Published:Updated:

திருச்சி: காந்தி மார்க்கெட்டில் சாலைக்கு நடுவே புதிய டிவைடர்; ஆபத்தும், கோரிக்கையும்!

திருச்சி - காந்தி மார்க்கெட்

காந்தி மார்க்கெட் சுமை தூக்கும் தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள், தற்போது அமைக்கப்பட்டிருக்கும் டிவைடரால் தாங்கள் சிரமத்துக்குள்ளாகியிருப்பதாகக் கூறுகிறார்கள்.

திருச்சி: காந்தி மார்க்கெட்டில் சாலைக்கு நடுவே புதிய டிவைடர்; ஆபத்தும், கோரிக்கையும்!

காந்தி மார்க்கெட் சுமை தூக்கும் தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள், தற்போது அமைக்கப்பட்டிருக்கும் டிவைடரால் தாங்கள் சிரமத்துக்குள்ளாகியிருப்பதாகக் கூறுகிறார்கள்.

Published:Updated:
திருச்சி - காந்தி மார்க்கெட்

திருச்சி காந்தி மார்க்கெட்டிற்கு அருகிலுள்ள வெல்லமண்டி ரோட்டில் புதிதாக ஒரு டிவைடர் அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அந்தப் பகுதியில் சாலை வசதியில்லாமல், குண்டும் குழியுமாக இருந்ததாலும், பேருந்து உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் அதிகம் பயணிக்கும் சாலை என்பதாலும் அதீத புழுதியில் தங்களது பிழைப்பை ஓட்டினர் அங்குத் தொழில் செய்யும் மக்கள். நீண்டகாலத்துக்குப் பிறகு போடப்பட்ட சாலையால் நிம்மதி பெருமூச்சு விட்ட காந்தி மார்க்கெட் சுமை தூக்கும் தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள், தற்போது அமைக்கப்பட்டிருக்கும் டிவைடரால் தாங்கள் சிரமத்துக்குள்ளாகியிருப்பதாகக் கூறுகிறார்கள்.

தினந்தோறும் ஆயிரக்கணக்கில் மக்கள் புழங்கும் இந்த காந்தி மார்க்கெட்டில் சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருக்கும் டிவைடரால் எந்த பயனும் இல்லை என்றும், இந்த டிவைடரால் தாங்கள் மூட்டைகளைத் தூக்கிக் கொண்டு வெகு தூரம் சுற்றிச் செல்வதாகவும் அதிருப்தி தெரிவிக்கிறார்கள்.

டிவைடர்
டிவைடர்

இது தொடர்பாக நம்மிடம் பேசிய சுமை தூக்கும் தொழிலாளர்கள், ``முதலில் இந்த டிவைடர் தேவையேயில்லை என்பதே பெரும்பாலானோரின் கருத்து. காந்தி மார்க்கெட் என்பது வணிகம் அதிகம் இடம்பெறும் இடம். மூட்டைகள் பரிமாற்றம் இங்கு அதிக அளவில் நடைபெறும். காய்கறிகள், சாக்குகள், எண்ணெய் டின்கள், பேப்பர் பண்டல்கள் போன்றவற்றை மூட்டை மூட்டையாகத் தூக்கிச் செல்கிறோம். இந்த டிவைடர் வந்த பின், சாலையை எளிதில் கடக்க முடிவதில்லை. சாலையின் ஒருமுனையிலிருந்து மறுமுனைக்குச் செல்ல சாலையின் இறுதிவரை சென்று சுற்றி வரவேண்டியிருக்கிறது.

திருச்சி: காந்தி மார்க்கெட்டில் சாலைக்கு நடுவே புதிய டிவைடர்; ஆபத்தும், கோரிக்கையும்!

கூட்ட நெரிசல் மிகுந்த இந்த சாலையில் மூட்டைகளைத் தூக்கிக் கொண்டு சாலையைச் சுற்றிவருவதென்பது மிகுந்த சவாலாக இருக்கிறது. எனவே அதிகாரிகள் டிவைடரை நீக்கினால் இந்த மார்க்கெட்டை நம்பி பிழைப்பு நடத்தும் எங்களுக்கு உதவியாக இருக்கும்" என்றனர்.

இது குறித்து மார்க்கெட் வியாபாரிகளிடம் பேசினோம். ``மூட்டைகளைத் தூக்கிக்கொண்டு சாலையைச் சுற்றி வருவதால் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு 30 ரூபாய் வரை மூட்டைக்குக் கூலி கொடுக்கவேண்டியிருக்கிறது. மூட்டைக்கு 10 ரூபாய் கொடுத்துவந்த இடத்தில் இப்படி அதிகமாகக் கொடுப்பதால் எங்களுக்கும் கட்டுப்படியாவதில்லை. சுமார் 200-250 அடி நீளம் உள்ள டிவைடரில், மத்தியில் ஒரே ஒரு இடத்தில்தான் சாலையைக் கடக்கும்படியாக அமைக்கப்பட்டிருக்கிறது. எனவே அதிகாரிகள் எங்களின் கோரிக்கையைக் கவனத்தில்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர். 

திருச்சி மாநகராட்சி
திருச்சி மாநகராட்சி

மேலும், டிவைடர் அமைக்கப்பட்டுக் கிட்டத்தட்ட 10 நாள்கள் மேலாகியும் அதன் மேற்பகுதியில் கம்பிகள் ஏதும் இல்லை என்பதால், சில மனநல பாதிக்கப்பட்டோர் இரவில் அங்குத் தூங்குகின்றனர். சமமான நிலையிலிருந்தாலே கீழே விழும் ஆபத்திருக்கும்போது, முக்கோண வடிவில் அமைத்திருப்பதால் எளிதில் வழுக்கி சாலையில் விழ நேரிடும் அபாயமும் நிலவுகிறது என அந்தப் பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.

இது தொடர்பாக திருச்சி மாநகராட்சி அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பேசினோம். ``இந்த டிவைடர் பல விபத்துகளைத் தடுக்க உதவுகிறது. சுமை தூக்கும் தொழிலாளர்கள் மூட்டையைத் தூக்கிக் கொண்டு சாலையைக் கடக்கும்போது எதிர்பாராதவிதமாக விபத்துகள் நிகழ்கின்றன. அதைத் தடுக்கத்தான் இந்த டிவைடர் அமைக்கப்பட்டுள்ளது. அந்த டிவைடர் மேல் தூங்குபவர்களைக் கண்காணித்து, துரித நடவடிக்கை எடுக்கிறோம்" என்றனர்.