Published:Updated:

`80 காவலர்கள் விடுவிப்பு; சிறப்புப் பயிற்சி!’- திருச்சி டி.ஐ.ஜி-யின் புதிய முயற்சி

டி.ஐ.ஜி பாலகிருஷ்ணன்
டி.ஐ.ஜி பாலகிருஷ்ணன்

``திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 5 மாவட்டங்களில் மக்களோடு நேரடித் தொடர்பில், காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் காவலர்கள் 80 பேர் காவல் நிலைய பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.”

சாத்தான்குளம் சம்பவம் காவல்துறை என்ற பிம்பத்தின் மீது அழியாக் கறையை ஏற்படுத்தியிருக்கிறது. அதைப் போக்கும் வகையில் மக்கள் மத்தியில் போலீஸாரின் நன்மதிப்பை உயர்த்துவதற்காகப் பொதுமக்களிடம் அத்துமீறி நடந்துகொண்ட 80 போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க டி.ஐ.ஜி பாலகிருஷ்ணன் அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இச்செயலை சமூக வலைதளங்களில் வெகுவாகப் பாராட்டி வருகிறார்கள்.

பென்னிக்ஸ் - ஜெயராஜ்
பென்னிக்ஸ் - ஜெயராஜ்

சாத்தான்குளத்தில் காமராஜர் சிலை அருகில் செல்போன் கடை நடத்திவந்த ஜெயராஜ், அவரின் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்தும் கடையைத் திறந்து வைத்திருந்ததாகக் கூறி, போலீஸார் தாக்கியதில் உயிரிழந்தனர். இந்த அதிர்ச்சி மரணம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இவ்வழக்கை விசாரிக்கச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் என்பவரை நியமித்தது.

நீதிபதி என்றும் பாராமல் காவல்துறை அவரை ஒருமையில் விமர்சித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இச்சம்பவத்துக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கடும் கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில், மகாராஜன் என்ற காவலரை சஸ்பெண்டு செய்துள்ளனர். நீதிபதியை விமர்சிக்கும் அளவுக்குக் காவலர்கள் உயர்ந்துவிட்டார்களா என்று அரசியல்கட்சியினர் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் நெருக்கடியான சூழலில் சிக்கியிருக்கும் காவல்துறையினர், மக்களிடையே நன்மதிப்பைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் திருச்சி டி.ஐ.ஜி சில நடவடிக்கைகலை முன்னெடுத்துள்ளார்.

சாத்தான்குளம்: `தடயங்கள் அழிக்கப்படலாம்!’ -விசாரணையைத் தொடங்க சி.பி.சி.ஐ.டி-க்கு உத்தரவு

திருச்சி காவல் சரகத்துக்கு உட்பட்ட திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 5 மாவட்டங்களில் மக்களோடு நேரடித் தொடர்பில், காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் காவலர்கள் 80 பேர் காவல் நிலைய பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஒரு மாத காலம் பொதுமக்களுடன் நல்லுறவைக் கடைப்பிடிப்பது குறித்த சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், பொதுமக்களிடம் எவ்வாறு கண்ணியமாக நடந்துகொள்வது, முரட்டுத்தனமாக நடந்து கொள்வதைத் தவிர்ப்பது, உளவியல் ரீதியாக ஆலோசனை உள்ளிட்டவை அளிக்கப்படுகின்றன.

பணியின்போது பொதுமக்களுடன் நல்லுறவை கடைப்பிடிக்காதவர்கள், குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் எனப் பல்வேறு தரவுகளின் அடிப்படையில் 5 மாவட்டங்களில் 180 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் முதல்கட்டமாக 80 பேருக்கு தற்போது பயிற்சி அளிக்கப்படுவதாகத் திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சாத்தான்குளம் தந்தை, மகன் இரட்டை மரண வழக்கில் காவல் துறையினர் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படும் நிலையில், திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணனின் இந்த முன்மாதிரி முயற்சி பலரின் பாராட்டைப் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டி.ஐ.ஜி பாலகிருஷ்ணன்
டி.ஐ.ஜி பாலகிருஷ்ணன்

இந்நிலையில் கொரோனா காலகட்டத்தில் பொதுமக்களை அலையவிடாமல் ஆன்லைன் மூலம் குறை கேட்டுச் சிறப்பாக நடவடிக்கை எடுத்தற்காகத் திருச்சி சரக டி.ஐ.ஜி பாலகிருஷ்ணனுக்கு, சர்வதேச அமைப்பு சார்பில் 'ஸ்டார்ஸ் ஆஃப் கோவிட்' விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

16 வயது சிறுவனிடம் மல்லுக்கட்டிய காவல்துறை! #ViralVideo
அடுத்த கட்டுரைக்கு