திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் அமைந்துள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் பழைய டயர்களைத் தூளாக்கி, ஆயில் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கிவருகிறது. இந்தத் தொழிற்சாலையில் உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்துவருகின்றனர். இந்தநிலையில், இன்று மாலை தொழிற்சாலையில் அதிகபட்ச வெப்பநிலையில் கொதிகலன் கொதித்துக்கொண்டிருந்தபோது, தொழிலாளர்கள் வழக்கம்போல் கொதிகலன் மூடியைத் திறந்து பார்த்திருக்கிறார்கள். அப்போது எதிர்பாராதவிதமாக கொதிகலன் பயங்கரச் சத்தத்துடன் கண்ணிமைக்கும் நேரத்தில் வெடித்துச் சிதறியது.

அதில் கொதிகலன் அருகில் வேலை பார்த்துக்கொண்டிருந்த இரண்டு வடமாநிலத் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும், இந்த விபத்தில் மூன்று தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். அவர்களை சக ஊழியர்கள் உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்து தொடர்பாகத் தகவல் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல்துறையினர், உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் விபத்தில் உயிரிழந்தவர்கள் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஜிதேந்திரா (35) மற்றும் மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த குந்தன் (21) என்றும், படுகாயமடைந்தவர்கள் மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் (21), விதூர் (18), சாயல் (18) என்றும் தெரியவந்துள்ளது. போலீஸார் விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து தொழிற்சாலை உரிமையாளரிடமும், விபத்தின்போது பணியிலிருந்த ஊழியர்களிடமும் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

கொதிகலன் வெடித்து இரண்டு வடமாநில தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.