகைப்பொருள்கள், வியாபாரிகள் சங்கம், பால்வியாபாரிகள் சங்கம், உணவக உரிமையாளர்கள் சங்கம் என அனைத்துத் தரப்பினரிடமும் இதுகுறித்து விரிவாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருந்து, மளிகைப்பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை கரூர் மாவட்டத்திற்கு கொண்டு வருவதில் அவர்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் அதைச் செய்துகொடுப்பதற்கு அரசு தயாராக இருக்கின்றது.

`இது கொரோனாவை ஒழிக்காது.. ஆனா, புது நம்பிக்கை கொடுக்கும்!’ - கரூர் பெண்களின் புது முயற்சி

மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவில் 15 நபர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருபவர்கள் 381 பேர். இதில், 294 நபர்கள் வெளிமாநிலங்களுக்குச் சென்று வந்தவர்கள், 87 நபர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று வந்தவர்கள். இவர்களின் வீட்டுக்கதவுகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. அனைவரும் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். பிற மாவட்டங்களிலிருந்து கரூர் மாவட்டத்திற்குள் வரும் 18 எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. காவல்துறையினரும் வட்டாரப் போக்குவரத்துத்துறை அலுவலர்களும் தொடர்ந்து ரோந்துப் பணியில் இருப்பார்கள். தேவையில்லாத வாகனங்கள் வந்தால் அவை பறிமுதல் செய்யப்படும். வெளிநாடு அல்லது வெளிமாநிலங்களுக்குச் சென்று எவரேனும் வந்திருந்து உரிய மருத்துவப்பரிசோதனை செய்யாமல் இருந்தால், அவர்கள் குறித்த தகவலைச் சேகரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆலோசனைக் கூட்டத்தில் எம்.ஆர்.விஜய பாஸ்கர்
ஆலோசனைக் கூட்டத்தில் எம்.ஆர்.விஜய பாஸ்கர்
நா.ராஜமுருகன்

பொதுமக்களும் தாமாக முன்வந்து இந்தத் தகவலை வட்டாட்சியருக்கோ, வட்டார வளர்ச்சி அலுவலருக்கோ, வட்டார மருத்துவ அலுவலருக்கோ தெரிவிக்க வேண்டும். மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறைக்கு 04324-1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலோ அல்லது 04324-256306, 04324-255340 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். மாநில அளவிலான கட்டுப்பாட்டு அறைக்கு 104 என்ற எண்ணிலும் தெரிவிக்கலாம்.

தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 மற்றும் உணவுப்பொருள்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கொரோனா வைரஸ் தாக்காத முன்னணி மாவட்டமாக கரூர் மாவட்டத்தை உருவாக்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு