Published:Updated:

`ஊரடங்கிலும் குறையாத குற்றச் சம்பவங்கள்!' - 4 இன்ஸ்பெக்டர்களை மாற்றிய திருச்சி கமிஷனர்

திருச்சி மாநகர காவல் ஆணையர் வரதராஜு
திருச்சி மாநகர காவல் ஆணையர் வரதராஜு

திருச்சியில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளபோதும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் திருச்சி மாநகரில் பணியாற்றும் நான்கு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

காரில் கஞ்சா கடத்தல்

திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே நேற்று மாலை திருச்சி கோட்டை போலீஸ் எஸ்.ஐ தயாளன் தலைமையிலான போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே வந்த கார் ஒன்று போலீஸாரைக் கண்டதும் சாலையோரத்தில் ஓரம் கட்டியது. இதில் சந்தேகமடைந்த போலீஸார் காரை சோதனையிட்டுள்ளனர்.

திருச்சி விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை
திருச்சி விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை

காரில் வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் இருவரும் முன்னுக்குப் பின் முரணாகத் தகவலளித்தனர். அதையடுத்து அந்தக் காரை சோதனை செய்ததில், காரில் ஒன்றரை கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. போலீஸாரின் விசாரணையில் அவர்கள், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தனசேகரன் மற்றும் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த அர்ஜுன் என்பது தெரியவந்தது. அவர்களை போலீஸார் கைது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கொரோனா பரவலை தடுத்திட ஊரடங்கு உத்தரவு அமலிலுள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தில் பலர் வெளியில் சுற்றித் திரிவது காணமுடிகிறது. இதையடுத்து திருச்சி மாநகர ஆணையர் வரதராஜு மற்றும் திருச்சி மாவட்ட எஸ்.பி ஜியா உல்ஹக் ஆகியோர் சட்டத்தை மதிக்காமல் வெளியில் சுற்றித் திரியும் நபர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளனர்.

பசி பட்டினி.. தூங்காத இரவுகள்.. 50 நாட்களுக்கு பிறகு ஊர் திரும்பிய தமிழர்கள் வேதனை!

அந்தவகையில், நேற்று மட்டும் 173 பேர் மீது 165 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 115 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், போக்குவரத்து விதிகளை மீறிய சுமார் 500 பேர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

திருச்சி மாவட்டத்தில் கடந்த மார்ச் 27-ம் தேதி முதல் நேற்று வரை ஊரடங்கு உத்தரவை மீறி 19,633 பேர் மீது 18,096 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 15,652 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாமல் போக்குவரத்து விதிகளை மீறிய 44,992 பேர் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

போலீஸார்
போலீஸார்

மேலும், முசிறி, மணப்பாறை, துவாக்குடி பகுதியில் போலீஸார் நடத்திய தீவிர மதுவேட்டையில், சட்டத்துக்கு விரோதமாக மதுவிற்பனையில் ஈடுபட்ட 4 பேர் மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களிடமிருந்து 107 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுமட்டுமல்லாமல் நேற்றுவரை 103 கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன.

இது ஒருபுறம் இருக்க, திருச்சி மாநகர காவல் ஆணையர் வரதராஜு, திருச்சி மாநகரத்தில் பணியாற்றும் 4 காவல் ஆய்வாளர்களைப் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி கே.கே.நகர் பகுதியில், பலர் சட்டவிரோதமாக வெளியில் சுற்றுவதாகத் தகவலறிந்த காவல் ஆணையர் ஓப்பன் மைக்கில் போலீஸாரைக் கடுமையாக எச்சரித்தார். தொடர்ந்து, கடந்த இரு தினங்களுக்கு முன்பே கே.கே.நகர் பகுதியில் இரு கும்பல் மதுபோதையில் பல மணிநேரம் ரகளையில் ஈடுபட்டது. இந்த மோதலில் வாகனம் தீவைக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

போலீஸ் பிடித்த டாஸ்மாக் மது
போலீஸ் பிடித்த டாஸ்மாக் மது

இந்தச் சம்பவத்தைத் தடுக்கத் தவறியதாகக் குற்றச்சாட்டு எழவே, மீண்டும் ஓப்பன் மைக்கில் போலீஸாரைக் கடுமையாகத் திட்டித் தீர்த்தார். இதையடுத்து, கே.கே.நகர் இன்ஸ்பெக்டர் சகாய அன்பரசு மற்றும் நுண்ணறிவுபிரிவு காவலர் உள்ளிட்டோரை ஆயுதபடைக்கு மாற்றினர்.

இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்

இதைத் தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் முருகவேல் திருச்சி மாநகர நுண்ணறிவு பிரிவு ஆய்வாளராகவும், திருச்சி மாநகர பாதுகாப்பு பிரிவு காவல் ஆய்வாளரான வெங்கடாசலம் பொன்மலைக்கும், பொன்மலையில் பணியாற்றிய காவல் ஆய்வாளர் ரமேஷ் கே.கே.நகருக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இரு தினங்களுக்கு முன்பு ஆயுதபடைக்கு மாற்றப்பட்ட சகாய அன்பரசு, பொன்மலை காவல் ஆய்வாளராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்.

இது வழக்கமான மாற்றம் எனப் போலீஸ் தரப்பு கூறினாலும், கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஓப்பன் மைக்கில் போலீஸாரை கமிஷனர் சத்தம் போட்டதும் அதன் தொடர்ச்சியாக 4 காவல் ஆய்வாளர்களை அதிரடியாக மாற்றம் செய்ததும் திருச்சி போலீஸார் மத்தியில் விவாதப் பொருளாகியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு