Election bannerElection banner
Published:Updated:

`கொரோனாவுக்காக கொலைக் குற்றவாளிகளைகூட வெளியில் விட்டாங்க; ஆனால் எங்களை விடல!’- கொதிக்கும் அகதிகள்

போராடும் சிறப்பு அகதிகள் முகாம்வாசிகள்
போராடும் சிறப்பு அகதிகள் முகாம்வாசிகள்

`கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாகச் சிறைகளில் இருந்து கொலைக் குற்றவாளிகளைக்கூட பிணையில் விட்டார்கள். எங்களை வெளியில் விட மறுக்கிறது அரசு’ எனப்  போராட்டத்தில் குதித்துள்ளனர் திருச்சி சிறப்பு அகதிகள் முகாம் வாசிகள்.

திருச்சி சுப்பிரமணியபுரத்தில் மத்தியச் சிறைச்சாலை வளாகத்தில், சிறப்பு அகதிகள் முகாம் செயல்பட்டுவருகிறது. இங்கு குற்ற வழக்குகளில் சிக்கிய இலங்கைத் தமிழர்கள், வங்கதேசம், நைஜீரியா, லண்டன், கொரியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த சுமார் 90-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சிறப்பு முகாம் சிறைச்சாலையைப்போல் இல்லாமல், அனைத்து வசதிகளும் உள்ள விடுதியைப்போன்று இருக்கும். கூடவே 24 மணி நேரக் காவல் கண்காணிப்பு இருக்கும்.

இங்குள்ள வெளிநாட்டுக் கைதிகள், `வழக்கு முடிந்தும் தங்களை சிறப்பு முகாமில் அடைத்து வைத்துள்ளதால், சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும்' என்று அவ்வப்போது பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.

போராடும் சிறப்பு அகதிகள் முகாம்வாசிகள்
போராடும் சிறப்பு அகதிகள் முகாம்வாசிகள்

அரசு கவனம் செலுத்தாததால், கடந்த நவம்பர் மாதம், 19 சிறப்பு முகாம் வாசிகள் ஒரே நேரத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். அவர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு காப்பாற்றப்பட்டனர். தொடர்ந்து, அரசு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கிறோம் என வாக்குறுதிக் கொடுத்ததை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. ஆனாலும், அதன்பிறகு அரசு கண்டுகொள்ளவில்லையாம்.

இந்த நிலையில், திருச்சி சிறப்பு அகதிகள் முகாமில் உள்ள சுமார் 60-க்கும் மேற்பட்டோர் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர். இன்று காலை முதல் சிறப்பு அகதிகள் வளாகத்தில் நடந்துவரும் இந்தப் போராட்டத்தில் தங்களை விடுவிக்கும்படி தொடர் முழக்கமிட்டு வருகிறார்கள்.

நம்மிடம் பேசிய முகாம் வாசிகள், ``கடந்த சில வருடங்களாக இங்கிருந்து யாரையும் வெளியே விட மறுக்கிறார்கள். நாங்கள் போராட்டத்தில் குதிக்கும் ஒவ்வொரு முறை எதையாவது சொல்லி எங்களின் போராட்டங்களை வாபஸ் வாங்க வைக்கும் அதிகாரிகள், அதன்பிறகு எங்களைக் கண்டுகொள்வதே இல்லை.

போராடும் சிறப்பு அகதிகள் முகாம்வாசிகள்
போராடும் சிறப்பு அகதிகள் முகாம்வாசிகள்

கடந்த நவம்பர் மாதம் முகாமில் இருந்த 19 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். அப்போதும் ஒரு மாதத்துக்குள் எங்களை அனுப்பி வைப்பதாக அதிகாரிகள் கூறினர். அடுத்து கொரோனா ஊரடங்கைக் காரணம் காட்டி, அரசு முடிவெடுக்க முடியவில்லை என்றார்கள்.

திருச்சி மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து கொலைக்குற்றம் உள்ளிட்ட கொடுங்குற்றம் செய்தவர்களை கூட வெளியில் குடும்பத்தோடு இருக்க அனுப்பி வைத்தார்கள். ஆனால், எங்களை விடவில்லை. இன்றுகூட ஆர்.டி.ஓ மற்றும் ஏ.சி மணிகண்டன் உள்ளிட்டோர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அவர்களும் கால அவகாசம் கேட்டுத்தான் பேசுகிறார்கள்.

இங்கு தங்கியுள்ளவர்களில் 30 பேர் போலி பாஸ்போர்ட் வழக்குகளிலும், 20 பேர் மீது மற்ற குற்ற வழக்குகள் உள்ளதால் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வழக்கமாக பாஸ்போர்ட் வழக்கு என்றால் 6 மாதம் முதல் 1 வருடம்தான் சிறைத் தண்டனை. ஆனால், இவர்கள் வருடக்கணக்கில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

`ஏய்..வீட்டுல வைச்சு சாராயமா விக்கறே?' -திருச்சி போலீஸ் நடவடிக்கையால் விபரீத முடிவெடுத்த பார் ஊழியர்

இன்னமும் பல வழக்குகளில் குற்றப்பத்திரிகைகூட தாக்கல் செய்யப்படவில்லை. இங்குள்ள 35 பேருக்கு குடும்பம் உள்ளது. குடும்பத்தை விட்டா நாங்கள் ஓடிப்போகப் போகிறோம். இல்லை இலங்கைக்குப் போய்விடுவோம் என்றால், நாங்கள் சுலபமாக எல்லை தாண்டிப் போகும் அளவுக்குத்தான் இந்தியா பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறதா?

எங்களில் பலர் இங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள். இந்தியாவை நம்பி வந்த எங்களை இப்படி சித்ரவதை செய்கிறார்கள். இந்தக் கொடூர கொரோனா காலத்திலும் இரக்கமில்லாமல் நடத்துகிறார்கள்” எனக் கலங்கினர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு