Published:Updated:

`2 ரூபாய்க்குக் கற்றாழை நாப்கின்!' - அசத்தும் திருச்சி மாணவர்கள்

சீமைக் கற்றாழை நாப்கினுடன் மாணவர்கள்
சீமைக் கற்றாழை நாப்கினுடன் மாணவர்கள்

`கிராமத்துப் பாரம்பர்யத்துடன் சீம கற்றாழையைப் பயன்படுத்தி 2 ரூபாய் செலவில் நாப்கின் தயாரிக்கலாம்' என்கிறார்கள் திருச்சி கல்லூரி மாணவர்கள்.

கல்லூரியில் படிக்கும் இறுதியாண்டு மாணவர்கள் புராஜெக்ட் தயாரிப்பது வழக்கம். அந்த வகையில், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் இளங்கலை தாவரவியல் மூன்றாமாண்டு பயிலும் மாணவர்களான புவனேஷ்வரி, சாம்ராய் டெரன்ஸ், வைரவன், பரணிதரன் ஆகியோர் அவர்களின் பேராசிரியர்களான செந்தில்குமார், பிரான்ஸிஸ் சேவியர் வழிகாட்டுதலில், இயற்கை முறையில் நாப்கின் தயாரித்தல் எப்படி எனத் தேட ஆரம்பித்தனர். தொடர்ந்து அவர்களின் தேடலில், மலைகிராமங்களில் வசிக்கும் பெண்கள் தங்களுடைய மாதவிடாய்க் காலங்களில் சீமைக் கற்றாழை நார்களைத் துணிகளுடன் வைத்துப் பயன்படுத்தியது தெரியவந்தது.

இதையே தங்களின் புராஜக்டா எடுத்துக்கொண்ட மாணவர்கள், 2 ரூபாய் செல்வில் நாப்கின் தயாரித்து அசத்தியிருக்கிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய புவனேஷ்வரி,``சீமைக் கற்றாழை செடிகளிலிருந்து முதலில் நார்களைப் பிரித்து எடுத்தோம். அந்த நார்கள் மிகவும் கடினமாக இருப்பதால், அதை சோடியம் ஹைட்ராக்சைடில் நனைக்கும்போது இலகுவாக மாறிவிடும். தொடர்ந்து அந்த நார்களையும், பஞ்சுகளையும் வைத்து நாப்கின்கள் தயாரிக்கிறோம். தொடர்ந்து அதை யூவி எனப்படும் புற ஊதாக் கதிர்களின் உதவியுடன் சுகாதாரமான முறையில் தரம் உயர்த்துகிறோம்.

`வேலைக்குப் போகச் சொல்லி சத்தம் போட்டாள்!'- திருச்சி கர்ப்பிணிப் பெண்ணுக்கு கணவனால் நேர்ந்த கொடூரம்

சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் நாப்கின்கள் 7 எம்.எல் வரை ஈரத்தன்மையைத் தாங்கும். ஆனால், எங்களின் கற்றாழை நாப்கின்13 எம்.எல் வரை ஈரத்தன்மையை உறிஞ்சும் தன்மை கொண்டது. இவற்றை எப்.டி.ஐ.ஆர் எனப்படும் ஈரப்பதம் உறிஞ்சும் சோதனையில் கண்டறிந்துள்ளோம். மேலும், இதைப் பயன்படுத்துவதில் எவ்விதப் பக்க விளைவுகளும் இல்லை.

சீமைக் கற்றாழை நாப்கினுடன் மாணவர்கள்
சீமைக் கற்றாழை நாப்கினுடன் மாணவர்கள்

மாதவிடாய்க்காலங்களில் பெண்களின் உடல்நிலை மிகவும் பலவீனமாக இருக்கும். அப்போது ஏற்படும் நோய்க் கிருமிகளை சீமைக் கற்றாழை அழிக்கும் தன்மை கொண்டது. சாதாரண நாப்கின் பயன்படுத்தும்போது ஏற்படும் அலர்ஜி, இந்த நாப்கினைப் பயன்படுத்தும்போது ஏற்படாது. மேலும், நாப்கினை மட்டுமல்ல, அதைத் தயாரிக்கும் இயந்திரத்தையும் நாங்களே வடிவமைத்துள்ளோம். இதன் விலை 15,000 ரூபாய்தான்.

