Published:Updated:

`9 நாளா நடக்கிறோம்.. சாப்பிட்டு 2 நாள் ஆச்சு!’ -கலங்கிய தொழிலாளர்களை நெகிழ வைத்த திருச்சி போலீஸார்

திருச்சி போலீஸாரின் மனித நேயம் கூலித் தொழிலாளிகள்
திருச்சி போலீஸாரின் மனித நேயம் கூலித் தொழிலாளிகள்

கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக டி.ஜி.பி திரிபாதி, தமிழக போலீஸாருக்கு 22 கட்டளைகளைப் பிறப்பித்தார். அதனாலோ என்னவோ, போலீஸாரின் நடவடிக்கைகளில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவின் காரணமாக மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலை. அதிலும் தினக் கூலி தொழிலாளர்கள் முற்றிலும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் செய்வதறியாமல் தவிக்கிறார்கள்.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு மே 3-ம் தேதி வரை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஆங்காங்கே வேலை செய்த கூலித் தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊருக்கு நடந்தே செல்லும் அவலங்கள் வடமாநிலங்களைப்போல தமிழகத்திலும் தொடர்கதையாகி வருகின்றன.

190 கிலோ மீட்டர் நடைப்பயணம்!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர், நாகப்பட்டினம் அடுத்த வேளாங்கண்ணி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள செங்கல் சூளை ஒன்றில் கூலி வேலை செய்து வந்தனர். ஊரடங்கு உத்தரவால் வேலை ஏதும் இல்லாத நிலையில் அவர்கள் அனைவரும் தங்களின் சொந்த ஊரான ஒட்டன்சத்திரம் நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.

கடந்த 9 நாள்களாக நடந்துவந்த அவர்கள், திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மஞ்சம்பட்டி அருகே சென்றுகொண்டிருந்தபோது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மணப்பாறை போலீஸார் அவர்களைத் தடுத்து விசாரித்தனர்.

கூலித் தொழிலாளிகள்
கூலித் தொழிலாளிகள்

அப்போது அவர்கள், ``நாங்கள் அனைவரும் கடந்த 9 நாள்களாக வேளாங்கண்ணியில் இருந்து நடந்து வருகிறோம். கடந்த இரண்டு நாள்களாக எதுவும் சாப்பிடவில்லை. அதனால் மெதுவாக நடந்துபோகிறோம்” எனக் கூறினர்.

அதைக் கேட்டுப் பதறிய போலீஸார், அவர்களுக்கு உணவு வாங்கிக் கொடுத்ததுடன், அவர்கள் வைத்திருந்த பணத்தை சேகரித்து அந்தத் தொழிலாளர்களிடம் கொடுத்ததுடன், அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி, அதில் ஏற்றி ஒட்டன்சத்திரம் அனுப்பி வைத்தனர்.

ஆந்திராவிலிருந்து நடந்து வந்தோம்!

இதேபோல் இன்னொரு சம்பவம். தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியைச் சேர்ந்த 10 இளைஞர்கள் ஆந்திராவில் கூலி வேலை செய்து வந்தனர். இவர்களும் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட நிலையில், சொந்த ஊருக்குச் செல்ல முடிவெடுத்துக் கடந்த வாரம் ஆந்திராவில் இருந்து நடக்க ஆரம்பித்தனர்.

தமிழக -ஆந்திர எல்லையில் அவர்களுக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, அங்கிருந்து நடந்தே வரும் அந்தத் தொழிலாளர்கள், நேற்று மாலை திருச்சி மாவட்டம் எல்லையான குண்டூர் அருகே வந்தனர். சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த அவர்களிடம் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் விசாரித்தனர்.

நடந்த அனைத்தையும் கேட்ட திருச்சி போலீஸார் அவர்களை அங்குள்ள கோயில் மைதானத்தில் தங்க வைத்து, 10 பேருக்கும் உணவு அளித்தனர். தொடர்ந்து, அவ்வழியே போராவூரணி செல்லும் வாகனத்தை வழிமறித்து அவர்கள் அனைவரையும் அவர்களின் சொந்த ஊரான பேராவூரணிக்கு அனுப்பி வைத்தனர்.

கர்ப்பிணியின் உயிரைக் காப்பாற்றிய காவலர்!

திருச்சி மாவட்டம், மணப்பாறை காமராஜர் சிலை அருகே அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடியில் மணப்பாறை காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் சையது அபுதாஹீர், கடந்த சில தினங்களுக்கு முன்பு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே கர்ப்பிணி ஒருவரும் அவரின் கணவர் ஏழுமலை என்பவரும் நடந்து வந்துகொண்டிருக்க, அவர்களிடம் காவலர் சையது அபுதாஹீர் விசாரித்தார்.

காவலரை பாராட்டும் எஸ்.பி ஜியாவுல் ஹக்
காவலரை பாராட்டும் எஸ்.பி ஜியாவுல் ஹக்

அப்போது ஏழுமலை, தனது மனைவிக்குப் பிரசவ நேரம், மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பிரசவம் பார்க்க வந்ததாகவும், மருத்துவமனை நிர்வாகமோ, ஓ பாசிட்டிவ் ரத்தம் தேவை, ரத்தம் கிடைத்தால் பிரசவம் பார்த்துவிடலாம் எனக் கூறுகிறார்கள். ஊரடங்கு உத்தரவு காரணமாக என்ன செய்வது எனத் தெரியவில்லை. அதனால் மீண்டும் ஊருக்குத் திரும்பிச் சென்றுகொண்டிருக்கிறோம் என்றாராம். இதைக்கேட்ட காவலர் சையது அபுதாஹிர், தனக்கும் அதே வகை ரத்தம்தான் எனக் கூறியதுடன், அவர்களைக் கையோடு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றவர் ரத்ததானம் செய்தார். அதையடுத்து கர்ப்பிணிக்கு நல்லமுறையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த திருச்சி எஸ்.பி ஜியாவுல் ஹக் காவலர் சையது அபுதாஹிரை அழைத்து நேரில் பாராட்டியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு