Published:Updated:

`வீட்டையே காவல்காத்த வீரலட்சுமி அது!' -பசுவுக்கு வளைகாப்பு நடத்திய தூத்துக்குடி விவசாயி

பசு
பசு

தூத்துக்குடியில் பாசமாக வளர்த்து வரும் பசுமாட்டிற்கு விவசாயி ஒருவர் வளைகாப்பு நடத்திய நிகழ்வு, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரைச் சேர்ந்தவர் பால்ராஜ். விவசாயியான இவர், தன் வீட்டின் பால் தேவைக்காகப் பசு ஒன்றைப் பாசமாக வளர்த்து வருகிறார். தற்போது, இப்பசுமாடு சினையாகி, கன்று ஈன்றும் நிலையில் உள்ளதால், குடும்பத்துடன் வளைகாப்பு நடத்தியுள்ளார்.

விவசாயி பால்ராஜிடம் பேசினோம், ”பூர்வீகமாகவே நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன்தான். பள்ளிக்கூட படிப்புக்குப் பிறகு விவசாயத்துல இறங்குனேன். எனக்கு வயசு 60 ஆகுது. இப்போ வரைக்கும் விவசாயம் செய்துட்டு வர்றேன்.

பசு-லெட்சுமி பிள்ளை
பசு-லெட்சுமி பிள்ளை

ஆரம்பத்துல விவசாயத்தோட சேர்த்து ஆடு, மாடு வளர்ப்பையும் செய்துட்டு வந்தேன். இப்போ ஆறு வருசமா வீட்டின் பால் தேவைக்காக மட்டும் ஒரு பசுமாட்டை வளர்த்துட்டு வர்றேன். ரெண்டு வருசத்துக்கு முன்னால ’லெட்சுமி’ன்ற பேர்ல கறுப்பு வெள்ளை கலந்த நிறத்துல ஒரு பசுவை வளர்த்தேன்.

இதுவரைக்கும் நான் வளர்த்த பசுக்களிலேயே ரொம்ப வித்தியாசமானது. கைதட்டினா வேகமா பக்கத்துல ஓடி வர்றதும், வீட்டை விட்டு வெளியே கிளம்பும் போது ஆசையா பக்கத்துல வந்து நிற்குறதுமா இருக்கும். போஸ்ட் மேன், கூரியர் பாய்னு வீட்டுக்கு யாரும் புதுநபர்கள் வந்தா, எழுந்து நின்று கழுத்தை ஆட்டி மணியோசை எழுப்பும்.

மணிச்சத்தத்துக்கு வீட்டுக்குள்ள இருந்து யாரும் வரலேன்னா, `அம்மா..'ன்னு கத்திக் கூப்பிடும். வீட்டுக்கு ஐஸ்வர்யம் தரும் லெட்சுமியா மட்டுமல்லாம, வீட்டையே காவல் காக்குற வீரலெட்சுமியாவும் இருந்துச்சு. அது அழகான ஒரு பசுக்கன்றை ஈன்றது. தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலைங்குற மாதிரி தாய்ப்பசு மாதிரியே கன்னுக்குட்டி இருந்துச்சு. கன்னுக்குட்டிக்கே பால் முழுவதும் கிடைக்கட்டும்னு பாலைக் கறக்காம குட்டிக்கே விட்டோம்.

வளைகாப்பு தாம்பூலம்
வளைகாப்பு தாம்பூலம்

ஆனால், நோய்வாய்ப்பட்டு ஒரு மாசத்துல லெட்சுமி இறந்து போயிட்டா. அது சோர்ந்து தரையில படுத்திருந்தப்போ, என் மடியில தலையைத் தூக்கிவச்சு தடவிக் கொடுத்தேன். மடியிலயே உயிர் போச்சு. அவளோட இறப்பை யாருமே எதிர்பார்க்கலை. நாலு நாள் சாப்பிடாம லெட்சுமியை நினைச்சுக்கிட்டே இருந்தேன். `லெட்சுமிதான் நம்மளவிட்டுப் போயிட்டா, அவளோட பிள்ளையா இந்தக் கன்னுக்குட்டியை நம்மளுக்காக விட்டுட்டுதான போயிருக்கா. இந்தக் கன்னுக்குட்டியை வளர்ப்போம்'னு என் மனைவி, மகன் எல்லாரும் ஆறுதல் சொன்னாங்க. தாயை இழந்த பிள்ளையைப் போல, தவிச்ச பசுக்கன்றை லெட்சுமியைவிட கூடுதல் அக்கறையோட, கண்ணும் கருத்துமா வளர்த்தேன்.

பசு நெய், எருமை நெய்... எது நல்லது, எப்போது சாப்பிடலாம்?

லெட்சுமியைப் போலவே சுறுசுறுப்பா இருந்துச்சு. நான் பக்கத்துல போனாலே குதிரையைப் போல காலைத்தூக்கி நிற்கும். ஆற்றங்கரைக்கு தினமும் நான் குளிக்கப் போகும்போது எங்கூடவே நடந்து வரும். கயிறு கட்டித்தான் அழைச்சுட்டுப் போகணும்னு எதுவுமில்ல. தானாகவே நடந்து வரும். நான் நின்னா அதுவும் நிற்கும். நடந்தா அதுவும் நடக்கும். கைத்தட்டினா இவளோட அம்மா லெட்சுமி நடந்து வர்றதைப்போல, விசில் அடிச்சா ஓடி வரும். லெட்சுமியைப் போல இந்தப் பசுவுக்கு எந்தப் பெயரும் வைக்கல.

பசு
பசு

`லெட்சுமிப்பிள்ளை… லெட்சுமிப்பிள்ளை..'ன்னு கூப்பிடுவேன். என்னோட பேரப்பிள்ளைக `கும்கி' ன்னு கூப்பிடுறாங்க. எனக்கு ஒரே மகன்தான். மகள் இல்லாத குறையை இந்த லெட்சுமிப்பிள்ளை தீர்த்துடுச்சு. தாயில்லாத லெட்சுமிப் பிள்ளை சினையானது தெரிஞ்சு ரொம்ப சந்தோஷப்பட்டோம். வாழைப்பழம், பேரீட்சை, கொய்யா.. எனச் சத்தான பழவகைகளைக் கொடுத்து பாதுகாத்தோம். இன்னும் ஒரு மாசத்துல குட்டி ஈன்றும் நிலைக்கு வந்துடும். அதனால, லெட்சுமிப்பிள்ளைக்கு வளைகாப்பு நடத்தலாம்னு முடிவு செஞ்சோம்.

ஜோசியகாரர்ட்ட போயி நல்ல நேரம் குறிச்சிட்டு வந்தேன். நேற்றே பக்கத்துல உள்ள 10 வீடுகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சிக்கு அழைச்சோம். காலையிலேயே குளிப்பாட்டி கொம்பில் பட்டுத்துண்டு கட்டி, உடம்பில் பட்டுவேஷ்டி சுற்றிக்கட்டி மாலை போட்டு, நெற்றியில் சந்தனம், குங்குமம் வச்சு, உடம்பில் சந்தனத்தைத் தெளிச்சு, சாம்பிராணி காட்டினோம். பெண்கள்.., கொம்பிலும், இரண்டு முன்னங்காலிலும் மஞ்சள்கயிற்றில் வளையல்களைக் கட்டினாங்க. பழங்கள், சர்க்கரைப் பொங்கல், கீரைக்கட்டுகளைச் சாப்பிடக் கொடுத்தோம்.

பசு
பசு

அதுக்குப்பிறகு, வீட்டுக்கு வந்தவங்க எல்லாரும் ஒண்ணா சேர்ந்து சாப்பிட்டோம். அவர்களுக்கு வளைகாப்புத் தாம்பூலமாக மஞ்சள்கயிறு, முறுக்கு, வாழைப்பழம், வளையல்களைக் கொடுத்தோம். அலங்காரம் செஞ்சதுல வழக்கத்தைவிட அழகா இருந்தா என் லெட்சுமிப்பிள்ளை. என்னைவிட்டுப் பிரிந்த லெட்சுமி, லெட்சுமிப்பிள்ளையை ஈன்றதைப் போல, இப்போ லெட்சுமிப்பிள்ளையும் பசுக்கன்றையே ஈன்றெடுக்கணும்னு ஆண்டவனை வேண்டிக்கிட்டு இருக்கேன்” எனப் பசுவைத் தடவிக் கொடுத்தபடியே நெகிழ்ந்தார்.

அடுத்த கட்டுரைக்கு