Published:Updated:

`சாப்பிட்டு 2 நாளாச்சு; ஒடிசாவுக்கு நடந்தே போகிறோம்!’ - போலீஸாரைப் பதறவைத்த இளைஞர்கள்

 வடமாநில இளைஞர்கள்
வடமாநில இளைஞர்கள்

``ஊரடங்கு உத்தரவால் நாங்கள் பணியாற்றிய கம்பெனி மூடப்பட்டதால், வேலையும் இல்லை. அதனால் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் போச்சு. அதனால் ஊருக்கு நடந்தே போகிறோம்” எனத் திருச்சி போலீஸாரை அதிர வைத்தார்கள் ஒடிசாவைச் சேர்ந்த 6 இளைஞர்கள்.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கடந்த 42 நாள்களாக மக்கள் வீடுகளில் முடங்கியிருக்கும் சூழல் நிலவுகிறது. நிறுவனங்கள் மூடிக்கிடப்பதால் தொழிலாளர்கள் பலரும் வேலையின்றியும் வருமானமின்றி தவிக்கிறார்கள். இந்நிலையில், தமிழகத்தில் வேலை செய்துவரும் வட மாநில இளைஞர்கள், தங்களைச் சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்கும்படி திருப்பூர், கோவை மாவட்டங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தகவலறிந்த மத்திய மாநில அரசுகள், சொந்த ஊருக்குச் செல்ல விரும்பும் வடமாநில தொழிலாளர்களை ரயில் மற்றும் பேருந்துகள் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்திட ஏற்பாடு செய்துள்ளது.

 வடமாநில இளைஞர்கள்
வடமாநில இளைஞர்கள்

இந்நிலையில் திருச்சி கொள்ளிடம் பாலம் வழியே இளைஞர்கள் 6 நடந்து சென்றிருக்கிறார்கள். அங்கு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் கவனித்து, அவர்களை அழைத்து விசாரித்தனர்.

அவர்கள் 6 பேரும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மாஹி நாயக், அலேகா நாயக், குமார் சன் நாயக், கணேஷ் மனோரா, வேணுதர் நாயக் உள்ளிட்டோர் என்பதும், இவர்கள் அனைவரும் திருச்சி மாவட்டம் முசிறி அடுத்துள்ள அணைப்பட்டியில் உள்ள உரத் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்ததாகக் கூறினர்.

மேலும் ஊரடங்கு உத்தரவு காரணமாக அந்த கம்பெனி மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் கம்பெனி நிர்வாகம், தற்போதைக்கு தொழிற்சாலை இயங்க வாய்ப்பில்லை என்று கூறி, அவர்களைச் சொந்த ஊருக்குச் செல்லும்படி அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

 வடமாநில இளைஞர்கள்
வடமாநில இளைஞர்கள்

இதையடுத்து அவர்கள் 6 பேரும் தாங்கள் வைத்திருந்த பொருள்களை வைத்து சமைத்து சாப்பிட்டு வந்தாகவும், அவை தீர்ந்துபோனதால், கையில் பணமில்லாமல் கடந்த சில தினங்களாக சாப்பிட வழியில்லாமல் இருந்தோம். அதனால் என்ன நடந்தாலும் பரவாயில்லை என முடிவு செய்து எங்களின் ஊருக்கு நடந்து செல்கிறோம்” என அந்த இளைஞர்கள் கூற போலீஸார் பதறிப்போனார்கள்.

அதைத் தொடர்ந்து, ஸ்ரீரங்கம் தாசில்தாருக்கு தகவலளித்த போலீஸார், அவர்களை அவரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. அதையடுத்து ஸ்ரீரங்கம் தாசில்தார், அந்த இளைஞர்கள் வேலை செய்த தொழிற்சாலையின் உரிமையாளரை வரவழைத்து அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை மீண்டும் முசிறிக்கே அனுப்பி வைத்தனர்.

`ஊரடங்கில் தளர்வு; காற்றில் பறந்த கட்டுப்பாடுகள்!’ - போக்குவரத்து நெரிசலால் திணறிய திருச்சி

ஊரடங்கு உத்தரவு முடியும்வரை தொழிலாளர்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்றும், அவர்களைத் தங்களின் பாதுகாப்பில் வைத்திருக்க வேண்டும் என்று தொழிற்சாலையின் உரிமையாளருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இதைக்கேட்ட வடமாநில தொழிலாளர்கள் போலீஸாருக்கும் வருவாய் துறை அதிகாரிகளுக்கும் நன்றியோடு கையெடுத்து கும்பிட்டபடி கிளம்பினர்.

அடுத்த கட்டுரைக்கு