Published:Updated:

நீலகிரி: `ஆம்புலன்ஸில் டீசல் இல்லை' அலட்சிய ஊழியர்கள்? -பழங்குடியின முதியவர் மரணத்தில் நடந்தது என்ன?

பழங்குடியின முதியவர் மரணம்

மயக்கமடைந்து மூன்று மணி நேரம் கழித்தே மருத்துவமனைக்கு அழைத்துவர முடிந்தது. சரியான நேரத்தில் வந்திருந்தால் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும்‌.

நீலகிரி: `ஆம்புலன்ஸில் டீசல் இல்லை' அலட்சிய ஊழியர்கள்? -பழங்குடியின முதியவர் மரணத்தில் நடந்தது என்ன?

மயக்கமடைந்து மூன்று மணி நேரம் கழித்தே மருத்துவமனைக்கு அழைத்துவர முடிந்தது. சரியான நேரத்தில் வந்திருந்தால் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும்‌.

Published:Updated:
பழங்குடியின முதியவர் மரணம்

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகிலுள்ள ஓவேலி, எல்லைமலைப் பகுதியைச்‌ சேர்ந்தவர் 67 வயதான மாதன். பழங்குடியினத்தைச் சேர்ந்த இவர், வழக்கம்போல இன்று காலை பணிக்குக் கிளப்பியிருக்கிறார். அப்போது, திடீரென மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார். அருகிலிருந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் சேவையை நாடியுள்ளனர். நீண்ட நேரம் காத்திருந்தும் 108 ஆம்புலன்ஸ் வராததால், தனியார் வாகனம் ஒன்றை வாடகைக்குப் பிடித்து, மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.

புகாரளித்த உறவினர்கள்
புகாரளித்த உறவினர்கள்

மாதன் வீட்டிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவிலுள்ள சூண்டி பகுதி வரை தனியார் வாகனத்தில் சென்ற அவர்கள், அங்கிருந்து ஒரு ஆம்புலன்ஸ் மூலம் கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர். மாதனைப் பரிசோதித்த மருத்துவர்கள், ``வரும் வழியிலேயே மாதன் உயிரிழந்துள்ளார். உரிய நேரத்தில் வந்திருந்தால் உயிரைக் காப்பாற்றியிருக்க வாய்ப்பு இருந்திருக்கும்" எனத் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மாதனின் உறவினர்கள், கூடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீது புகாரளித்துள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த விவகாரம் குறித்துப் பேசிய மாதனின் உறவினர்கள், "மயக்கத்திலிருந்த மாதனை 108 ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றோம். ஆனால், 'ஆம்புலன்ஸில் டீசல் இல்லை. உடனடியாக வர முடியாது' என ஊழியர்கள் தரப்பில் அலட்சியமான பதில் வந்தது. அதன் பிறகே தனியார் வாகனத்தில் பாதி தூரம் வந்தோம். மாதன் மயக்கமடைந்து மூன்று மணி நேரம் கழித்தே மருத்துவமனைக்கு அழைத்து வர முடிந்தது. சரியான நேரத்தில் வந்திருந்தால் உயிரைக் காப்பாற்றயிருக்க முடியும்‌. வாகன வசதியோ, மருத்துவ வசதியோ இல்லாத இந்தப் பகுதி மக்கள் முழுமையாக அரசாங்கத்தை மட்டுமே நம்பியிருக்கிறோம். இப்படிக் கைவிடுவார்கள் எனத் தெரியவில்லை. உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கண்ணீர் வடிக்கின்றனர்.

புகார் அளித்த உறவினர்கள்
புகார் அளித்த உறவினர்கள்

இது குறித்து கூடலூர் வருவாய்த்துறை அலுவலர்கள், "108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் அலட்சியமாகச் செயல்பட்டதாலேயே மாதன் என்ற பழங்குடி உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் புகாரளித்தனர். புகார் அளிக்க வந்தவர்களை சமாதானம் செய்து இறந்தவரின் உடலை ஒப்படைத்தோம். ஆர்.டி.ஓ தலைமையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்போம்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism