Published:Updated:

காதல்.. கடத்தல்... கட்டாய கல்யாணம்... சர்ச்சையில் திருச்சி அ.தி.மு.க நிர்வாகி!

``நண்பனின் காதலுக்கு உதவ வெளிநாட்டிலிருந்து வந்தோம். கடைசியில் எங்க கதை, `மனம் கொத்திப் பறவை' படம் போல சம்பவமாகிடுச்சு… அவன் தப்பிச்சிட்டான். நாங்க மாட்டிக்கிட்டோம்”

`வணக்கம்' சோமு
`வணக்கம்' சோமு

திருச்சி மலைக்கோட்டை எஸ்.ஆர்.சி கல்லூரிச் சாலையில் வசிப்பவர் வணக்கம் சோமு என்கிற சோமசுந்தரம். அப்பகுதியின் அ.தி.மு.க பொருளாளர். மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். கடந்த சிலவருடங்களாக மனைவியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக, மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவருகிறார் சோமு.

கடந்த 30-ம் தேதி காலை, திருச்சி சத்திரம் பேருந்துநிலையம் அருகே உள்ள ஆண்டாள் வீதியில், பேராசிரியை மகாலெட்சுமி, தோழி ஹேமாவுடன் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். ஆம்புலன்ஸில் அங்கு வந்த 5 பேர்கொண்ட கும்பல், ஹேமாவைக் கீழே தள்ளிவிட்டு மகாலெட்சுமியை வலுக்கட்டாயமாக ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு சிட்டாய்ப் பறந்தது.

கடத்தல்
கடத்தல்

பதறிய தோழி, மகாலெட்சுமியின் உறவினர்களுக்குத் தகவல் கொடுத்தார். இதுகுறித்து திருச்சி கோட்டைக் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. உடனே போலீஸார், திருச்சி மற்றும் சுற்றுவட்டார காவல் நிலையங்களை அலர்ட் செய்தனர். கூடவே, மகாலெட்சுமியின் செல்போன் சிக்னல் மூலம் ஆம்புலன்ஸ் செல்லும் வழியை போலீஸார் கண்காணித்து, அவர்களைப் பின்தொடர்ந்தனர்.

இதை உணர்ந்த கும்பல், சட்டெனத் திருச்சி அடுத்த துவரங்குறிச்சி பகுதியில் மகாலெட்சுமியை இறக்கிவிட்டுவிட்டுத் தப்பிச்சென்றது. மகாலெட்சுமியை மீட்ட போலீஸார் விசாரணை நடத்தினர்.

விசாரணையின்போது மகாலெட்சுமி, ``கடந்த சில மாதங்களாகவே, திருச்சி மலைக்கோட்டை பகுதி அ.தி.மு.க பொருளாளரான வணக்கம் சோமு எனக்குத் தொல்லை கொடுத்துவந்தார். அதை ஏற்க மறுத்த என்னை மிரட்டியும் வந்தார். எனக்கு அப்பா இல்லை. பாதுகாப்பு கருதி அம்மாவிடம் நடந்ததை விளக்கினேன். சூழலைப் புரிந்துகொண்ட அம்மா எனக்குத் திருமண ஏற்பாடுகள் செய்தார். இதைத் தெரிந்துகொண்ட சோமு, `என்னைத் தவிர்த்து நீ யாரையும் திருமணம் செய்துகொள்ள முடியாது' என மிரட்ட ஆரம்பித்தார்.

`வணக்கம்’ சோமு
`வணக்கம்’ சோமு

இந்த நிலையில், கல்லூரிக்கு எனது தோழி ஹேமாவுடன் சென்றுகொண்டிருந்த என்னை ஆம்புலன்ஸில் கடத்தினார். அந்த காரில் வணக்கம் சோமு மற்றும் அவரது ஓட்டுநர் விக்கி உள்ளிட்ட 5 பேர் இருந்தனர்” என்றார்.

விசாரித்ததில் வணக்கம் சோமு மற்றும் அவரின் முகநூல் மூலம் அவரது நண்பர்களான தஞ்சாவூர் மாவட்டம், நாஞ்சிக்கோட்டையைச் சேர்ந்த அலெக்ஸ், தஞ்சாவூர் மரிய பிரகாஷ் மற்றும் கார் ஓட்டுநர் விக்கி ஆகியோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

அலெக்ஸ் மற்றும் மரிய பிரகாஷ் ஆகியோர் மட்டும் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களோ, ``சோமுவும் நாங்களும் திருச்சியில் உள்ள கல்லூரியில் ஒன்றாகப் படித்தவகையில் நண்பர்கள். தற்போது வெளிநாட்டில், வேலைபார்க்கிறோம். வேலைக்காக வெளிநாடுபோனாலும், அவ்வப்போது முகநூல் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் அடிக்கடி பேசிக்கொள்வோம். அந்தவகையில் வணக்கம் சோமுவின் அரசியல் வளர்ச்சியைப் பார்த்துப் பெருமைப்பட்டோம்.

பேராசிரியை கடத்தல்!
பேராசிரியை கடத்தல்!

இப்படியிருக்க, கடந்த சில மாதங்களுக்குமுன்பு சோமு, தான் ஒரு பெண்ணைக் காதலிப்பதாகவும், அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள உதவும்படியும் கேட்டார். எங்களுக்கான விமான டிக்கெட்டுகளை அவரே ஏற்றுக்கொள்ள, நண்பனின் காதலுக்கு உதவ வெளிநாட்டிலிருந்து திருச்சி வந்தோம். அடுத்து அவர் கொடுத்த தகவல்படி, மகாலெட்சுமியை கடத்தினோம். காருக்குள்ளேயே, சோமு அந்தப் பெண்ணின் கழுத்தில் கட்டாயமாகத் தாலி கட்ட முயன்றார். அவர் அவசரப்பட்டதில் சந்தேகம் வந்து கேட்டோம். அப்போதுதான், அந்தப் பெண்ணுக்கு விருப்பமில்லாமல், சோமு தாலிகட்ட நினைப்பது தெரியவந்தது.

அப்போது அந்தப் பெண், ``அவரை என் முகத்தைப் பார்த்து பதில் சொல்லச் சொல்லுங்கள்?” என சோமுவைப் பார்த்து ஆவேசப்பட்டார். அப்போதுதான் எங்களுக்கு உண்மை தெரியவந்தது. நாங்கள் சோமுவைத் திட்டிவிட்டு மகாலெட்சுமியை இறக்கிவிட்டுச் சென்றுவிட்டோம். நாங்களும் வழியில் மதுரையில் இறங்கிக்கொண்டோம். மீண்டும் வெளிநாடு போக திருச்சி வந்தபோது போலீஸில் சிக்கிக்கொண்டோம்” என்றனர்.

இந்தச் சம்பவத்துக்குப்பிறகு, அ.தி.மு.க நிர்வாகியான வணக்கம் சோமு கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். கடந்த 20 நாள்களாக அவரின் கூட்டாளிகளான ஜெயபால் உள்ளிட்ட மூவருடன் தலைமறைவாக உள்ளார். அவர் மதுரை, குற்றாலம், சென்னை எனத் தங்கியிருக்கும் இடங்களை அடிக்கடி மாற்றி வருவதாக தெரிகிறது.

`நடிகைக்கு நெக்லஸ் பரிசு.. இன்ஸ்பெக்டருக்கு 30 லட்சம்?'- முருகன் குறித்து வாக்குமூலம் கொடுத்த சுரேஷ்!

கடைசியாகச் சோமு, கேரளாவில் இருப்பதும், முகநூலில் அவர் பதிவிட்டிருந்த புகைப்படங்கள் அழிக்கப்பட்டதும் போலீஸாருக்குத் தெரியவந்துள்ளது. இந்த நிலையில், திருச்சி மத்திய சிறைச்சாலையில் இருக்கும் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை, கடத்தப்பட்ட பேராசிரியை மகாலட்சுமி அடையாளம் காட்டியுள்ளார்.

போலீஸாரிடம் சிக்காமல் தலைமறைவாக உள்ள வணக்கம் சோமு, முக்கியப் புள்ளி ஒருவரின் பாதுகாப்பில் உள்ளாராம். அ.தி.மு.க-விலிருந்து நீக்கம் செய்யப்பட்டவருக்கு முக்கியப்புள்ளி பாதுகாப்பளிப்பதும் சர்ச்சையாகி வருகிறது.

வணக்கம் சோமுவின் ஆதரவாளர்களோ, ``ஒரு பெண்ணின் சம்மதம் இல்லாமல், மக்கள் நடமாட்டமுள்ள பகுதியில்வைத்து எப்படிக் கடத்த முடியும். இந்தச் சம்பவம் குறித்து முழுமையான விசாரணை வேண்டும். வணக்கம் சோமுவின் அரசியல் எதிரிகளால் இந்த விவகாரம் ஊதி பெரிதாக்கப்படுகிறது” எனக் குற்றஞ்சாட்டினார்கள்.