Published:Updated:

தூத்துக்குடி: `என் குலசாமியே பனைதான்!' - காமராஜருக்கு ஓலையில் சிலைவடித்த தொழிலாளி

பள்ளிக் குழந்தைகளுடன் காமராசர்
பள்ளிக் குழந்தைகளுடன் காமராசர்

புத்தகப் பைகளை தூக்கிச் செல்லும் மாணவ, மாணவியுடன் நின்ற கோலத்திலுள்ள காமராஜரின் பனை ஓலை சிலையை ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர் அப்பகுதியினர்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள கருங்குளத்தைச் சேர்ந்த பனைத்தொழிலாளி பால்பாண்டி. தாஜ்மகால், பனைமரம், கிறிஸ்துவ தேவாலயம், பள்ளிவாசல், கோயில் கோபுரம், மாட்டுவண்டி, தாத்தா, பாட்டி, கருணாநிதி, அப்துல்கலாம் உருவச்சிலைகள் எனப் பனை ஓலைகளில் 250-க்கும் மேற்பட்ட பல்வேறு கலைநயமிக்க பொருள்களை செய்து தனது வீட்டில் காட்சிப்படுத்தியுள்ளார்.

பால்பாண்டி
பால்பாண்டி

இவரது பனை ஓலை சிலையை பள்ளி, கல்லூரி மாணவிகள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர். காமராஜரின் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு 3 மாத உழைப்பைச் செலுத்தி புத்தகப் பைகளைத் தூக்கிச் செல்லும் பள்ளி மாணவ, மாணவியுடன் நின்ற கோலத்திலுள்ள காமராஜர் சிலையை உருவாக்கி இன்று காட்சிப்படுத்தியுள்ளார்.

பால்பாண்டியிடம் பேசினோம், ``எங்க அப்பா ஒரு பனைத் தொழிலாளி. நான் அஞ்சாம் வகுப்பு வரைதான் படிச்சேன். அதுக்குப் பிறகு அப்பாவுடன் பனைத் தொழிலுக்கே போக ஆரம்பிச்சேன். வெட்டிப்போடும் பனை ஓலை, நுங்கு குலைகளைச் சேகரித்தல், பதனீர் காய்ச்சுதல், கருப்பட்டி ஊற்றுதல், சிப்பம் கட்டுறதுன்னு சின்னச் சின்ன வேலைகளைச் செய்ய ஆரம்பிச்சேன்.

ஓய்வுநேரத்தில் கற்றுக்கொண்ட கலை:

அப்படியே, கொஞ்சம் கொஞ்சமா பனை ஏறவும் கத்துக்கிட்டு, 13 வயசுல இருந்து தனியா பனை ஏறி கலசம் கட்டி, பதனீர் இறக்கிட்டு வர்றேன். தொழில் இல்லாத மாசத்துல தோட்டங்களுக்கு இரவு நேர காவலுக்குப் போனேன். அந்த நேரத்துல பனை ஓலையில பெட்டி முடைய கத்துக்கிட்டேன். தொடர்ந்து பாய், கட்டில், சேர் எனப் பல பொருள்களை செய்யக் கற்றுக்கொண்டேன். சீஸன் மந்தமா இருந்தால், கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம்… என பிற மாவட்டங்களுக்கும் சென்று பனை ஏறிட்டு வருவேன். எனக்கு இப்போ வயசு 63 ஆகுது. இதுவரைக்கும் 30,000 பனை மரம் வரை ஏறி, இறங்கியிருக்கேன். பனை உச்சியில இருந்து மூணு முறை கீழே விழுந்தும் எந்த அடியுமில்லாம தப்பிச்சுட்டேன்.

பனை ஓலையில் உருவாக்கிய பொருட்கள்
பனை ஓலையில் உருவாக்கிய பொருட்கள்

5 வருசத்துக்கு முன்னால பைக்குல கடைக்குப் போயிருந்தப்போ எதிரே வந்த கார் மோதி இடுப்பு, கால்பகுதியில பலமா அடிபட்டுச்சு. ``இனிமேல் சைக்கிள், பைக் ஓட்டக்கூடாது. ரொம்ப தூரம் நடக்க கூடாது. பனைமரம் ஏறவே கூடாது”ன்னு டாக்டர் சொல்லிட்டார். ``நாங்க குடும்பதைப் பார்த்துக்குறோம். நீங்க ஓய்வெடுங்க...”ன்னு மகன்களும் சொல்லிட்டாங்க. ரெண்டு வருஷம் சும்மா இருந்து பார்த்தேன். ஆடுன காலும், பாடுன வாயும் சும்மா இருக்குமான்னு சொல்றது மாதிரி, பனைக்குப் பனை ஏறி இறங்கிட்டு இருந்தவனால வீட்டுக்குள்ள உட்கார்ந்து ஓய்வெடுங்கன்னு சொன்னா எப்படி இருக்க முடியும்?

``நாலு பனைமரத்தை நட்டுட்டுப் போங்க... உங்க சந்ததி நல்லா இருக்கும்!'' - `பனை' பாண்டியன்

பனை ஓலையில் காமராசர்!

ஒரு வருஷம் வரைக்கும் பெட்டி முடைஞ்சேன். பேரன், பேத்திகளுக்கு விளையாட முதல்ல பொம்மை செய்தேன். அதுக்கே ஒருநாள் முழுவதும் ஆயிடுச்சு. தொடர்ந்து, வில்லுவண்டி, விமானம், ஒட்டகம், யானை, குதிரை, திருச்செந்தூர் கோயில் கோபுரம், தேவாலய கோபுரம், தாஜ்மஹால், கலப்பை ஏந்திய விவசாயி, உழவு விவசாயி, ஓலைச் செருப்பு…ன்னு என் மனசுல என்னென்ன தோணுதோ, யார் என்ன செய்யச் சொல்றாங்களோ அதையெல்லாம் செய்ய ஆரம்பிச்சேன். மனித உருவங்களைச் செய்தா என்னன்னு தோணுச்சு. மறைந்த தலைவர்கள்ல எனக்கு காமராஜர் ரொம்பப் பிடிக்கும்.

பள்ளிக் குழந்தைகளுடன் காமராசர்
பள்ளிக் குழந்தைகளுடன் காமராசர்

அதனால, காமராஜரையே டெஸ்ட்டுக்கு எடுத்துக்கிட்டேன். முதலில் கால்பகுதியை செஞ்சு முடிச்சேன். தொடர்ந்து இடுப்புப்பகுதி, உடல்பகுதி, கை, மணிக்கட்டு, தலைப்பகுதி... என ஒவ்வொரு பாகமாகச் செய்து, கடைசியா எல்லாத்தையும் ஒண்ணு சேர்த்தேன். ஜவுளிக்கடையில வேட்டி, சட்டை வாங்கிப் போடலாம்னு நினைச்சேன். அதையும் ஏன் ஓலையில செய்யக் கூடாதுன்னு தோணுச்சு. அதுக்கு ஏத்ததுபோல ஓலையைப் பக்குவமாக் கிழிச்சு செய்தேன். போன வருச பிறந்தநாளில் வீட்டுலயே காட்சிப்படுத்தினேன்.

இது பனைக்கு கிடைத்த அங்கீகாரம்!

காமராசரைக் ’கல்விக்கண் திறந்தவர்’னு சொல்லுவாங்க. புத்தகப்பைகளை சுமந்துகிட்டு பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவியின் உருவத்தை செய்து இந்தாண்டு காமராசர் பிறந்தநாளைக் கொண்டாடலான்னு நினைச்சேன். மூணுமாசமா மாணவன், மாணவி உருவத்தைச் செய்து பெயின்ட் கொடுத்தேன். இன்று காமராசாரின் பிறந்தநாள். அதனால இந்த உருவச்சிலைகளை காட்சிப்படுத்தியிருக்கேன். எல்லாரும் ஆர்வத்தோட பார்த்துட்டுப் போறாங்க. காலை, மாலை 2 மணி நேரம் செலவிடுவேன். இதுல எனக்கு எதுவுமே வருமானம் இல்ல, வெறும் ஆர்வம் மட்டும்தான்.

வண்ணம் தீட்டும் பால்பாண்டி
வண்ணம் தீட்டும் பால்பாண்டி

இதுவரைக்கும் 200-க்கும் மேற்பட்ட பொருள்கள் செய்திருக்கேன். சின்ன வயசுல பனைத்தொழிலுடன் சேர்ந்து கத்துக்கிட்ட வைத்தியத் தொழிலையும் செய்துட்டு வர்றேன். பாம்புக்கடி, தேள்கடி, விஷக்கடிக்கு பார்வை பார்க்க வருபவர்கள் தரும் பணத்தை வச்சுதான் ஓலை வெட்டுதல், பெயின்ட், கலைப்பொருள்களை வாங்கிக்கிறேன். இந்தப் பட்டம், பாராட்டெல்லாம் எனக்கான அங்கீகாரம் இல்ல. என் குலசாமி பனைக்குக் கிடைத்த அங்கீகாரம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு