Published:Updated:

நீலகிரி: தேயிலைத் தோட்டத்தில் குவித்து வைக்கப்பட்ட வெளிமாநில மது; அதிமுக நிர்வாகி தலைமறைவு!

வெளிமாநில மது வகைகள்
வெளிமாநில மது வகைகள்

கூடலூர் அருகில் தேயிலை தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெளிமாநில மது வகைகளை பறிமுதல் செய்த போலீஸார், 2 நபர்களைக் கைது செய்து, தலைமறைவான அ.தி.மு.க. நிர்வாகியைத் தேடி வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தொற்று பாதிப்பு குறையாத கோவை, நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படவில்லை.

வெளிமாநில மது வகைகள்
வெளிமாநில மது வகைகள்

இதனால் கர்நாடகா மாநிலத்தில் இருந்து நீலகிரிக்கு மது வகைகளை சட்டவிரோதமாக கடத்தி வந்து தொடர்ந்து விற்பனை செய்து வருகின்றனர்.கர்நாடக-கூடலூர் எல்லைகளில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.கூடலூர் பகுதிகளில் வெளிமாநில மது விற்பனை சட்டவிரோதமாக நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்த வண்ணமே உள்ளன.

புகாரின் அடிப்படையில் கூடலூர் 2- வது மைல் பகுதியில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தில் காவல்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். அந்த தோட்டத்தில் ஏராளமான கர்நாடக மாநில மது வகைகளை சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்து பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அந்த பகுதியைச் சேர்ந்த 2 நபர்களிடம் சந்தேகத்தின்பேரில் விசாரணை மேற்கொண்டனர். அவர்களுக்கும் இதில் தொடர்பு இருப்பதை உறுதி செய்து இருவரையும் கைது செய்தனர்.மேலும் இதில் தொடர்புடைய அதிமுக நிர்வாகி ஒருவர் தலைமைறைவாகியுள்ள நிலையில்,அவரைத் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

வெளிமாநில மது வகைகள்
வெளிமாநில மது வகைகள்

இது குறித்து கூடலூர் காவல்துறையினர்,"தேயிலைத் தோட்டம் மற்றும் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 176 வெளி மாநில மது வகைகளை பறிமுதல் செய்துள்ளோம். புஷ்ப அருண் மற்றும் பிரபாகரன் ஆகிய இருவரை கைது செய்துள்ளோம்.மேலும் இதில் தொடர்புடைய நீலகிரி மாவட்ட அதிமுக இளைஞர் அணி நிர்வாகி ஒருவரைத் தேடி வருகிறோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு