Published:Updated:

`எங்க பிள்ளைகள் கஷ்டப்படக் கூடாது!'- அரசுப் பள்ளி மாணவர்களின் குடும்பங்களுக்கு உதவும் ஆசிரியர்கள்

அரசுப் பள்ளி ஆசிரியர்கள்
அரசுப் பள்ளி ஆசிரியர்கள்

தங்கள் பள்ளியில் படிக்கும் பள்ளிக் குழந்தைகளின் குடும்பங்களுக்குச் சொந்தச் செலவில் அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட சமையலுக்குத் தேவையான பொருள்களை அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வழங்கி வருகிறார்கள்.

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்துள்ளது அப்பாத்துரை ஊராட்சி. இங்குள்ள தெற்கு சத்திரம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 80 குழந்தைகள் படிக்கின்றனர். பள்ளியில் படிக்கும் குழந்தைகள் நலிவடைந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.

கொரானா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு அமலில் உள்ளதால், இப்பகுதியிலும், கூலி வேலைக்குச் செல்லும் ஏழைகளின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது. உணவுக்கே வழியின்றித் தவிக்கும் சூழல் நிலவுகிறது.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள்
அரசுப் பள்ளி ஆசிரியர்கள்

நிலைமையை உணர்ந்த தன்னார்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இங்குள்ள ஏழை, எளியோர், கணவரை இழந்தோர், முதியவர்கள், வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருள்களை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில்தான், தெற்கு சத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படிக்கும் 80 பேருக்கும் அப்பள்ளியில் பணிசெய்யும் பள்ளி ஆசிரியர்கள், தங்களின் சொந்தச் செலவில் ரூ.500 மதிப்புள்ள தலா 5 கிலோ அரிசி, 10 கிலோ காய்கறி உள்ளிட்ட பொருள்களை வழங்கினர். அந்தப் பள்ளி ஆசிரியர்களான தேவ அன்பு, சொல்லின் செல்வி, பத்மா, உமாமகேஸ்வரி, ராதா உதவி தலைமையாசிரியர் தாமஸ் ஜெயசீலன் ஆகியோர் பள்ளித் தலைமையாசிரியை கற்பகம் தலைமையில் குழந்தைகள் மற்றும் அவரது பெற்றோரிடம் பொருள்களை வழங்கினார்.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள்
அரசுப் பள்ளி ஆசிரியர்கள்

அப்போது பள்ளி தலைமை ஆசிரியர் கற்பகம், ``ஊரடங்கு உத்தரவால் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகக் கிராமங்களில் மக்கள் படும் கஷ்டங்களை சொல்ல வார்த்தைகள் இல்லை. எங்கள் பள்ளியில் ஏழைக் குழந்தைகள் படிக்கிறார்கள். அவர்கள் நிலைமை மிக மோசமாக மாறியுள்ளது. அதனால் அவர்களுக்கு உதவி செய்ய நினைத்தோம். அதற்கு அனைத்து ஆசிரியர்களும் உதவ முன்வந்ததால், உதவ முடிந்தது. எங்கள் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளின் குடும்பங்கள் கஷ்டப்படுவதைப் பார்க்க முடியவில்லை. எங்களால் ஆன உதவிகளைச் செய்துள்ளோம்” என்றார்.

இதேபோல், திருச்சி மாவட்டம் தொட்டியம் அடுத்த புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் காளியம்மாள் மற்றும் உதவி ஆசிரியை சுரேகா உள்ளிட்டோர் தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் ஆயிரம் மதிப்பிலான அரிசி மற்றும் மளிகைப் பொருள்கள் , காய்கறிகள் உள்ளிட்டவை வழங்கினர்.

`திருச்சி சந்தைக்குள் நுழைந்த கோயம்பேடு நபர்!' - கூட்ட நெரிசலால் பதறும் சமூக ஆர்வலர்கள்
அடுத்த கட்டுரைக்கு