மதுரையில் நடந்துவரும் சித்திரைத் திருவிழாவில் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழச்சி இன்று அதிகாலை நடந்தது.
கோவிட் கட்டுப்பாடு காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக மக்கள் பங்களிப்பில்லாமல் இந்தத் திருவிழா நடந்த நிலையில், கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டதால் பல மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் நேற்று இரவு முதல் வைகை ஆற்றுப்பகுதியில் குவியத் தொடங்கினார்.
வைகையாற்றில் தண்ணீர் அதிகம் செல்வதால் பொதுமக்கள் ஆற்றுக்குள் இறங்கி கள்ளழகரை தரிசிக்கக் கூடாது என்று மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை செய்திருந்தது. அதனால், தடுக்கப்பட்ட பகுதிகளைச் சுற்றி மக்கள் கூட்டம் நெருக்கியடித்தது.

இன்று அதிகாலை 6 மணிக்கு கள்ளழகர் ஆற்றுக்குள் இறங்கினார். இதைக் காண மக்கள் முண்டியடித்தனர். ஆற்றுக்குள் வலம் வந்து மக்களுக்கு அருள்பாலித்துவிட்டு கள்ளழகர் மண்டபத்துக்குத் திரும்பிய நிலையில் அங்கு சாமியைக் காண மக்கள் முன்னேறியபோது நெரிசல் ஏற்பட்டு பலர் தடுமாறி கீழே விழுந்தனர். இதனால் அங்கு கூச்சலும் கதறலும் ஏற்பட்டது.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உடனே காவல்துறையினர், தன்னார்வலர்கள் வந்து கீழே விழுந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இந்த நெரிசலில் சிக்கி ஒரு பெண், ஒரு ஆண் என இருவர் உயிரிழந்தனர். இவர்கள் யார் என்ற அடையாளம் காணும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
கூட்ட நெரிசலில் சிக்கிக் காயமடைந்த 11 பேர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் பதற்றத்துடன் அங்கிருந்து வெளியேறிவருகின்றனர்.
இந்நிலையில் மரணமடைந்தவர்களைப் பற்றி விவரம் தெரிந்தவர்கள் 9498042434 எண்ணுக்குத் தொடர்புகொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
4,000 போலீஸ்காரர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டும், பல முன்பேற்பாடுகள் மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்பட்டதாக சொல்லப்பட்டும் இப்படியொரு மோசமான சம்பவம் நடந்துவிட்டதே என்று வந்திருந்த மக்கள் புகார் தெரிவித்தார்கள்.
கள்ளழகர் திருவிழா கூட்ட நெரிசலில் மரணமடைந்தவர்களுக்கு அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய் இழப்பீடும், காயமடைந்தவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்கப்படும் என்று அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்திருக்கிறார். இதற்கிடையே, பலியானவரில் ஒருவர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த செல்வம் என்று தெரியவந்ததாகவும் சொல்லப்படுகிறது.