Published:Updated:

`பாட்டிக்கு கொரோனா தொற்று; பேரக் குழந்தைகளுக்கும் பரவியது!’ -சீல் வைக்கப்பட்ட தென்காசி பகுதி சாலைகள்

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

தென்காசியைச் சேர்ந்த மூதாட்டிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், குழந்தைகள் இருவருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. 

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கொரொனா நோய்த் தொற்று ஏற்படுவதைக் கட்டுப்படுத்த, பொதுமக்களை சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் இணைந்து மேற்கொண்டுவருகின்றன.  

நெலை அரசு மருத்துவமனை
நெலை அரசு மருத்துவமனை

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக நோய்த் தொற்று ஏற்படாமல் இருந்தது. மூன்று நாள்களில் மட்டும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இரு மாவட்ட நோயாளிகள் 75 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள்.

தென்காசியைச் சேர்ந்த 69 வயது மூதாட்டி ஒருவர் வாத நோயால் அவதிப்பட்டுவந்துள்ளார். அவர், தன்னுடைய வாத நோய்க்கு சிகிச்சை எடுக்க தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அப்போது அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு பரிசோதனை மேற்கொண்டதில், அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கொச்சி டு தென்காசி நடைப்பயணம்! - பாதி வழியில் மயங்கிய தமிழக இளைஞர்கள்! #CoronaLockdown

அதைத் தொடர்ந்து, அவருடைய குடும்பத்தில் உள்ள ஆறு பேருக்கு நோய்ப் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், இரண்டு வயது பெண் குழந்தைக்கும் ஒன்றரை வயது ஆண் குழந்தைக்கும்  நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்ததால், அவர்களும் நெல்லை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

குழந்தைகள் இருவரும் பாட்டியிடம் செல்லமாக விளையாடுவார்கள் என்பதால், அவர்களுக்கு நோய்த் தோற்று ஏற்பட்டுவிட்டதாகக் குடும்பத்தினர் வேதனையுடன் தெரிவித்தனர். இரு குழந்தைகளுக்கும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. 

வெறிச்சோடிய சாலை
வெறிச்சோடிய சாலை

குழந்தைகள் உள்ளிட்ட மூவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், தென்காசி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள சாலைகள் சீல் வைக்கப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

அடுத்த கட்டுரைக்கு