Published:Updated:

பழங்குடியினருக்கு 100% கொரோனா தடுப்பூசி செலுத்திய கொடைக்கானல் நகராட்சி; சாத்தியமானது எப்படி?

தடுப்பூசி செலுத்தி கொண்ட பழங்குடியினர்
தடுப்பூசி செலுத்தி கொண்ட பழங்குடியினர்

கொடைக்கானல் நகராட்சியில் 100% கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், தற்போது கொடைக்கானலில் உள்ள பழங்குடியினர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 1,225 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு மொத்தம் 72,459 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில், விடுபட்டிருந்த கொடைக்கானல் வனப்பகுதிகளில் வசிக்கக்கூடிய பழங்குடியினர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட பழங்குடியினருக்கு இதன் மூலம் 100% கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதேபோல பண்ணைக்காடு பேரூராட்சியிலும் 100% கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே தமிழகத்தில் முதலாவதாக கொடைக்கானல் நகராட்சியில் 100% மற்றும் பழனி நகராட்சியில் 100% கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தது.

பழங்குடி மக்கள்
பழங்குடி மக்கள்
மெகா தடுப்பூசி முகாம் ரவுண்ட்அப்: இலக்கைத் தாண்டிய கோவை, திருச்சியின் ஊராட்சி 100%, மதுரை 5-ம் இடம்!

கொடைக்கானல் வாழ் பழங்குடியினருக்கு 100% கொரோனா தடுப்பூசி செலுத்துவதை சாத்தியப்படுத்தியது குறித்து கொடைக்கானல் வட்டார மருத்துவ அலுவலர் எம். அரவிந்த்கிருஷ்ணன் சொன்னபோது, ``கொடைக்கானல் நகராட்சியில் வாக்காளர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் வீடுதோறும் சென்று ஆய்வு செய்து கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களை கணக்கெடுத்து நகராட்சியில் 100% கொரோனா தடுப்பூசி போடப்பட்டதை உறுதிசெய்தோம்.

கொடைக்கானல் வாழ் பழங்குடியினருக்கு இத்தகைய சிக்கல் ஏற்படவில்லை. கீழ்மலைப் பகுதியான வாழைகிரி, மஞ்சூர், மூலையூர், மூலையாறு, ஜேபி நகர், பண்ணைக்காடு அடுத்துள்ள கடுகுதடி, பெரியூர், மேல்மலைப் பகுதியான வில்பட்டியில் இரு ஊர்கள் என மொத்தம் 28 பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினரின் விவரங்கள் எங்களிடம் உள்ளது.

எம்.அரவிந்த்கிருஷ்ணன்
எம்.அரவிந்த்கிருஷ்ணன்

மேலும் ஒரு மருத்துவர், செவிலியர், உதவியாளர் மற்றும் ஓட்டுநரைக் கொண்ட நடமாடும் மருத்துவக் குழு மூலம் 18 வயதுக்கு மேற்பட்ட பழங்குடிகள் விவரங்களை எடுத்தோம். ஏற்கெனவே முக்கால்வாசி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்த நிலையில், சிறப்பு முகாமைப் பயன்படுத்தி பழங்குடியினர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்திவிட்டோம்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு