Published:Updated:

`சாப்பாடு, நொறுக்குத்தீனி எல்லாமே இதுதான்!' -40 ஆண்டுகளாக மணலைச் சாப்பிடும் தூத்துக்குடி மூதாட்டி

தூத்துக்குடியில், 40 ஆண்டுகளாக தினமும் சலித்த மணலை நொறுக்குத் தீனியாகவும் உணவாகவும் சாப்பிட்டு வருகிறார் மூதாட்டி மரியசெல்வம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தூத்துக்குடி முத்தையாபுரம் அருகிலுள்ள சூசையாநகரைச் சேர்ந்தவர் சுந்தரம். இவரின் மனைவி மரியசெல்வம். இவர்களுக்கு ராஜமணி, ராஜகனி என்ற 2 மகன்களும் கனி என்ற மகளும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. கணவர் சுந்தரம் இறந்துவிட்டதால், மூதாட்டி மரியசெல்வம் மட்டும் சூசையாநகரில் ஒரு வீட்டில் தனியாக வசித்துவருகிறார்.

மணலைச் சாப்பிடும் பாட்டி
மணலைச் சாப்பிடும் பாட்டி

தள்ளாத வயதிலும் அப்பகுதியில் கிடைக்கும் பழைய பேப்பர், தண்ணீர் கேன்கள், பிளாஸ்டிக் பொருள்களை சேகரித்து அதை பழைய இரும்புக்கடையில் போட்டு, அதில் கிடைக்கும் வருமானத்தில் பிழைப்பு நடத்திவருகிறார். இவரது சிறு வயதில் பெற்றோருக்குத் தெரியாமல் மண் சாப்பிட ஆரம்பித்த பழக்கம், தற்போது 85 வயது நிறைந்து பேரக் குழந்தைகள் வளர்ந்துவிட்ட பிறகும் நின்றுவிடவில்லை.

மூதாட்டி மரியசெல்வத்திடம் பேசினோம். `` சில நேரங்களில் ராத்திரிக்கு அரிசி சாதம் வடிச்சுச் சாப்பிடுறேன். ஆனால், மணல்தான் எனக்கு மதியச் சாப்பாடு. அரைத்தட்டு மணலைச் சாப்பிட்டு தண்ணியக் குடிச்சுட்டு படுத்திடுவேன். என் மடியில எப்போவுமே ஒரு கிலோ மணலை முடிஞ்சி வச்சிருப்பேன். பத்து பதினைஞ்சு நிமிசத்துக்கு ஒருதடவை வாயில போட்டு தின்பேன். இந்தப் பகுதி கடற்கரைப் பகுதி.. இந்த மண்ணு கொஞ்சம் உப்பாத்தான் இருக்கும். அதனால, பக்கத்து ஊர்களுக்குப் போயி மணலை மூட்டைகட்டி தலையில வச்சு வீட்டுக்குத் தூக்கிட்டு வந்து சல்லடையால சலிச்சு தனியா வச்சுக்குவேன்.

மரிய செல்வம் பாட்டி
மரிய செல்வம் பாட்டி

வேற வழியில்லேன்னா செங்கல்பொடியை சாப்பிடுவேன். இந்த மழைநேரத்துக்கு ஏற்கெனவே சலிச்சு இருப்பு வச்ச மணல்தான் சாப்பாட்டுக்கு உதவுது. கிட்டத்தட்ட 40 வருஷமா மணல் சாப்பிடுறேன். எனக்கு எந்த நோயி, நோக்காடும் வந்ததில்லை. டாக்டருகிட்டயும் போனதில்ல. ஆரோக்கியமாத்தான் இருக்கேன்” எனச் சொல்லி வெள்ளந்தியாய்ச் சிரிக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்து அப்பகுதியினரிடம் பேசினோம், ``அந்த பாட்டியம்மாவுக்கு வேலையே மண்ணு திங்குறதுதான். மரத்தடியில உட்கார்ந்து செளவுகரியமா சாப்பிடும். அவங்க பிள்ளைகள் சத்தம் போட்டும் கேட்ட பாடில்லை. டீ, வடை எப்போவாவதுதான் சாப்பிடும்.

செங்கல் தூளை சாப்பிடும் பாட்டி
செங்கல் தூளை சாப்பிடும் பாட்டி

ஆனா, அடிக்கடி நொறுக்குத்தீனி போலவும் மதியநேரத்துக்கும் மண்ணைத்தான் சாப்பிடுது. வெளியூருக்குப் போனாலும் டப்பாவுல அடைச்சுக் கையிலயே கொண்டு போயிடும். சாதாரணமா சாப்பிட்ட சாப்பாடே சிலருக்கு செரிக்காத நிலைமையில இந்தப் பாட்டியம்மா மண்ணை சாப்பிட்டு எப்படித்தான் நோய் ஏதுமில்லாம இருக்குறாங்கன்னே தெரியலை” என்றனர் ஆச்சர்யத்துடன்.

மூதாட்டியின் உணவுப் பழக்கம் குறித்து தூத்துக்குடியைச் சேர்ந்த மனநல மருத்துவர் சிவசைலத்திடம் பேசினோம், ``கர்ப்பிணிப் பெண்கள் சாம்பல் சாப்பிடுவதுபோல, மன அழுத்தம், மனபிறழ்வு ஏற்பட்டவர்கள் மணல், எழுதும்குச்சி, மரப்பட்டை, சாம்பல், விபூதி, தலைமுடி ஆகியவற்றைச் சாப்பிடுவார்கள். இதனால் குடலில் கிருமிகள், புழுக்கள் உற்பத்தியாகி வயிற்றுக்குள் பாதிப்புகளை ஏற்படுத்தும். அந்தப் புழுக்களால் கல்லீரல் பாதிப்புகள் ஏற்படலாம்.

மரியசெல்வம்
மரியசெல்வம்

இந்தப் புழுக்கள் ரத்தத்தை உறிஞ்சி, ரத்தசோகையை ஏற்படுத்தும். எனக்கு எந்தப் பாதிப்புமில்லை என அந்த மூதாட்டி சொன்னாலும், மருத்துவப் பரிசோதனையில் வயிற்றுக்கோளாறு இருப்பதைக் கண்டுபிடிக்க முடியும். அத்துடன், மனநல சிகிச்சையையும் மேற்கொண்டால் இந்தப் பழக்கத்தை மெதுவாக நிறுத்த வாய்ப்பு உள்ளது” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு