Published:Updated:

வீடுகளில் விரிசல், தூள் தூளான ஜன்னல்,கதவு; வெடித்துச் சிதறிய டி.வி!-அதிகாலையில் அலறிய ஆற்காடு மக்கள்

ஆற்காட்டில், கேஸ் கசிவு காரணமாக மின்சாதனப் பொருள்கள் வெடித்துச் சிதறியதில், இரண்டு வீடுகள் பலமாக சேதமடைந்தன. அதிகாலையில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தால், பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

சேதமடைந்த வீடு
சேதமடைந்த வீடு

வேலூர் மாவட்டம், ஆற்காடு சாய்பாபா நகர் ராஜகோபால் தெருவைச் சேர்ந்தவர் தனசேகர் (61). ஓய்வுபெற்ற மின்வாரியத் துறை அதிகாரி. இவரது மகன் கீர்த்திராஜன் (29), அரசு மருத்துவராக உள்ளார். நேற்றிரவு அவர்கள், குடும்பத்துடன் படுக்கை அறையில் சென்று தூங்கினர். 

தனசேகர் வீடு
தனசேகர் வீடு

இன்று அதிகாலை 3.45 மணியளவில், தனசேகரின் வீட்டுக்குள்ளிருந்து பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. தூங்கிக்கொண்டிருந்த தனசேகர் குடும்பத்தினர் திடுக்கிட்டு எழுந்தனர். பின், பதறியடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தனர். அந்தப் பகுதி மக்களும் சத்தம் கேட்டு விழித்துக்கொண்டனர்.

விபரீதம் என்னவென்று தெரியாததால், அவர்களும் பதற்றமடைந்து குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு வீதிக்கு ஓடிவந்தனர். தனசேகரின் வீட்டுச் சுவர்கள் பலமாக விரிசலடைந்தன. கதவு, ஜன்னல்கள் உடைந்து தூள் தூளாகச் சிதறின. டி.வி-யும் வெடித்துச் சிதறின.

உடைந்து சிதறிய ஜன்னல் கதவுகள்
உடைந்து சிதறிய ஜன்னல் கதவுகள்

ஷோபா, ஸ்கிரீன் போன்ற பொருள்கள் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தன. இவர்கள் வீட்டுக்குள் ஏற்பட்ட வெடிச்சத்தத்தின் அதிர்வால் அருகில் வசிக்கும் ரகுபதி (59) என்பவரின் வீட்டுச் சுவரும் பிளவுபட்டுச் சேதமடைந்தன. இந்தச் சம்பவத்தில் ஒருவருக்கும் காயம் ஏற்படவில்லை.

தகவலறிந்ததும், ராணிப்பேட்டை டி.எஸ்.பி கீதா தலைமையில் ஆற்காடு டவுன் போலீஸார் மற்றும் தடயவியல் நிபுணர் பாரி சம்பவ இடத்துக்கு விரைந்துவந்தனர். சோதனையில், தனசேகரின் வீட்டுக்குள் கேஸ் கசிவு காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டதாகத் தெரியவந்திருக்கிறது.

விசாரணை நடத்திய காவல்துறையினர்
விசாரணை நடத்திய காவல்துறையினர்

நம்மிடம் பேசிய டி.எஸ்.பி கீதா, ``கேஸ் சிலிண்டரின் அருகிலேயே ஃப்ரிட்ஜ் வைத்திருந்தனர். கேஸ் கசிவு அவர்களுக்குத் தெரியவில்லை. விபத்து ஏற்பட்டபோது, மின்சாதனப் பொருள்களும் வெடித்துச் சிதறின. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் சிறு காயம்கூட ஏற்படவில்லை’’ என்றார்.