Published:Updated:

வெட்டி சாய்க்கப்பட்ட மரங்கள்... பழங்குடி மலைப்பகுதியில் ஆக்கிரமிப்பு முயற்சியா?- அதிகாரிகள் விளக்கம்

வெட்டி வீழ்த்தப்பட்ட மரங்கள்

ஓங்கி உயர்ந்து வளர்ந்த 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சாம்பிராணி மரங்கள், கடுக்காய் மரங்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான காட்டு மரங்கள் அடியோடு வெட்டப்பட்டிருக்கின்றன.

வெட்டி சாய்க்கப்பட்ட மரங்கள்... பழங்குடி மலைப்பகுதியில் ஆக்கிரமிப்பு முயற்சியா?- அதிகாரிகள் விளக்கம்

ஓங்கி உயர்ந்து வளர்ந்த 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சாம்பிராணி மரங்கள், கடுக்காய் மரங்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான காட்டு மரங்கள் அடியோடு வெட்டப்பட்டிருக்கின்றன.

Published:Updated:
வெட்டி வீழ்த்தப்பட்ட மரங்கள்

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுகா, பர்கூர் மலைப்பகுதியில் அமைந்திருக்கும் தாமரைக்கரையிலிருந்து மேற்கே 20 கி.மீ-க்கு அப்பால் இருக்கிறது ஆலணை, அண்ணாமேடு பகுதிகள். பழங்குடி மக்கள் வசிக்கும் இந்தப் பகுதிகளிலுள்ள மலைக்கரடில் வளர்ந்திருக்கும் நூற்றுக்கணக்கான மரங்களை வெட்டியும், சுமார் 100 ஏக்கர் பரப்பளவுள்ள மலைக்கரடில் பொக்லைன் இயந்திரம் மூலமாக அழித்து சமன்படுத்தும் பணிகள் கடந்த சில நாள்களாக விடிய விடிய நடைபெற்று வந்திருக்கின்றன.

குறிப்பாக இந்தப் பகுதிகளில் ஓங்கி உயர்ந்து வளர்ந்த 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சாம்பிராணி மரங்கள், கடுக்காய் மரங்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான காட்டு மரங்கள் அடியோடு வெட்டப்பட்டிருக்கின்றன. மேடும், பள்ளமுமாக உள்ள அந்த நிலங்களை சமன்படுத்தும் பணியும் முழுவீச்சில் நடைபெற்றது. இதனைக் கண்ட இந்தப் பகுதியைச் சேர்ந்த பழங்குடி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தற்போது அந்தப் பணிகள்  நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.

இந்தச் சம்பவம் குறித்து தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் வி.பி.குணசேகரனிடம் பேசினோம். ``அந்தியூர் தாலுகா, பர்கூரிலிருந்து கொங்காடை செல்லும் இந்தச் சாலையில் ஆலனை, அண்ணாமேடு பகுதியிலுள்ள மலைக்கரடில் 5 நாள்களுக்கு முன்பு வரையிலும் விடிய, விடிய பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டு 100 வயதுடைய சாம்பிராணி மரங்கள், கடுக்காய் மரங்கள் மற்றும் காட்டு மரங்களை அடியோடு தோண்டி எடுத்து பூமியில் புதைத்திருக்கின்றனர். மேலும் மலைக்கரடை சமன்படுத்தியும், வாகனங்கள் செல்லும் வகையில் மண் சாலை அமைக்கும் பணியும் நடைபெற்றிருக்கின்றன.  

மண்ணில் புதைக்கப்பட்ட மரங்கள்
மண்ணில் புதைக்கப்பட்ட மரங்கள்

ஆலனை கிராமப் பகுதியில் வனத்தையொட்டியிருக்கும் இந்த நிலம் வருவாய்த்துறைக்குச் சொந்தமான தரிசு நிலமா, நிபந்தனைப் பட்டா நிலமா என்று தெரியவில்லை. ஒருவேளை பட்டா நிலமாக இருந்தாலும், வனப்பகுதியையொட்டியிருக்கும் மரங்களை வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமையிலான பசுமை ஆய்வுக்குழுவிடமிருந்து அனுமதி பெற்றிருக்க வேண்டும். இதுவரை 250-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு பிடுங்கி வீழ்த்தப்பட்டிருக்கின்றன. சுமார் 1 பர்லாங் தூரத்துக்கு மலைக்கரடை பொக்லைன் இயந்திரம் மூலமாக சமன்படுத்தப்பட்டிருக்கின்றது.

இங்கு ஆழ்துளை கிணறும் அமைக்கப்பட்டிருக்கிறது. வனப்பகுதியையொட்டி இருப்பதால் உல்லாச விடுதிகளை அமைக்கவோ, பணப்பயிர் விவசாயம் செய்வதற்காகவோ இந்த வன அழிப்பு நடைபெற்று வருவதாக அறிகிறோம். இதற்கு அனுமதி பெறப்பட்டிருக்கின்றதா என்பதும் தெரியவில்லை.
சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் செங்குத்தான மலைப்பகுதியின் நிலங்களில் 15 அடி உயரத்துக்கு மண்வெட்டியெடுக்கப்பட்டு அடுக்கு, அடுக்காக சமவெளிகள் உருவாக்கப்பட்டு, அதன் கரைகளில் பெரிய மரங்களை மண் போட்டு மூடப்பட்டும், வேலைகள் நடந்திருக்கின்றன.

வி.பி.குணசேகரன்
வி.பி.குணசேகரன்

இது குறித்து வருவாய்த்துறை, வனத்துறை உள்ளிட்ட மாவட்ட நிர்வாகமும் கவனத்தில் எடுத்துகொண்டதாகத் தெரியவில்லை.
ஏற்கெனவே இங்குள்ள பழங்குடி மக்களின் நிலங்கள் சமவெளியைச் சேர்ந்தவர்களால் அபகரிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் பழங்குடிகள் நிலமற்றவர்களாக மாற்றப்பட்டு வருகின்றனர். ஆலனையில் உள்ள இந்த மலைக்கரடில் காடழிக்கும் நடவடிக்கை குறித்து வருவாய்த்துறையினருக்கும், வனத்துறையினருக்கும் தெரியாது என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. எவ்வித அனுமதியுமின்றி மரங்களை வெட்டி பூமியில் புதைப்பவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

அன்புராஜ்
அன்புராஜ்

இது தொடர்பாக அந்தச் சங்கத்தின் செயலாளர் அன்புராஜ் பேசுகையில், ``சாதாரணமாக ஒரு மரத்தை வெட்ட மாவட்ட ஆட்சியர் தலைமையிலான பசுமை தீர்ப்பாயத்தின் அனுமதி பெற வேண்டும் என்பது விதி. ஆனால், ஆலனைப் பகுதியில் 250-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு வெட்டி வீழ்த்தப்பட்டிருக்கின்றன. இதற்கு முறையான அனுமதி பெற்றதாகத் தெரியவில்லை. இங்கிருக்கும் பழங்குடி மக்கள் தங்கள் வீடுகளைக் கட்டுவதற்காக சில மூங்கில் குச்சிகளை வெட்டினாலே வனத்துறையினர் ரூ.15,000 அபராதம் விதிக்கின்றனர். ஆனால் நூற்றுக்கணக்கான பாரம்பர்யமிக்க மரங்களை அந்தப் பகுதியில் வெட்டி, வன அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்கள் யார் என்பதை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

இது குறித்து ஈரோடு மாவட்ட புலிகள் காப்பக வன பாதுகாவலர் ராமசுப்ரமணியத்திடம் கேட்டபோது, ``இந்தப் பகுதியில் கரடு சமன்படுத்தும் பணி நடப்பதைக் கண்டு வனத்துறையினர் தலையிட்டு பணிகளை நிறுத்தி வைக்குமாறு கூறியதால் தற்போது அந்தப் பணிகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. இது குறித்து வருவாய்த்துறையினருக்கு வனத்துறை அதிகாரிகள் மூலம் தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது. அது பட்டா நிலம் என்பதால் அடுத்தக்கட்ட நடவடிக்கையை வருவாய்த்துறையினர்தான் எடுக்க வேண்டும்.

அதேசமயம் மரங்கள் வெட்டப்பட்டிருக்கின்றனவா என்பது குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு புதிதாக பொறுப்பேற்றிருக்கும் மாவட்ட வன அதிகாரிக்கு  உத்தரவிட்டிருப்பட்டிருக்கிறது. அதனடிப்படையில் இன்று அந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொள்வதற்காக அவர் நிகழ்விடத்துக்குச் சென்றிருக்கிறார். மரங்கள் வெட்டியிருப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள்மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

வாகனங்கள் செல்ல சாலை அமைப்பு.
வாகனங்கள் செல்ல சாலை அமைப்பு.

இது குறித்து அந்தியூர் தாசில்தார் தாமோதரனிடம் பேசினோம். ``இந்த இடம் சோமு என்பவருக்கு வழங்கப்பட்ட தான செட்டில்மென்ட் பூமி. மொத்தம் 4.90 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த நிலம் வேறோரு நபர் வசம் இருப்பதாகத் தெரிகிறது. யாரிடம் இந்த நிலம் உள்ளது, இந்த நிலத்தை சமன்படுத்தும் பணி யாரால் மேற்கொள்ளப்பட்டது, தான செட்டில்மென்ட் பூமியில் மட்டுமே இந்தப் பணிகள் நடைபெற்றதா என்பது குறித்த தகவல்களை சேகரித்து வருகிறோம். இதுபோக, இந்த நிலத்தையொட்டி வனத்துறைக்குச் சொந்தமான நிலம் ஏதேனும் உள்ளதா என்ற விவரத்தையும் வனத்துறையிடம்  கேட்டிருக்கிறோம். மற்றபடி இப்பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் சமன்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறுவதில் உண்மையில்லை. ஓரிரு நாள்களுக்குள் முழுத் தகவல்களையும் உங்களுக்குத் தெரிவிக்கிறோம்'' என்றார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணியை தொடர்பு கொண்டபோது, அவர் வேறு பணியில் பிஸியாக இருப்பதாக அவரின் உதவியாளர் கூறினார்.