தற்போது கடைகளில் வழக்கமான முறையில் தயாரிக்கப்பட்ட நாப்கின்கள் 60 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஆனால், நாங்கள் தயாரிக்கும் நாப்கினுக்குச் செலவே 2 ரூபாய்தான். இந்த நாப்கின்களை கிராமப்புறப் பெண்களுக்கும் பின்தங்கியவர்களுக்கும் பயனுள்ள வகையில் கொண்டு சேர்ப்பதுதான் எங்களின் நோக்கம்” என்றார்.

தொடர்ந்து பேசிய உதவிப் பேராசியர் பிரான்ஸிஸ் சேவியர், ``என்னுடைய ஆய்வில், ஒரு பாகம் இயற்கை முறையிலான நாப்கின் தயாரிப்பது. இதுகுறித்து எனது ஆய்வறிக்கையைக் கடந்த ஆண்டு, அரசுக்கு அனுப்பி, இயற்கை நாப்கினை 50,000 கிராமங்களுக்குப் பயன்பெறும்வகையில் தயாரித்திட உதவி கோரினேன்.

மாணவர்களுடன் உதவிப் பேராசியர் பிரான்ஸிஸ் சேவியர்
மாணவர்களுடன் உதவிப் பேராசியர் பிரான்ஸிஸ் சேவியர்

அது கிடைக்கவில்லை. அவற்றை அப்படியே விட்டுவிட மனமில்லை. எனது ஆய்வின் தொடர்ச்சியை மாணவர்கள் மூலம் சாத்தியப்படுத்தியுள்ளோம். இதற்குக் கல்லூரியின் முதல்வர் ஆரோக்கியசாமி சேவியர், துறைத்தலைவர் செந்தில்குமார் உள்ளிட்டோர் மிகவும் வழிகாட்டினார்கள். மேலும், எனது வழிகாட்டுதலில் இந்த புராஜெக்டைச் செய்த புவனேஷ்வரி, சாம்ராய் டெரன்ஸ், வைரவன், பரணிதரன் மட்டுமல்லாமல், அவர்களுடன் சால்வியா எனும் மாணவியும் ஆர்வமாக உதவி செய்தார்.

வழக்கமான நாப்கின்கள் மக்குவதற்குச் சுமார் 800 ஆண்டுகள் தேவைப்படுகிறது என்கிறார்கள். ஆனால், இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் இந்த நாப்கின் ஒரு வாரத்தில் மக்கி உரமாகிவிடும்.
உதவிப் பேராசியர் பிரான்ஸிஸ் சேவியர்

வழக்கமான நாப்கின்கள் மக்குவதற்கு சுமார் 800 ஆண்டுகள் தேவைப்படுகிறது என்கிறார்கள். ஆனால், இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் இந்த நாப்கின் விரைந்து மக்கும் தன்மைகொண்டது. அதனால், ஒரு வாரத்தில் மக்கி உரமாகிவிடும். ஏதோ ஒன்றைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றில்லாமல், சமூகத்துக்குத் தேவையான பெண்களின் நலனில் அக்கறைகொண்டு எங்கள் மாணவர்கள் கண்டறிந்த கற்றாழை நாப்கினை, கிராமப்புற மற்றும் மலைவாழ் மக்களுக்கும் சுயதொழில் செய்யக்கூடிய திருநங்கைகளுக்கும் கிராமப்புற மகளிருக்கும் கொண்டு போய்ச் சேர்த்திட முடிவு செய்துள்ளோம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு