Election bannerElection banner
Published:Updated:

கோவை: ஊருக்குள் நுழைந்த காட்டு யானைகள்... தாக்கப்பட்ட பசு மாடுகள்... பதற்றத்தில் மக்கள்!

யானைகள்
யானைகள்

கோவை சிறுமுகை அருகே 2 காட்டு யானைகள் ஊருக்குள் வந்ததால் பதற்றம் நிலவுகிறது.

கோவை மாவட்டம், சிறுமுகை வனச்சரகத்துக்கு உட்பட்ட பெத்திக்குட்டை வனப்பகுதியில் இருந்து இரண்டு ஆண் காட்டு யானைகள் நேற்று மாலை வெளியே வந்தன. அந்த யானைகள் இன்று காலை சாலையூர் பகுதி வழியாக மங்காபாளையம் என்ற கிராமத்துக்குள் நுழைந்தன.

கிராமத்துக்குள் நுழைந்த யானைகள்
கிராமத்துக்குள் நுழைந்த யானைகள்
யானை - மனித எதிர்கொள்ளலைக் குறைக்க தேனீக்கள்... புதிய முயற்சியை கையிலெடுக்கும் அரசு!

அப்போது கருப்புசாமி என்பவரது தோட்டத்துக்குள் சென்ற யானைகள், அங்கு கட்டப்பட்டு இருந்த பசுமாட்டைத் தாக்கின. தந்தத்தால் குத்தியதில் மாட்டின் குடல் வெளியே வந்தது.

இதையடுத்து அருகே உள்ள கூலே கவுண்டம்பாளையம் பகுதிக்குள் சென்ற யானைகள் வெங்கிடுசாமி என்பவரின் மாட்டை தாக்கின. இதில் அந்த மாடு படுகாயமடைந்தது. அப்பகுதி மக்கள் விரட்டியதால் இரண்டு காட்டு யானைகளும் இடுகம்பாளையம் பகுதிக்குச் சென்றன. அங்கு ஆஞ்சநேயர் கோயில் கரடு பகுதியில் உள்ள பள்ளத்தில் இரண்டு யானைகளும் முகாமிட்டுள்ளன.

பெரியநாயக்கன்பாளையம், சிறுமுகை மற்றும் மேட்டுப்பாளையம் வனத்துறையினர் 50-க்கும் மேற்பட்டோர் யானைகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

யானைகள்
யானைகள்

தற்போது, யானைகள் கிராமப் பகுதியில் இருந்து விரட்டப்பட்டுவிட்டன. ஊர் எல்லையில் இருக்கும் யானைகளை, பகல் நேரத்தில் ஆட்கள் நடமாட்டம் இருப்பதால் இரவு நேரத்தில் வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு