Published:Updated:

`நள்ளிரவில் வெட்டிச் சாய்க்கப்பட்ட மரம்!’ - 100 மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி செலுத்திய கிராமம்

குடியாத்தத்தில், நள்ளிரவில் மர்ம நபர்களால் வெட்டிச் சாய்க்கப்பட்ட மரத்துக்குக் கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்து இறுதிச் சடங்கு செய்தனர்.

மரத்துக்கு கண்ணீர் அஞ்சலி
மரத்துக்கு கண்ணீர் அஞ்சலி

குடியாத்தம் பாக்கம் கிராமம் நெடுஞ்சாலையோரத்தில், இருபது ஆண்டுகளைக் கடந்த மிகப்பெரிய காட்டு வேலான் மரம் ஒன்று இருந்தது. வாகன ஓட்டுநர்களும், பாதசாரிகளும் இந்த மரத்தடி நிழலில்தான் இளைப்பாறுவார்கள். 

வெட்டிச் சாய்க்கப்பட்ட மரம்
வெட்டிச் சாய்க்கப்பட்ட மரம்

குடியாத்தம் டவுன் போலீஸாரும் இங்கு நின்றுதான் வாகன தணிக்கையில் ஈடுபடுவார்கள். சொல்லப்போனால், அந்த பகுதியின் அடையாளமாகவே இந்தக் காட்டு வேலான் மரம் இருந்தது.

இதைத் தூங்கு மூஞ்சி மரம் என்றும் அடையாளப்படுத்துகிறார்கள். இந்த நிலையில், நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டிலிருந்த இந்த மரத்தை நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் அடியோடு வெட்டிச் சாய்த்துள்ளனர். 

அஞ்சலி செலுத்திய கிராம மக்கள்
அஞ்சலி செலுத்திய கிராம மக்கள்

விடிந்த பிறகே அந்தப் பகுதி மக்களுக்கு மரம் வெட்டப்பட்டிருப்பது தெரிந்தது. அதிர்ச்சியடைந்த அவர்கள் ஊதுவத்தி, கற்பூரம் ஏற்றி அந்த மரத்துக்குக் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். நெடுஞ்சாலைத் துறையினரிடமும் இதுதொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்டது. 

அதன்பிறகு, பா.ம.க பிரமுகர் சுரேஷ்குமார், அ.தி.மு.க பிரமுகர் பாஸ்கர் தலைமையில் பாக்கம் ஊராட்சியைச் சேர்ந்த டாக்டர் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றத்தினர் மரத்துக்குக் கண்ணீர் அஞ்சலி பேனர் அடித்து இறுதிச் சடங்குகளை செய்தனர். 

மரக்கன்று
மரக்கன்று

இதையறிந்த குடியாத்தம் டவுன் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் பொதுமக்கள் பலரும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். மேலும், வெட்டப்பட்ட மரத்துக்குப் பதிலாக தேசிய நெடுஞ்சாலையோரத்தில் நூறு மரக்கன்றுகளை நட்டனர். மரத்துக்குக் கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்த நிகழ்வு அனைத்துத் தரப்பினரை நெகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது.