Published:Updated:

`விரைவில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!’ - சுஜித் விவகாரத்தில் திருச்சி ஆட்சியர்

நிதி உதவி வழங்கும் கலெக்டர்  சிவராசு
நிதி உதவி வழங்கும் கலெக்டர் சிவராசு

சுஜித் வில்சனின் பிரேதப் பரிசோதனை அறிக்கை சில தினங்களில் கிடைத்துவிடும் என்கிறார் திருச்சி கலெக்டர் சிவராசு.

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம் நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தான் 2 வயது குழந்தை சுஜித் வில்சன். அவனின் மறைவுக்காக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து 10 லட்சமும், அ.தி.மு.க சார்பாக 10 லட்சமும் நிதியுதவியாக அறிவித்தார்.

சுஜித்
சுஜித்

இந்த நிலையில், பொது நிவாரண நிதியிலிருந்து அறிவிக்கப்பட்ட 10 லட்ச ரூபாய்க்கான காசோலையை, திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, ஸ்ரீரங்கம் சார் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சங்கர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் செல்வராஜ், மணப்பாறை வட்டாட்சியர் தமிழ்கனி ஆகியோர் சகிதமாக பெற்றோரிடம் நேரில் வழங்கினார்.

அப்போது பேசிய கலெக்டர் சிவராசு, ``ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணி இரவு பகல் பாராமல் போர்க்கால அடிப்படையில் நடைபெற்றது.

துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், வெல்லமண்டி என்.நடராஜன், எஸ்.வளர்மதி, வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், தீயணைப்பு காவல்துறை தலைவர் காந்திராஜன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் உள்ளிட்டோர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு
திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு

மேலும் மதுரையிலிருந்து மணிகண்டன் மற்றும் ராஜ்குமார், திருச்சி டேனியல், கோவை கற்பகம் பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்ரீதர், மணப்பாறை ரூபன்குமார், நாமக்கல் வெங்கடேசன், அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் செந்தில், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், மணப்பாறை மாதா போர்வெல், கோவை டெல்டா ஸ்குவார்டு, புதுக்கோட்டை வீரமணி ஆகியோர் குழந்தையை மீட்க முயன்றனர்.

எதிர்பாராதவிதமாகக் குழந்தை 88 அடி ஆழத்துக்குக் கீழே சென்றுவிட்டான். சம்பவ இடத்தில் பூமிக்கடியில் பாறை அதிக கடினத்தன்மையுடையதாக இருந்ததால் எல்.என்.டி நிறுவனத்தினர் மீட்புப்பணியில் முழுவீச்சில் ஈடுபட்டனர். குழந்தையை மீட்பதற்கு ரிக் இயந்திரத்தின் மூலம் ஆழ்துளைக் கிணற்றுக்கு இணையாகக் குழி தோண்டும் பணி நடைபெற்றது.

திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு
திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு

எல்.என்.டி நிறுவனத்தார் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் தொழில்நுட்ப அணுகுமுறையின்படி மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தீயணைப்புத் துறையின் மூலம், திருச்சி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களிலிருந்து பல்வேறு கருவிகள் கொண்டு வரப்பட்டு பயன்படுத்தப்பட்டது.

இதேபோல், சுகாதாரத் துறையின் மூலம் அரசு மருத்துவக் கல்லூரி தலைமையின் கீழ் மருத்துவக் குழு, மணப்பாறை, புத்தாநத்தம் பகுதி மருத்துவர்கள் மருத்துவப் பணியில் ஈடுபட்டனர்.

அவ்வப்போது மீட்புப் பணி குறித்து தமிழக முதல்வர், அமைச்சர்களிடமும் என்னிடமும் தொலைபேசியின் வாயிலாக கேட்டுவந்தார். இவ்வளவு முயற்சிகள் செய்தும் குழந்தையை உயிரோடு மீட்க முடியவில்லை. இன்னும் சில தினங்களில் சிறுவன் சுஜித் உடல் பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைக்கும். டி.என்.ஏ பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது. அறிக்கைகள் கிடைத்தால், உடல் எடுக்கப்படவில்லை என்கிற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இருக்கும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு