Published:Updated:

`நீர்நிலைகளைக் காப்போம்!' - காவிரி நீரை மலர்த்தூவி வரவேற்ற பள்ளி மாணவர்கள்

சி.ய.ஆனந்தகுமார்
என்.ஜி.மணிகண்டன்

பள்ளி மாணவர்கள் திரண்டு வந்து காவிரியை மலர்த்தூவி வரவேற்று, ``நீர்நிலைகளைக் காப்போம்" என்பது உள்ளிட்ட வாசகங்களை முழங்கினர்.

Students
Students

கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக காவிரியில் வெள்ளம் வருகிறது. அதனடிப்படையில் மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்காக கடந்த சிலதினங்களுக்கு முன்பு, தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்போது திருச்சி வழியாக டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பாசன நிலங்களுக்கு வாய்க்கால்கள் மூலம் தண்ணீர் செல்கிறது.

மலர்த்தூவி காவிரி நீரை வரவேற்ற மாணவர்கள்
மலர்த்தூவி காவிரி நீரை வரவேற்ற மாணவர்கள்

குறிப்பாகக் கரூர் மாவட்டம், மாயனூர் தடுப்பணையிலிருந்து, முதற்கட்டமாக விநாடிக்கு 100 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும் என்றும், தொடர்ந்து 137 நாள்களுக்குத் தண்ணீர் திறந்து விடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள 13,138 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாகவும், 9,464 ஏக்கர் விவசாய நிலங்கள் அப்பகுதியில் உள்ள 107 குளங்கள் மூலம் பாசன வசதி பெறும் எனவும், தண்ணீரை மிகச் சிக்கனமாகப் பயன்படுத்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளார்கள்.

அந்த வகையில் திருச்சி, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பாசனப் பயன்பாட்டுக்காக திருச்சி மாவட்டம் வாத்தலை அருகே உள்ள புள்ளம்பாடி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் அல்லித்துறை வாய்க்காலிலும் தண்ணீர் விடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து விவசாயிகள் சம்பா சாகுபடிக்கு தயாராகி வருகிறார்கள்.

காவிரி நீரை மலர்த்தூவி வரவேற்ற மாணவர்கள்
காவிரி நீரை மலர்த்தூவி வரவேற்ற மாணவர்கள்

திருச்சி மாவட்டம், அல்லித்துறைப் பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ பள்ளி மாணவர்கள், தங்கள் பகுதி பாசனத்திற்காகத் திறந்துவிடப்பட்டுள்ள காவிரி நீரை, ஆசிரியர்களுடன் திரண்டு வந்து மலர்த்தூவி வரவேற்றனர். தொடர்ந்து அவர்கள், ``ஆறு, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளைக் காப்போம்” என அங்கேயே உறுதிமொழி எடுத்துக்கொண்டு கலைந்து சென்றனர்.

“நீர்நிலைகளைப் பாதுகாப்போம். நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டமாட்டோம்"
மலர்த்தூவி காவிரி நீரை வரவேற்ற மாணவர்கள்

இதைப் போலவே அதவத்தூர் பகுதியில் உள்ள கிறிஸ்துவ மானிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுடன் சகிதமாக ஊர்வலமாக வந்து, அப்பகுதி வாய்க்காலில் வரும் காவிரி நீரை மலர்த்தூவி வரவேற்றனர். தொடர்ந்து மாணவர்கள், ``நீர்நிலைகளைப் பாதுகாப்போம் என்றும். நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டமாட்டோம்” என்றும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

`நீர்நிலைகளைக் காப்போம்!' - காவிரி நீரை மலர்த்தூவி வரவேற்ற பள்ளி மாணவர்கள்

பள்ளி மாணவர்கள் திரண்டுவந்து காவிரி நீரை மலர்த்தூவி வரவேற்றும், நீர்நிலைகளைப் பாதுகாக்க குப்பைகளை நீர்நிலைகளுக்குள் கொட்ட மாட்டோம்” என உறுதிமொழி எடுத்துக்கொண்டது பெரும் நம்பிக்கையைத் தருகிறது.

மழைக் காலத்தை வரவேற்போம்..

பள்ளி மாணவர்கள் காவிரியை மலர்த் தூவி வரவேற்றது ஒருபுறம் எனில், திருச்சி மாவட்டம் மணிகண்டம் பகுதியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான பராமரிப்பு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மழைக்காலத்தை மாணவர்கள் வரவேற்க வேண்டும் என அறிவுரை கூறப்பட்டது.

குடைகளுடன் மாணவர்கள்
குடைகளுடன் மாணவர்கள்

தொடர்ந்து சுமார் 20க்கும்மேற்பட்ட மாணவர்களுக்கு ஆசிரியர்கள் குடைகளை வழங்கினர். மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட குடைகளுடன் கிளம்பினார்கள். அடுத்த சில நிமிடங்களில் அப்பகுதியில் லேசான மழைச் சாரல் விழவே, மாணவர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார்கள்.