Published:Updated:

மனநலம் பாதித்தவர்களை நெகிழச்செய்த திருச்சி போலீஸார்!

ஆதரவற்ற நிலையில், 'யாசகம்' கேட்டுத் திரிந்த 50-க்கும் மேற்பட்டவர்களை மீட்டு, அவர்களின் குடும்பத்தாரோடு சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள திருச்சி போலீஸாருக்கு வாழ்த்துகள் குவிகின்றன.

திருச்சி போலீஸார்
திருச்சி போலீஸார்
"வசதியான குடும்பத்தில் பிறந்தேன். எனது போதாத காலம் கணவர் சரியில்லை. வீட்டை விட்டு என்னைத் துரத்திவிட்டார். ஒரு விபத்தில் காயமடைந்த என்னை ரயிலில் ஏற்றி அனுப்பிவிட்டார்கள். அதனால் திருச்சிக்கு வந்தேன். உழைத்து வாழ ஆசைப்பட்ட என்னை இப்படி பிச்சை எடுக்க வைச்சிட்டாங்க!”

- திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், கையேந்தி யாசகம் கேட்கும் மஞ்சுளாவின் வலி நிறைந்த வார்த்தைகள் இவை.

திருச்சி போலீஸாருடன் பாதிக்கப்பட்டோர்...
திருச்சி போலீஸாருடன் பாதிக்கப்பட்டோர்...

திருச்சி மாநகரப் பகுதிகளில் மனநலம் பாதிக்கப்பட்டும், ஆதரவற்ற நிலையிலும் பலர் சுற்றித் திரிந்தனர். இந்த நிலையில் அவர்களைத் திருச்சி போலீஸார் மற்றும் திருச்சி ரயில்வே துறை இணைந்து தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் குடும்பத்துடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, திருச்சி ரயில்வே நிலையம் பகுதியைச் சுற்றித்திரிந்த பிச்சைக்காரர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் முதியவர்கள் உள்ளிட்ட 10 பேரை திருச்சி ரயில்வே நிலைய பாதுகாப்பு படை போலீஸார் இன்ஸ்பெக்டர் சுஜித் குமார், எஸ் ஐ மனோகரன், முரளி ஆகியோர் அடங்கிய குழுவினர் மீட்டனர். தொடர்ந்து அவர்கள், திருச்சி கிராப்பட்டி பகுதியிலுள்ள 'ஹீடு இந்தியா' (Heed India) எனும் தொண்டு நிறுவனத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அந்தப் பத்துப் பேரில் ஒரு முதியவர், பிச்சை எடுத்து 16 ஆயிரம் ரூபாய் சேகரித்து வைத்திருந்தது தெரியவந்தது.

பாதிக்கப்பட்டோர்...
பாதிக்கப்பட்டோர்...

தொடர்ந்து, அவர்களுடன் தொண்டு நிறுவனத்தார் பேசியதில், திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் மற்றும் கடலூர் மாவட்டம், தொழுதூர் அடுத்த கீழக்கல்பூண்டியைச் சேர்ந்த முத்துசாமி ஆகியோர் குறித்த விவரம் தெரிந்தது. அவர்களின் விருப்பத்தோடு, அடுத்தசில தினங்களில் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டார்கள். குடும்பத்தாரைக் கண்டதும், முத்துசாமியும், முருகானந்தமும் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.

நம்மிடம் பேசிய தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் ராஜா, "அடுத்தடுத்த முயற்சிகளில் முருகானந்தம் மற்றும் முத்துசாமி ஆகியோர் குறித்து தகவல்கள் தெரியவந்தது. அவர்களின் விருப்பப் படி அவர்களின் குடும்பத்தாரிடம் ஒப்படைத்துள்ளோம். மேலும் திருச்சி மாநகரத்தில் ஆதரவற்ற நிலையில் ஏராளமானோர் சுற்றித்திரிகிறார்கள்.

குடும்பத்தாருடன் முருகானந்தம்
குடும்பத்தாருடன் முருகானந்தம்
தம்பி ஜனாதிபதி... அண்ணன் பிரதமர்... இலங்கையில் ஓங்கும் ராஜபக்‌சேக்களின் ஆதிக்கம்!

அவர்களையும் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க முயற்சி எடுத்துவருகிறோம். தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை ஒத்துழைப்பு வழங்கினால் 90 நாள்களில் பிச்சைக்காரர்கள், முதியோர், ஆதரவற்றோர் இல்லாத நகரமாகத் திருச்சியை மாற்றிட முடியும்” என்றார்.

அடுத்து, திருச்சி மாவட்டக் காவல்துறை களத்தில் இறங்கியது. திருச்சி அன்பாலயம் இல்லத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் தங்க வைக்கப்பட்டுள்ள 51 பேரின் குடும்பத்தாரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

மகனுடன் முத்துசாமி
மகனுடன் முத்துசாமி

திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட டி.ஐ.ஜி., பாலகிருஷ்ணன், எஸ்.பி., ஜியாவுல் ஹக், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன், குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் அஜீம், அன்பாலயம் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் செந்தில் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய டி.ஐ.ஜி., பாலகிருஷ்ணன்,

"திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சுற்றி வருகிறார்கள். மனநலம் பாதிக்கப்பட்ட இவர்கள் குடும்பத்தை விட்டுப் பிரிந்து ரயில் அல்லது பேருந்தில் ஏறி திருச்சி வந்துள்ளார்கள். அப்படிப்பட்ட இவர்களின் குடும்பத்தினரைக் கண்டறிவதில் சிரமம் உள்ளது.

எதேச்சையாக அவர்களின் உறவினர்களோ அல்லது நண்பர்களோ பார்க்கும்போதுதான் இவர்களின் குடும்பத்தைப் பற்றிய தகவல் தெரியவருகிறது. இதனால் சம்பந்தப்பட்டவர்களை குடும்பத்தாருடன் சேர்ப்பது மிகவும் சவாலாக உள்ளது.

கரீபியன் தீவில் நித்யானந்தா... ஸ்கெட்ச் போட்ட `ரா'! இனி என்ன நடக்கும்? #VikatanExclusive

இவர்களின் நம்பிக்கைக்குரியவராக இருந்தால் மட்டுமே ஏதாவது தகவல்கள் கிடைக்கும். மிகவும் கவனமாகப் பேசி விவரங்களைப் பெறவேண்டும்" என்றவர், "கிடைக்கும் தகவல்களைக் கொண்டு அந்தந்த மாநில போலீஸாரின் உதவியுடன் குடும்பத்தாரைக் கண்டறிந்து சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

தொடர்ந்து, குழுக்களாகப் பிரிந்த திருச்சி போலீஸார் மற்றும் திருச்சி மாவட்ட ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அன்பாலயத்தில் தங்கியிருந்து 51 மனநலம் பாதிக்கப்பட்டவர்களிடம் பேச்சு கொடுத்தனர்.

அதில், தமிழகம் மட்டுமல்லாமல் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்காளம், ஒரிசா, கர்நாடகம் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இருப்பது தெரிந்தது.

காயத்திரியின் குடும்பத்தார்
காயத்திரியின் குடும்பத்தார்

ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியைச் சேர்ந்த சீனம்மா,

"எனக்குச் சொந்தமான சொத்தை அபகரிக்கும் நோக்கத்தில் உறவினர்கள் என்னை வீட்டை விட்டு விரட்டி அடித்துவிட்டனர். போக வழி இல்லாமல் ரயில் ஏறி திருச்சி வந்தேன். கடந்த சில வருடங்களாக இங்கே பிச்சை எடுத்துப் பிழைப்பு நடத்தி வருகிறேன்” என்றார். ஆனால் அவரின் முகவரி சொல்லத் தெரியவில்லை. தொடர்ந்து அவரிடம் தகவல்களைப் பெற முயற்சி செய்து வருகிறார்கள்.

இன்னொருவரான மஞ்சுளா,

"கர்நாடக மாநிலம் கதக் மாவட்டம்தான் எனது சொந்த ஊர். நல்ல வசதியான குடும்பம். முறைப்படி வரன் பார்த்த எனது பெற்றோர், எனக்குத் திருமணம் செய்து வைத்தனர். ஆனால் எனது கணவர் சரியில்லை. தொடர்ந்து பிரச்னை, ஒரு கட்டத்தில் என்னை வீட்டை விட்டு விரட்டி விட்டார். உழைத்து வாழ ஆசைப்பட்டு, கர்நாடக மாநிலம் ஜூப்ளி பகுதியிலுள்ள ஒரு கடையில் வேலை பார்த்தேன். அந்தக் கடையில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் காலில் அடிபட்டது. அதைத்தொடர்ந்து, அந்தக் கடைக்காரர்கள் என்னை ரயிலில் ஏற்றி அனுப்பி வைத்துவிட்டார்கள். மொழி தெரியாத ஊருக்கு வந்து ஏராளமான கஷ்டங்களை அனுபவித்து விட்டேன்” எனக் கதறி அழுதார்.

`பரிதாபமாக சாலையில் அலைந்து கொண்டிருந்தார்!’- மனநலம் பாதித்தவரை மீட்டு நெகிழ வைத்த கரூர் அமைப்புகள்

ஆனால் மஞ்சுளாவின் குடும்பத்தார் மற்றும் தெருப் பெயர் உள்ளிட்டவை அவருக்குக் கூறுவதற்குத் தெரியவில்லை.

இதேபோல் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரிடம் பேசி பெறப்பட்ட தகவல் அடிப்படையில், அம்மாநில போலீஸார் உதவியுடன் அவரை அவரது குடும்பத்தாருடன் சேர்த்து வைப்பதற்கான முயற்சியில் திருச்சி போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

"திருச்சி மாவட்ட போலீஸாருடன் இணைந்து நாங்கள் எடுத்த முயற்சியின் பலனாய் 13 பேரின் குடும்பம் பற்றிய தகவல் தெரிந்துள்ளது. 5 வருடங்களுக்குப் பிறகு காயத்திரி அவரின் குடும்பத்தாருடன் இணைந்துள்ளார்!"
செந்தில்குமார்

இதனிடையே போலீஸார் எடுத்த முயற்சிகளின் பலனாய், மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த காயத்திரியின் குடும்பத்தார் பற்றிய விவரங்கள் தெரியவந்தது. தொடர்ந்து அவரது குடும்பத்தாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. நேற்று மாலை திருச்சி வந்த காயத்திரியின் குடும்பத்தார், அன்பாலயத்தில் இருந்த காயத்திரிக்குப் பணிவிடைகள் செய்தனர்.

அன்பாலயம் செந்தில்குமார்
அன்பாலயம் செந்தில்குமார்

இதுகுறித்து அன்பாலயம் செந்தில்குமார்,

"திருச்சி மாவட்ட போலீஸாருடன் இணைந்து நாங்கள் எடுத்த முயற்சியின் பலனாய் 13 பேரின் குடும்பம் பற்றிய தகவல் தெரிந்துள்ளது. 5 வருடங்களுக்குப் பிறகு காயத்திரி அவரின் குடும்பத்தாருடன் இணைந்துள்ளார். குடும்பத்தாரைப் பார்த்ததும், காயத்திரிக்கு அவ்வளவு சந்தோசம். அவ்வளவு அன்பான குடும்பம். ஏதோ ஒரு சந்தர்ப்பங்களில் குடும்பங்களைப் பிரிந்து இவர்கள் படும் துயரங்களை வார்த்தைகளால் சொல்ல முடியாது. முடிந்தளவுக்கு ஆதரவற்று திரிபவர்களைக் கண்டறிந்து அவர்களின் குடும்பத்தாருடன் இணைத்து வைக்கும் முயற்சிகளை மேற்கொண்டுவருகிறோம். காவல்துறையுடன் இணைந்து பணியாற்றுவதால் கூடுதல் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது" என்றார்.

ஆதரவில்லாமல் வீதியில் யாசகம் கேட்டு திரிந்தவர்களை மீட்டு, அவர்களைக் குடும்பத்துடன் சேர்த்து வைக்கும் திருச்சி போலீஸாரின் நடவடிக்கைகளுக்குப் பாராட்டுகள் குவிகின்றன.