Published:Updated:

`அப்பாவ காப்பாத்த முடியலை; வேற யாருக்கும் அப்படி நடக்கக் கூடாது!' - நிவாரண நிதியளித்த மாணவி

நிவாரண தொகை வழங்கிய மாணவி ரிதானா
News
நிவாரண தொகை வழங்கிய மாணவி ரிதானா

தூத்துக்குடியில் தந்தையின் மருத்துவச் செலவுக்காகச் சேர்த்து வைத்திருந்த பணத்தையும், பிறந்தநாளுக்குப் புத்தாடை வாங்குவதற்காக சேமித்த பணத்தையும் முதல்வரின் நிவாரண நிதிக்காக தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழியிடம் வழங்கியுள்ளனர் இரண்டு மாணவிகள்.

கொரோனா இரண்டாவது அலை உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைத் தடுக்கவும், நோய்த்தொற்றிலிருந்து மக்களைக் காக்கவும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கொரோனா தடுப்புப்பணிகளை மேற்கொள்வதற்காக பொதுமக்கள், முதல்வரின் நிவாரண நிதிக்கு நிதி அளித்து உதவுமாறு முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டிருந்தார்.

மாணவி ரிதானா
மாணவி ரிதானா

அதைத் தொடர்ந்து பல தரப்பினரும் முதல்வரின் நிவாரண நிதிக்காக நிதி அளித்து வருகின்றனர். பள்ளி மாணவ, மாணவிகள் பலரும் தங்களின் சேமிப்பு பணத்தை நிவாரண நிதிக்காக அளித்து வருகின்றனர்.

அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவி ரிதானா, தன் தந்தையின் மருத்துவச் செலவுக்காக சேமித்து வைத்திருந்த ரூ.1,970-ஐ முதல்வரின் நிவாரண நிதிக்காக தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழியிடம் வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதுகுறித்து மாணவி ரிதானாவிடம் பேசினோம். ``6-ம் வகுப்புல இருந்தே எங்க அப்பா, பாக்கெட் மணியா கொடுக்கிற காசை சேர்த்து வைக்கிறது என்னோட பழக்கம். திடீர்னு எதிர்பாராத செலவு வந்துச்சுனாலோ, அம்மா, அப்பாவுக்கு அவசரத் தேவைனாலோ உண்டியல் பணத்தை அப்படியே கொடுத்திடுவேன். எங்க அப்பாவுக்கு போன வருஷம் உடல்நிலை சரியில்லாம போச்சு. அந்த நேரத்துல நான் சேர்த்து வச்சிருந்த ரூ.1,970-ஐ அப்பாவுக்கு மருந்து வாங்க அம்மாகிட்ட கொடுத்தேன்.

மாணவிகள் முதல்வருக்கு எழுதிய கடிதங்கள்
மாணவிகள் முதல்வருக்கு எழுதிய கடிதங்கள்

ஆனா, அடுத்த ரெண்டு நாள்ல அப்பா ஹார்ட் அட்டாக்ல இறந்துபோயிட்டாங்க. அந்தப் பணம் அப்படியே இருந்தது. போன வாரம் சி.எம் ஸ்டாலின் சார், `கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நிதி கொடுங்க’ன்னு டி.வியில பேசுனதைப் பார்த்தேன். பேங்க்-ல டி.டி எடுத்து அனுப்பலாம்ன்னு நினைச்சப்போதான், எங்க ஏரியா ரேஷன் கடையில கொரோனா சிறப்பு நிவாரண நிதி கொடுக்க எம்.பி கனிமொழி மேடம் வர்றாங்கனு பக்கத்து வீட்ல சொன்னாங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உண்டியல் பணத்தை ஒரு கவர்ல போட்டு, கூடவே சி.எம் சாருக்கு ஒரு லெட்டரும் எழுதி நானும் எங்க அம்மாவும் கனிமொழி மேடத்துகிட்டயே கொடுத்துட்டோம். இப்பதான் எனக்கு மனசு நிறைவா இருக்கு. என்னோட அப்பாவைப் போல மற்ற எந்த அப்பாக்களும் இறந்துடக் கூடாதுன்னு தினமும் பிரேயர் பண்ணிக்கிட்டிருக்கேன்” என்றார். மாணவியின் கடிதம் பலரையும் நெகிழ வைத்துள்ளது.

இதைப்போலவே, தூத்துக்குடியைச் சேர்ந்த வருண்யா தேவி என்ற 3-ம் வகுப்பு மாணவி, தன் பிறந்தநாளன்று புத்தாடை வாங்குவதற்காக சேமித்து வைத்திருந்த ரூ.2,000 தொகையை முதல்வரின் நிவாரண நிதிக்காக வழங்கியுள்ளார்.

நிவாரண நிதி வழங்கிய மாணவி வருண்யாதேவி
நிவாரண நிதி வழங்கிய மாணவி வருண்யாதேவி

மாணவி வருண்யாதேவி, ``கொரோனா ரொம்ப அதிகமா பரவிக்கிட்டு இருக்கு. நிறைய பேரு பாதிக்கப்பட்டிருக்காங்க. எங்க தெருவுலயே மூணு பேருக்கு பாசிட்டிவ். அடுத்த மாசம் எனக்கு பர்த்டே. ஒவ்வொரு வருச பர்த்டேவுக்கும் எனக்கு புது டிரெஸ் எடுப்போம். இந்த வருசம் ஊரே கொரோனா பயத்துல இருக்குறப்போ எனக்கு மட்டும் எதுக்கு புது டிரெஸ்னு அம்மா, அப்பாகிட்ட சொல்லிட்டேன்.

ஸ்கூல் கேன்டீன்ல ஸ்நாக்ஸ் வாங்குறதுக்காக அப்பா கொடுக்கிற பணத்தை பர்ஸ்ல போட்டு வெச்சிருப்பேன். கொரோனா தடுப்புப் பணிக்காக நிறைய பேரு அவங்களால முடிஞ்ச பணத்தைக் கொடுக்குறாங்க. நான் எங்கிட்ட இருந்த ரெண்டாயிடம் ரூபாயை சி.எம் ரிலீஃப் ஃபண்டுக்காக கனிமொழி எம்.பி மேடம்கிட்ட கொடுத்துட்டேன்” என்றார் கீச்சுக் குரலில்.

இந்த இரு மாணவிகளின் நல்ல எண்ணத்தைப் பாராட்டியதுடன் தனது ட்விட்டர் பக்கத்திலும் இவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார் கனிமொழி.