கொரோனா பலரது வாழ்க்கையை ஊழிக்காலமாக்கியிருக்கிறது. உயிர்பயம் காட்டி மக்களை வதைப்பது ஒருபக்கம் என்றால், கொரோனாவால் தொழில் முடங்கி, வருமானத்துக்கு வழியில்லாமல், பலரும் அல்லாடிவருகிறார்கள். அப்படி, ஊசிமணி, பாசிமணி விற்று பிழைப்பு நடத்தி வந்த நம்பியாரின் அன்றாட வாழ்க்கை இப்போது ரணமாகியிருக்கிறது.
"20 கிலோமீட்டர் தூரம் நடையாக நடந்தாலும், தினமும் 50 ரூபா கிடைப்பதே பெரும்பாடா இருக்குது. வருமானமில்லாம, ஆறு குழந்தைகளை வச்சுக்கிட்டு, திண்டாடி தெருவில் நிக்கிறேன்" என்று கண்ணீர்மல்க சொல்கிறார் நம்பியார்.

திருச்சி மாவட்டம், துறையூரைச் சேர்ந்தவர் நம்பியார். இவருக்கு ஆறு குழந்தைகள். பாசிமணி, ஊசிமணிகளை மனைவி வீட்டில் தயார் செய்துதர, அவற்றை பழைய டி.வி.எஸ்.50 வண்டியில் கொண்டுபோய், ஊர் ஊராக விற்பதுதான் நம்பியாருக்கு தொழில்.
கொரோனா காலத்துக்கு முன்புவரை, தினமும் 200 வரை வருமானம் பார்த்திருக்கிறார். ஆனால், கொரோனா வந்த பிறகு, இவரது பொருள்கள் போணியாகாமல் போக, வண்டியை வீட்டிலேயே விட்டுவிட்டு, நடந்தே வந்து வியாபாரம் பார்க்கிறார்.

கரூர் மாவட்டம், குளித்தலையில் வியாபாரம் பார்த்துக் கொண்டிருந்தார். நான்கு மணிநேரமாக குளித்தலை நகரைச் சுற்றிவந்தும், ஒன்றுகூட விற்பனையாகவில்லை என்று புலம்பினார் நம்பினார்.
கையில் இருந்த பாசிமணி, ஊசிமணிகளை கவலையோடு பார்த்துக்கொண்டிருந்த நம்பியாரிடம் பேசினோம்.
"பாசிமணி, ஊசிமணி விக்கிறதுதான் எனக்கு பரம்பரைத் தொழில். நல்ல நாள்லேயே இந்தத் தொழில் சிறப்பா நடக்காது. எல்லோரும் பெரிய கடைகளில் போய், பளபளன்னு வச்சுருக்கிற ஃபேன்ஸி பொருள்களை வாங்க ஆரம்பிச்சுட்டாங்க. இதனால், எங்ககிட்ட பாசிமணி, ஊசிமணி வாங்குறதையே மக்கள் நிறுத்திட்டாங்க. சாதாரண காலங்களில், வண்டியில் கரூர், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர்னு போய் வியாபாரம் பண்ணுவேன். திருவிழா நடக்குற இடங்களுக்கு போனா, கொஞ்சம் கையில் காசு பார்க்க முடியும். காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை வியாபாரம் பார்த்தேன்னா, 200 வரை கிடைக்கும். அதுல பாதிக்கு மேல பெட்ரோலுக்கே போயிரும். மதியசாப்பாடு அதுஇதுனு ஆகுற செலவை கழிச்சுப் பார்த்தா, கையில் எதுவும் நிக்காது. இருந்தாலும், மாத்துதொழில் தெரியாததால், இதையே பண்ணிக்கிட்டு இருந்தேன்.

எனக்கு ஆறு பிள்ளைங்க. ரேஷன் அரிசி கிடைச்சாலுமே, ஆறு பிள்ளைங்களுக்கும் முழுசா சாப்பாடு கொடுக்க முடியாது. இருந்தாலும், தத்திமுத்தி கையிலேயே கரணம் போட்டு வாழ்க்கையை இழுத்துப் புடிச்சு ஓட்டிக்கிட்டு வந்தேன். இந்த நிலையில்தான், கொரோனா வந்து, என்னோட பொழப்புல மண்ணை அள்ளிக் கொட்டிட்டு. முதல் இரண்டு மாசம் தொழிலுக்கே போகமுடியலை. ரேஷன் அரிசி, அரசு கொடுத்த ஆயிரத்தை வச்சு, ரெண்டு மாசப்பாட்டை எப்படியோ சமாளிச்சோம். அதுக்குப் பிறகு, என்னால் சமாளிக்க முடியலை. அதனால், தொழிலுக்கு கிளம்பினேன். போலீஸ் பண்ணும் கெடுபிடிகளைத் தாண்டி வண்டியில் போய் தொழிலைப் பார்த்தேன். ஆனால், ஒருநாளைக்கு 50 ரூபாய்க்குக் கூட விற்பனை ஆகலை.
அதனால், வண்டிக்கு கையில் இருந்து காசைப் போட்டு பெட்ரோல் போட வேண்டிய சூழல் வந்துச்சு. அதனால், வண்டியை வீட்டில் தள்ளிப்போட்டுட்டு, எம்.ஜி.ஆர் மாதிரி, 'நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா'னு நடந்தே வியாபாரத்துக்கு கிளம்பிட்டேன். நடந்து வருவதால், திருச்சி மாவட்டத்துக்குள்ளேயே சோலி பாத்துக்கிட்டு இருந்தேன். ஆனால், சரியா விற்பனையாகலை. அதோடு, வீட்டைவிட்டு கொரோனாவுக்கு பயந்துகிட்டு வெளியே வர மக்கள் பயந்தாங்க. அதனால், 50 கிலோமீட்டர் தள்ளியுள்ள குளித்தலைக்கு இன்னைக்கு தொழிலுக்கு வந்தேன். ஆனால், இதுவரைக்கும் ஒரு பாசிமணிகூட விற்கலை. கையில் இருந்த 20 ரூபாயை வச்சு, தக்காளி சாதத்தை வாங்கி சாப்பிட்டுட்டு, மதிய உணவைச் சமாளிச்சேன். திரும்ப ஊருக்குப் போக முடியாது. இன்னைக்கு ராவுக்கு இங்கேயே எங்கனாச்சும் தங்கிட்டு, நாளைக்கும் பொழப்பு பார்த்துட்டுதான், ஊருக்குப் போகணும்.

கொரோனா எப்போ ஒழியும், எப்போ எங்களமாதிரி அன்றாடங்காய்ச்சிகளுக்கு மலர்ச்சிப் பிறக்கும்னு தெரியலை சார். எங்கள இத்தனை காலமும் கரைசேர்த்த படபத்ரகாளிதான், கொரோனாவுக்கு ஒரு முடிவு கட்டி, எங்க வாழ்வாதாரத்துக்கு வழிபண்ணனும். திருச்சியில பெரிய பெரிய ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் வச்சுருக்கிறவங்களே கொரோனானால, வருமானத்துக்கு வழியில்லாமல் விழிபிதுங்கி நிக்கிறாங்க. இதுல, நாங்களெல்லாம் எம்மாத்திரம்? இதை நினைச்சுதான் மனசை தேத்திக்கிறேன். இருந்தாலும், அவங்களுக்கு சாப்பாட்டுக்கு பிரச்னை இல்லை. ஆறு குழந்தைகளை வச்சுருக்கிற எனக்கு சாப்பாட்டுக்கு வழிபண்ண முடியலையே. இந்தப் பாழாபோன கொரோனானால ரொம்ப நொந்துகிடக்கிறேன் சாமி" என்று கூறி, தொண்டையை அடைத்த துக்கத்தை, சத்தமாக கனைத்து சரிசெய்கிறார்.