Published:Updated:

`2,400 கம்பங்கள்; மூன்றாவதுகட்டப் பணிகள் தீவிரம்!' - மின்மயமாகும் திருச்சி - காரைக்கால் ரயில் பாதை

மூன்றாம் கட்டமாக திருவாரூர் வழித்தடத்தில் சாலியமங்கலத்திலிருந்து காரைக்கால் வரை மின்மயமாக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்துகொண்டிருக்கின்றன.

திருவாரூர் சந்திப்பு
திருவாரூர் சந்திப்பு

திருச்சி - காரைக்கால் ரயில் பாதையை மின்சார பாதையாக மாற்றியமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதனால் இவ்வழித்தடத்தில் ரயில் பயணம் எளிதாகும் என்கிறார்கள்.

ரயில்
ரயில்

பிரிட்டிஷ் அரசாங்கம் 1858-ல் மராட்டிய மன்னர்களிடமிருந்து தஞ்சாவூர் நிர்வாகத்தை எடுத்துக்கொண்டு 1861-ம் ஆண்டில் இந்தியாவின் கிரேட் சதர்ன் ரயில்வே நாகை - திருச்சிராப்பள்ளி இடையே ரயில் பாதையை உருவாக்கியது. இந்த அகல ரயில் பாதை 1862-ம் ஆண்டில் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது.

நாகூர் தர்காவுக்குச் சொந்தமான நிலமும் பொறையாரைச் சேர்ந்த தனியார் ஒருவருக்கு சொந்தமான காம்பவுன்ட் கொண்ட ஒரு பங்களாவும் நாகையில் கையகப்படுத்தப்பட்டன. அந்த இடத்தில் நாகை ரயில்வே ஸ்டேஷன் செயல்பட்டு வந்தது. இதன் பின்னர் 1874-ம் ஆண்டில் தென்னிந்திய ரயில்வே நிர்வாகத்தின் கீழ் வந்தவுடன் நாகை - திருச்சிராப்பள்ளி அகலப் பாதை 1875-ல் மீட்டர் கேஜ் பாதையாக மாற்றப்பட்டது. இதன் பின்னர் திருச்சியிலிருந்து காரைக்கால் வரை அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது. இத்தகைய மிகவும் பழைமை வாய்ந்த ரயில் பாதையான திருச்சி - காரைக்கால் ரயில் பாதையைத்தான் தற்போது மின் மயமாக்கத் திட்டமிட்டு அதற்கான பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகின்றன.

இதன் மொத்த தூரம் 153 கிலோ மீட்டர் ஆகும். மின் மயமாக்கும் பணிக்காக ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணியை ரயில்வேயின் மின்மயமாக்கல் பிரிவு மேற்கொண்டுள்ளது. முதல்கட்டமாகத் தஞ்சை - திருச்சி இடையே இரு வழிப்பாதைகள் இரண்டு வழித்தடத்திலும் மின் மயமாக்கல் பணிகள் முடிவுபெற்றுள்ளன. இந்தப் பாதையில் ஒரு வழிப்பாதைக்கு தலா 1,200 உயர் மின் கம்பம் என 2,400 மின் கம்பங்கள் நடப்பட்டுள்ளன. அடுத்து இரண்டாம் கட்டமாகத் தஞ்சை - திருவாரூர் வரை பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

ரயில்
ரயில்

மூன்றாம் கட்டமாகத் திருவாரூர் வழித்தடத்தில் சாலியமங்கலத்திலிருந்து காரைக்கால் வரை மின்மயமாக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்துகொண்டிருக்கின்றன. இதற்காக மின் கம்பங்கள் நடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. நாகை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் துணை மின் நிலையம் அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. பணிகள் இன்னும் சில மாதங்களில் நிறைவு பெற்றவுடன் சோதனை ஓட்டம் நடைபெறும். அது முடிந்த பின்னர் திருச்சி - காரைக்கால் வழித்தடத்தில் மின்சார ரயில்கள் சேவை நடைபெறும். இதனால் பயணிகளின் பயண நேரம் மிச்சமாகும். அதேபோல் வேளாங்கண்ணி, நாகூர், திருநள்ளாறு போன்ற மூன்று மத தலங்களுக்கு சுற்றுலா வந்து செல்வோர்க்கும் இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.