Published:Updated:

`எப்போதும் ஒன்றாகத்தான் செல்வார்கள்!'- நண்பர்களின் இறப்பால் சோகமான கிராமம்

ஏரியில் குதித்த நண்பன் தண்ணீரில் மூழ்கி உயிருக்குப் போராடிய நிலையில், அவனைக் காப்பாற்றச் சென்ற இரண்டு நண்பர்களும் உயிரிழந்த சம்பவம் செந்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பலியான மாணவர்கள்
பலியான மாணவர்கள்

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள சொக்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல் என்பவரின் மகன் ஜெகன், சுப்ரமணியன் என்பவரின் மகன் ஆணைமுத்து. இவர்கள் இருவரும் நமங்குணம் அரசுப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தனர். மருதமுத்து என்பவரின் மகன் அன்பரசன். இவன் 8-ம் வகுப்பு படித்துவந்தான். நண்பர்களான இவர்கள் 3 பேரும் சொக்கநாதபுரத்தில் உள்ள நொண்டிக் கருப்பன் ஏரியில் குளிக்கச் சென்றனர். அண்மையில் பெய்த மழையால் ஏரியில் அதிகமாகத் தண்ணீர் இருந்தது.

மாணவர்கள் உயிரிழப்பு
மாணவர்கள் உயிரிழப்பு

அன்பரசன் முதலில் ஏரியில் இறங்கிக் குளித்துள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக வழுக்கிக்கொண்டு ஆழத்துக்குச் சென்று தண்ணீரில் மூழ்கித் தத்தளித்தான். இதைப் பார்த்த நண்பர்கள் ஜெகனும், ஆணைமுத்துவும் அன்பரசனைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால், அவர்களும் தண்ணீரில் மூழ்கினர்.

இதைக் கண்ட ஏரிக்கரையில் நின்றவர்கள் கூச்சலிடவே அப்பகுதியில் ஆடு, மாடு மேய்த்துக்கொண்டு இருந்தவர்கள் கிராமத்தில் உள்ளவர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து கிராம மக்கள் திரண்டுவந்து மீட்டு செந்துறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கே பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் இறந்துவிட்டதாகக் கூறினார்கள்.

இறந்த மாணவர்
இறந்த மாணவர்

தற்போது, ஏரி மற்றும் குளங்களில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்தக் குளத்திலும் அண்மையில் தூர்வாரும் பணி நடந்துள்ளது. இதனால், குளத்தில் ஆழம் தெரியாமல் மாணவர்கள் 3 பேரும் நீரில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது. மாணவர்கள் இறப்பு குறித்து செந்துறை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

 `வயதில் சிறியவன் என நம்பிச் சென்றுவிட்டேன்!’ - மாணவரால் கல்லூரிப் பேராசிரியைக்கு நேர்ந்த சோகம்

என்ன நடந்தது என்று ஊர் மக்கள் சிலரிடம் பேசினோம். ``மூவருமே ஒன்றாகத்தான் பள்ளியில் பசிச்சிகிட்டு வர்றாங்க. இந்த நிலையில ஸ்கூல் லீவுங்கிறதால மூவருமே குளிக்க வந்திருக்காங்க. முதல்ல அன்பரசன் தண்ணியைப் பார்த்ததும் குளிக்க ஆரம்பிச்சிட்டான். ஜெகனும், ஆணைமுத்துவும் பனை பழத்தை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களது நண்பனான அன்பரசனுக்கு நீச்சல் தெரியாமல் தண்ணீரில் தத்தளிச்சிகிட்டு இருந்ததைப் பார்த்ததும் உதவிக்காகக் கத்தியிருக்கிறார்கள்.

கதறி அழும் பெற்றோர்கள்
கதறி அழும் பெற்றோர்கள்

அக்கம் பக்கத்தில் யாரும் இல்லாததால் இரண்டும் பேரும் அவனைக் காப்பாத்த தண்ணியில குதிச்சிருக்காங்க. இவர்களுக்கும் நீச்சல் தெரியாததால் மூழ்கி இறந்துட்டாங்க. எல்லா இடத்துக்கும் ஒன்னாதான் போவாணுங்க இன்று சாவுலையும் ஒன்னா போயிட்டாணுங்களேனு நினைக்கும்போது வேதனையா இருக்கு" என்று தழுதழுத்தார்கள்.