Published:Updated:

சாத்தான்குளம்: `கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிபிஐ அதிகாரிகள்!’ - விசாரணை பாதிப்பு

பென்னிக்ஸ், ஜெயராஜ்
பென்னிக்ஸ், ஜெயராஜ்

சி.பி.ஐ அதிகாரிகள், சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினரிடம் மட்டுமல்லாமல் காவல்துறையினர் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்திய நிலையில், அவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதியானதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் காவல்நிலையத்தில் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் சர்வதேச அளவில் விவாதத்துக்கு உள்ளானது. இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விசாரணை நடத்தும் சிபிஐ
விசாரணை நடத்தும் சிபிஐ

சிபிஐ கூடுதல் கண்காணிப்பாளர் விஜய்குமார் சுக்லா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் அனுராஜ் சின்கா, பூரண்குமார், எஸ்.ஐ-கள் சுஷில் குமார் வர்மா, சச்சின், காவலர்கள் அஜய்குமார், ஷைலேந்திரகுமார், பவன்குமார் திரிபாதி உள்ளிட்ட ஏழு பேர் இந்த விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

சாத்தான்குளம் இரட்டைக் கொலை குறித்து விசாரணை நடத்துவதற்காகக் கடந்த 10-ம் தேதி டெல்லியில் இருந்து மதுரை வந்த இந்தக் குழுவினர், சாத்தான்குளம் சென்று உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினரிடம் ஏழு மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர், இந்த வழக்கில் கைதான சாத்தான்குளம் முன்னாள் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 10 பேரை கஸ்டடியில் எடுத்து விசாரித்தார்கள். 

சாத்தான்குளம் காவல்நிலையம்
சாத்தான்குளம் காவல்நிலையம்

இந்த வழக்கு தொடர்பாக காவலர்களான செல்லதுரை , வெயிலுமுத்து, சாமதுரை ஆகியோரை நேற்று (21-ம் தேதி) சிபிஐ அதிகாரிகள் சாத்தான்குளம் அழைத்து வந்து விசாரித்தார்கள். ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வைத்து இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் அடித்து உதைத்தது பற்றி இருவரும் முக்கியத் தகவல்களைக் கொடுத்ததாகத் தெரிகிறது.

சாத்தான்குளம் காவல்நிலைய காவலர்கள் வெயிலுமுத்து, செல்லதுரை, சாமதுரை ஆகியோரிடம் விசாரணை நடத்த ஒருநாள் அவகாசம் இருக்கும் நிலையில், மூவரையும் நீதிமன்றத்தில் அவசரமாக சிபிஐ அதிகாரிகள் ஆஜர்படுத்தினார்கள். இது குறித்து விசாரித்தபோது சிபிஐ அதிகாரிகளில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது. 

சிபிஐ விசாரணை ( கோப்புப் படம்)
சிபிஐ விசாரணை ( கோப்புப் படம்)

சிபிஐ அதிகாரிகளில் மூவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதால் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில், சப்-இன்ஸ்பெக்டர் ஒருவருக்கும் ஒரு காவலருக்கும் தொற்று உறுதியாகியிருக்கிறது. அதனால் அனைத்து அதிகாரிகளுக்கும் பரிசோதனை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருக்கிறது. அத்துடன், அவர்கள் விசாரணை நடத்திய அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டிருக்கிறது.

சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கு குறித்து விசாரித்த அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. இது குறித்து அரசு மருத்துவர் ஒருவரிடம் பேசியபோது, “பொதுவாக வெளி மாநிலங்களில் இருந்து வரக்கூடியவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட வேண்டியது அவசியம். 

சிபிஐ அதிகாரிகள் டெல்லியில் இருந்து மதுரை வந்தபோதே கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்க வேண்டியது அவசியம்.
மருத்துவர்கள்

சிபிஐ அதிகாரிகள் டெல்லியில் இருந்து மதுரைக்கு வந்தபோது பரிசோதனை செய்யப்படவில்லை. அவர்களுக்கு உரிய பரிசோதனை செய்திருந்தால் அப்போதே கொரோனா பாதிப்பு குறித்துத் தெரியவந்திருக்கும். தேவையில்லாமல் அவர்கள் விசாரணை நடத்திய அனைவரும் நோய்த் தொற்று ஏற்பட்டு இருக்குமோ என அச்சம் அடையத் தேவையில்லாமல் செய்திருக்க முடியும்” என்று வருத்தம் தெரிவித்தார்கள். 

இது குறித்து சிபிஐ தரப்பில் விசாரித்தபோது, டெல்லியில் இருந்து தமிழகம் வருவதற்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகத் தெரிவித்தனர். இங்கு வந்த பின்னரே இருவருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருக்கக் கூடும் என்றும் தெரிவித்தனர். இதனிடையே, கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களுடன் இருந்த பிற அதிகாரிகளும் அச்சத்தில் இருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு