Published:Updated:

`ஊரடங்கு உத்தரவு ஆளுங்கட்சிக்கு பொருந்தாதா?!' -மா.செ-வால் டென்ஷனான தூத்துக்குடி கலெக்டர்

நிகழ்ச்சியில் பேசும் ஆட்சியர்
நிகழ்ச்சியில் பேசும் ஆட்சியர்

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் தூத்துக்குடியில் தடையை மீறி மக்கள் கூட்டம் கூடிய ஆளுங்கட்சியினரின் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்ததுடன், மக்கள் கூட்டம் கூடிய நிகழ்ச்சியில் ஆட்சியரே கலந்து கொண்டது சர்ச்சையாகியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தாக்குதல் தீவிரமடைந்து வருகிறது. நாளுக்குநாள் இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் முக்கிய நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்படும் எனத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

பாதுகாப்பு உபகரணம் வழங்கிய ஆட்சியர்
பாதுகாப்பு உபகரணம் வழங்கிய ஆட்சியர்

அத்துடன், சமூக பரவலைத் தடுக்கும் விதமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு மிகத் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அத்தியாவசியப் பொருள்களை வாங்கிச் செல்ல வீட்டிற்கு ஒருவர் மட்டும் வெளியே வந்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இத்தடை உத்தரவை மீறியதாக போலீஸார் நூற்றுக்கணக்கானோர் மீது வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தூத்துக்குடியில் முன்னாள் அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் ஆறுமுகநயினாரின் ஏற்பாட்டில் அண்ணாநகர் 9 வது தெருவில், அப்பகுதி பொதுமக்களுக்குக் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு மற்றும் இலவசமாக முகக்கவசம், சானிடைசர், சோப்புகள் உள்ளிட்டவை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6.45க்கு மாவட்ட ஆட்சியரே அங்கு வந்து மக்களுக்கு இவற்றை வழங்குவார் என காலையிலேயே அறிவிக்கப்பட்டிருந்தது.

நிகழ்ச்சியில் ஆட்சியர்
நிகழ்ச்சியில் ஆட்சியர்

144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையிலும், அப்பகுதியின் சந்திப்புப் பகுதியில் ஒலிபெருக்கிகள் கட்டப்பட்டு, பெரிய மின்விளக்குகளும் கட்டப்பட்டிருந்தன. மாலை 6 மணி முதலே மக்கள் அப்பகுதியில் கூடி நின்றனர். மைக் பிடித்த முன்னாள் அ.தி.மு.க மா.செ ஆறுமுகநயினார், ``கொடிய நோயான கொரோனாவை விரட்ட வேண்டும், அதற்காகத்தான் இந்த உபகரணங்களை எங்களது கல்விக் குழுமம் சார்பில் வழங்குகிறேன்.

தூத்துக்குடி மாநகராட்சியை முன்னோடி மாநகராட்சியாக தரம் உயர்த்த அமைச்சர் கடம்பூர ராஜுவுடன் முதல்வரைப் பார்த்து தூத்துக்குடிக்குக் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் எனச் சொல்லியிருக்கேன். மக்கள் தங்கள் உயிரைக் காப்பாத்திக்கணும். அரசுக்கு மக்களின் உயிர் முக்கியம். மாநகராட்சியில சொல்லி தினமும் இந்தப் பகுதிகள் முழுக்க கிருமிநாசினி தெளிக்கச் சொல்லியிருக்கேன். பிளீச்சிங் பவுடரும் தூவச் சொல்லியிருக்கேன். உங்களுக்கு எந்தப் பிரச்னையின்னாலும் எங்கிட்ட சொல்லுங்க. எல்லாமே சரியாயிடும்.

நிகழ்ச்சியில் கூடிய மக்கள்
நிகழ்ச்சியில் கூடிய மக்கள்

இந்த விழிப்புணர்வை விளம்பரத்திற்காக நான் செய்யலை. மக்களின் விழிப்புணர்வுக்காகவும் நலனுக்காகவும் செய்யுறேன்” என்றவர், இறுதியாக “கலெக்டர் வர்ற நேரமாச்சு, எல்லாரும் இப்படி கூட்டமா நிக்காதீங்க. கொஞ்சம் இடைவெளி விட்டு தள்ளித்தள்ளி நிக்கணும் ஓ.கேவா” எனச் சொல்லி முடித்தார். அடுத்த சில நிமிடங்களிலேயே ஆட்சியர் சந்தீப்நந்தூரி வந்தார். காரை விட்டு இறங்கியதும், அங்கே கூடிநின்ற 100-க்கும் மேற்பட்டோரைப் பார்த்ததும் டென்ஷனானார்.

வேறு வழியில்லாமல் மெதுவாக நடந்து பாதுகாப்பு உபகரணங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மேஜை அருகில் வந்தார். மைக்கைப் பிடித்து, “144 தடை உத்தரவு போடப்பட்டிருக்கும் இந்த நிலையில் கூட்டம் கூடக்கூடாது. அனைவரும் வீடுகளுக்குள் செல்லுங்கள். இந்தப் பாதுகாப்பு உபகரணங்களை உங்க வீடுகளுக்கே கொடுக்கச் சொல்றேன்” எனச் சொல்லிவிட்டு 4 பேருக்கு மட்டும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிவிட்டு, போலீஸாரைப் பார்த்து, “என்ன போலீஸ் இப்படித்தான் கூட்டம் கூட விடுவிங்களா?” எனக் கடிந்துகொள்ள, “ஆளும்கட்சி ஆளோட நிகழ்ச்சி சார்.

நிகழ்ச்சியில் உரையாற்றும் ஆறுமுகநயினார்
நிகழ்ச்சியில் உரையாற்றும் ஆறுமுகநயினார்

அவர் அமைச்சருக்கும் ரெண்டு மாவட்டச் செயலாளர்களுக்கும் நெருக்கம்” என உதவி ஆய்வாளர் ஒருவர் சொல்ல, டென்ஷனான ஆட்சியர், “கூட்டத்தை க்ளியர் பண்ணுங்கய்யா” என கோபமாகப் பேசினார். பற்றாக்குறைக்கு, அவர் அருகில் நின்றுகொண்டிருந்த மற்ற அதிகாரிகளைப் பார்த்து, “என்னய்யா.. என் மூஞ்சியைப் பார்த்துக்கிட்டு இருக்கீங்க. அங்க போயி மக்கள் கூட்டத்தைக் கலையுங்க” எனக் கூடியிருந்த பத்திரிகையாளர்கள் முன்பே டென்ஷனானார்.

வழக்கமாக செய்தியாளர்கள் எத்தனை கேள்விகள் கேட்டாலும் பொறுமையாகப் பதில் சொல்லிவிட்டுக் கிளம்பும் ஆட்சியர், இந்த டென்ஷனில் கொரோனா அறிகுறியால் சிகிச்சை பெற்றவர்கள், மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மட்டும் பேசிவிட்டு உடனே காரில் புறப்பட்டுச் சென்றார். இதுகுறித்து அப்பகுதியினரிடம் பேசினோம். ”முன்னாள் மாவட்டச் செயலாளரான ஆறுமுகநயினாருக்கு வாழ்வளித்தவர் ஜெயலலிதாதான்.

நிகழ்ச்சியில் ஆட்சியர்
நிகழ்ச்சியில் ஆட்சியர்

ஆனால், குறிப்பிட்ட சில காலத்திலேயே இவரை மா.செ பதவியிலிருந்து தூக்கியது மட்டுமல்லாமல் கட்சியில் ஓரங்கட்டியே வைத்திருந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியில் நெருக்கம் காட்டியதுடன், தனது மகளின் திருமண நிச்சயதார்த்த விழாவிற்கு முதல்வர் பழனிசாமியை அழைத்தார். முன்னாள் அமைச்சர்கள் செல்லப்பாண்டியன், சண்முகநாதன், செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோரிடம் நெருக்கம் காட்டினார். கட்சியில் முக்கியப்புள்ளியாகவே வலம் வருகிறார்.

தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல் அறிவிச்சதும் தனிப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இந்த மாநகராட்சியில், அவரது ஆதரவாளரான பெண் நிர்வாகி ஒருவரை தற்போது பாதுகாப்பு உபகரணம் வழங்கிய பகுதி அடங்கிய வார்டில் நிறுத்தி, பின்னர் அவரையே மேயராகவும் ஆக்கவும் திட்டமிட்டுள்ளார். அதன் முன்னோட்டமாக அப்பகுதி மக்களிடம் அறிமுகமாவதற்கான ஏற்பாடுதான் இந்த நிகழ்ச்சி.

நிகழ்ச்சியில் பேசும் ஆறுமுகநயினார்
நிகழ்ச்சியில் பேசும் ஆறுமுகநயினார்

தூத்துக்குடி மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. ஏன், அவரது வீடு இருக்கும் பகுதியிலேயே இந்த நிகழ்ச்சியை நடத்தியிருக்கலாமே? இந்த வார்டில் மட்டும் ஏன் கலெக்டரை அழைத்து இந்நிகழ்ச்சியை நடத்த வேண்டும்? அப்படியே நடத்தினாலும், 144 தடையை மீறி கூட்டம் கூட்டி ஸ்பீக்கர் கட்டி, மைக்கில் பேசுவது நியாயமா? தடை உத்தரவெல்லாம் ஆளும்கட்சிக்குக் கிடையாதா? ஊருக்குதான் உபதேசமா?” என்றனர்.

”இதே போல மற்ற கட்சியினரும், தொண்டு நிறுவனத்தினரும், ரசிகர் மன்றத்தினரும், சமுதாய அமைப்பினரும் மக்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தால் கலெக்டர் அனுமதி அளித்து நேரில் வந்து தொடங்கி வைப்பாரா? ஆளும்கட்சியினர் என்றால் ஊரடங்கு உத்தரவை மீறலாமா? பகல் பொழுதில் காய்கறிகள், பால் வாங்கிட கடைகளுக்குச் செல்பவர்களிடம் விளக்கம் கேட்காமல் லத்தியால் அடித்து வந்த வழியே திருப்பி அனுப்பும் போலீஸாரே இந்த நிகழ்ச்சிக்குப் பாதுகாப்பு அளித்தது நியாயமா?” எனக் கொந்தளித்தனர் மற்ற கட்சியைச் சேந்தவர்கள்.

இதுகுறித்து ஆறுமுகநயினார் தரப்பினரோ, “அண்ணாநகரில் சில தெருக்களில் வீடுவீடாகச் சென்று அண்ணனே மக்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்களை இரண்டு நாள்களாக வழங்கினார். ஆட்சியர் நேரில் வந்து அறிவுரைகள் வழங்கினால் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படும் என்பதால்தான் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இரண்டு அடிக்கு ஒரு வட்டம் போட்டுதான் உபகரணம் பெறுபவரை நிறுத்தினோம்.

நிகழ்ச்சியில் ஆட்சியர்
நிகழ்ச்சியில் ஆட்சியர்

மக்கள் கூட்டம் கூடியவுடன் வீட்டிற்குள் செல்ல அறிவுறுத்தி அனுப்பிவிட்டோம்” என சமாளித்தனர். மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரியிடம் பேசினோம், “விழிப்புணர்வு நிகழ்ச்சி என்றாலும் மக்கள் கூட்டமாகக் கூடுவது தவறுதான். இதுபோன்ற பாதுகாப்பு உபகரணங்களை தன்னார்வலர்கள் மூலம் அவரவர் வீடுகளில் வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று மட்டும் சொன்னார். ஆளும்கட்சியினர் நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்ததுடன், ஆட்சியர் கலந்து கொண்ட நிகழ்வு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு