Published:Updated:

`ஏ.கே.47 துப்பாக்கிக்கு இணையான திருச்சி அசால்ட் ரைபிள்' - மேக் இன் இந்தியா திட்டத்தால் சாத்தியம்

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை அதிகாரிகள்
திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை அதிகாரிகள்

`மேக் இன் இந்தியா திட்டம் மூலம் ஏ.கே.47 துப்பாக்கிக்கு இணையாக திருச்சி அசால்ட் ரைபிள் விளங்கும்' என்கிறார்கள் திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை அதிகாரிகள்.

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் மத்திய பாதுகாப்புப் படைக்கு வழங்கும் நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் துணைத்தலைவர் ராவத், திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் பொது மேலாளர்கள் ராஜாராம், அகர்வால், சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில், 500 துப்பாக்கிகள் மத்திய பாதுகாப்புப் படை டி..ஐ.ஜி ராவத்திடம் திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை அதிகாரிகள் வழங்கினர்.

நள்ளிரவில் காவல்நிலையத்தை துளைத்த ஏ.கே 47 - சினிமா பாணியில் கேங்ஸ்டரை மீட்ட கும்பல்

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில், மத்திய மற்றும் மாநில போலீஸ் பாதுகாப்புப் படையினருக்கு பல்வேறு ரக துப்பாக்கிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. 2011-ம் ஆண்டு ஏ.கே 47 ரக துப்பாக்கிக்கு இணையான திருச்சி அசால்ட் ரைபிள் எனும் திட்டம் தொடங்கப்பட்டது. அதன்படி 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 200 துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்டு, அவை சத்தீஸ்கர் மாநில போலீஸாருக்கு வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து மத்திய பாதுகாப்புப் படையினர் மற்றும் மாநில போலீஸ் படையினரின் பயன்பாட்டுக்காகத் துப்பாக்கிகள் தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு தயாரிக்கப்படும் நவீன துப்பாக்கிகள் ஹரியானாவில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை முகாமில் சோதனை முறையில் சுட்டுப் பார்க்கப்பட்ட பிறகுதான், சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் படுத்துவதற்காக அனுப்பி வைக்கப்படும்.

நம்மிடம் பேசிய திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை பொது மேலாளர் ஸிசிரிஸ் கரே,``ஏ.கே.47 ரக துப்பாக்கிகளுக்கு இணையாகத் திருச்சி மத்திய துப்பாக்கி தொழிற்சாலையில் திருச்சி அசால்ட் ரைபிள் தயாரிக்கப்படுகிறது. இந்த வகை துப்பாக்கிகள் நுகர்வோர், விரும்பும் இரு மாடல்களில் தயாரிக்கப்படுகின்றன. இவை உலோகத்தால் செய்யப்படும் துப்பாக்கிகள்போல இல்லாமல் திட உலகத்தால் வடிவமைக்கப்பட்டவை.

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட  துப்பாக்கிகள்
திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள்

கடந்த இரு நாள்களாகத் திருச்சியில் முகாமிட்ட மத்திய துணை ராணுவ குழுவினர் திருச்சி அசால்ட் ரைபிள் துப்பாக்கியைப் பல்வேறு வகைகளில் சோதனை செய்தனர். மேலும், எங்களின் அடுத்த உற்பத்திகளில் சிறப்பான தொழில்நுட்பங்களைக் கையாளவும் ஆலோசனை வழங்கினார்கள். திருச்சி அசால்ட் ரைபிள் துப்பாக்கி தயாரிப்பு என்பது ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு பிரிவு, கடந்த 17 ஆண்டுகளில் பெற்ற மிகப்பெரிய வெற்றியாகும்.

 திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை பொது மேலாளர் ஸிசிரிஸ் கரே
திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை பொது மேலாளர் ஸிசிரிஸ் கரே

தற்போதுவரை 17,000 துப்பாக்கிகளுக்கான ஆர்டர் கையில் உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் வரை, மாதந்தோறும் 1,000 துப்பாக்கிகள் மட்டுமே தயாரித்து வந்த நாங்கள், தற்போது அந்த எண்ணிக்கை 1,500 ஆக உயர்த்தியுள்ளோம்.

அடுத்த சில மாதங்களில் இந்த இலக்கு 2,000 துப்பாக்கிகள் தயாரிப்பதாக உயரும். ஏகே 47 ரக துப்பாக்கிக்கு நிகராக தயாரிக்கப்பட்ட திருச்சி அசால்ட் ரைபிள் துப்பாக்கி எதிரிகளின் முன்னால் நமது ராணுவத்தினருக்கு அதிக அளவில் நம்பிக்கை தன்மையை அளிக்கும். மேலும், இரவு நேரத்தில் பயன்படுத்தும் வகையில் டெலஸ்கோப் பொருத்தக்கூடிய வசதி இதில் உள்ளது.

சர்வதேச தரத்தில் உற்பத்தி செய்யப்பட்ட இந்தத் துப்பாக்கி, வரும் காலங்களில் மற்ற நாடுகளின் துப்பாக்கிகளைக் காட்டிலும் சிறந்ததாக விளங்கும். மேலும், இங்கு மூன்று வித துப்பாக்கிகளும் மற்ற ஆயுதங்களும் தயாரிக்கப்படுகின்றன. அவை அனைத்தும் துணை ராணுவத்தினருக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும். இந்த திருச்சி அசால்ட் ரைபிள் துப்பாக்கி தயாரிப்பு என்பது மேக் இன் இந்தியா திட்டத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். மேலும், இங்கு தயாரிக்கப்படும் கார்பைன் துப்பாக்கி விரைவில் பயிற்சிக்குப் பயன்படுத்தப்பட உள்ளது.

 திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை
திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை

இந்தோ-ரஷ்ய ஒப்பந்தத்தின் அடிப்படையில் உத்தரப்பிரதேசத்தின் மாநிலம் கோர்வா தொழிற்சாலையில் இன்னும் 9 மாதங்களுக்குள் ரஷ்ய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி துப்பாக்கி தயாரிப்பு மேற்கொள்ளப்படும். இருந்தபோதும் திருச்சி அசால்ட் ரைபிள் ரக துப்பாக்கி மட்டுமே சிறந்ததாக அமைந்து வருங்காலங்களில் அதற்கான ஆர்டர்கள் அதிகரிக்கும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு