Published:Updated:

`மருத்துவருக்கு கொரோனா; தனிமைப்படுத்தப்பட்ட செவிலியர்கள்..' – மூடப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம்

மூடப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம்
மூடப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம்

ஆறுமுகநேரி மற்றும் பிச்சிவிளை ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு மக்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. டெல்லி, நிஜாமுதினில் தப்லீக் ஜமாத்தில் கடந்த மார்ச் 15-ம் வரை நடந்த மாநாட்டில் வெளிநாடு, உள்நாடு என இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இம்மாநாட்டில் கலந்துகொண்டவர்களில் பெரும்பாலானோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது. இம்மாநாட்டில் தமிழகத்திலிருந்து பங்கேற்ற 1,131 பேரை அடையாளம் காணும் பணியில் வருவாய்த்துறையினர், சுகாதாரத் துறையினர் மற்றும் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

காயல்பட்டினம்  அரசு மருத்துவம்னை
காயல்பட்டினம் அரசு மருத்துவம்னை

தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து இம்மாநாட்டுக்குச் சென்ற 12 பேர் அடையாளம் காணப்பட்டனர். இதில் 11 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 7 பேர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலும் 4 பேர் நெல்லை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில், திருச்செந்தூர் அருகில் உள்ள காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த மருத்துவர் மற்றும் அதே ஊரைச் சேர்ந்த அவரது நண்பருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. அந்த மருத்துவர் அரசு மருத்துவமனையிலும், அவரது சொந்த கிளினிக்கிலும் கடந்த 4 நாள்களாக மருத்துவம் பார்த்துள்ளார். இதையடுத்து, கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் கடந்த 1-ம் தேதி வரை அவர் மருத்துவம் பார்த்த நோயாளிகளின் பெயர் விவரப் பட்டியலை மருத்துவக்குழுவினர் சேகரித்தனர்.

பிச்சிவிளை
பிச்சிவிளை

அத்துடன், அவர்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டதுடன் கொரோனா தொற்றுநோயின் அறிகுறிகளான காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் இருந்தால் உடனே சிகிச்சைக்கு வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், அந்த மருத்துவமனையில் பணிபுரிந்த பிற மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் 20 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதேபோல, அந்த மருத்துவரின் நண்பரின் மனைவி, பரமன்குறிச்சி அருகிலுள்ள பிச்சிவிளை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறார். எனவே, அந்தப் பெண் மருத்துவர் மற்றும் அவரின் 3 குழந்தைகள், மாமியார் உட்பட 5 பேருக்கும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதே ஆரம்ப சுகாதார நிலையத்தில் அந்த மருத்துவருடன் பணிபுரிந்த செவிலியர்கள் உள்ளிட்ட 17 பணியாளர்களும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இங்கும் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் 1-ம் தேதி வரை சிகிச்சை பெற்றுச் சென்றவர்களின் விவரங்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் சேகரித்து கண்காணித்து வருகின்றனர்.

பிச்சிவிளை
பிச்சிவிளை

இதைத் தொடர்ந்து பிச்சிவிளை ஆரம்பசுகாதார நிலையம் மூடப்பட்டது. இதையடுத்து காயல்பட்டினம், ஆறுமுகநேரி மற்றும் பிச்சிவிளை ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு மக்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா முன்னெச்சரிக்கையால் ஆரம்ப சுகாதார நிலையமே மூடப்பட்டது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு