Published:Updated:

`உயர் மின் கோபுர உச்சி; அழகாகத் தெரிந்த தஞ்சை கோயில்!’ - இளைஞர்களின் செல்ஃபியால் பதறிய பொது மக்கள்

செல்ஃபி எடுக்கும் இளைஞர்கள்
செல்ஃபி எடுக்கும் இளைஞர்கள்

சூழ்நிலைகளைப் பற்றி நினைக்காமல், வரவிருக்கும் ஆபத்துகளையும் உணராமல் செல்ஃபி எடுக்கும் பழக்கம் நம்மில் பலரிடம் உள்ளது. இதேபோல் தஞ்சாவூரில் இரண்டு இளைஞர்கள் எடுத்துக்கொண்ட செல்ஃபி பொது மக்களைப் பதற வைத்துள்ளது.

தஞ்சாவூர், சிவகங்கை பூங்கா எதிரே மாநகராட்சி சார்பில் உயர் மின் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்றது. சில தினங்களுக்கு முன் உயர் மின்கம்பத்தை மட்டும் அமைத்திருந்தனர். இந்நிலையில், இன்று உயர் மின்கம்பத்தின் உச்சியில் பல்பு பொருத்தும் பணியில் தனியார் ஒப்பந்த ஊழியர்கள் ஈடுபட்டனர். பல்புகளைப் பொருத்துவதற்காகச் சுமார் 50 அடி உயரம் கொண்ட உயர் மின் விளக்குக் கம்பத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் இல்லாமலேயே இரண்டு இளைஞர்கள் ஏறினர்.

செல் ஃபி எடுக்கும் இளைஞர்கள்
செல் ஃபி எடுக்கும் இளைஞர்கள்

மின் கம்ப உச்சிக்குச் சென்ற அந்த இளைஞர்கள் கம்பத்திலிருக்கும் வட்ட வடிவிலான இரும்பில் அமர்ந்தனர். இதன்முன்பும், இது போல் அவர்கள் உச்சியில் வேலை பார்த்த அனுபவம் கொண்டவர்கள் என்றாலும், தற்போது பெரிய கோயிலுக்கு அருகில் வேலை செய்ததால் உச்சியில் இருந்து பெரிய கோயிலைக் கண்டதுமே ஆர்வ மிகுதியில் செல்போன் மூலம் செல்ஃபி எடுக்கத் தொடங்கியதாகச் சொல்லப்படுகிறது. உயர் மின் விளக்கு அமைக்கப்படும் இடம் எப்போதும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதி என்பதால் பயம் எதுவுமின்றி எதிர்வரும் ஆபத்தை உணராமல் இப்படி அசால்டாக செல்ஃபி எடுத்துக் கொண்டிருக்கும் இளைஞர்களைக் கவனித்த சிலர் பதற்றமடைந்தனர். சிலர் தம்பி உயரத்தில் இருந்துகொண்டு பிடிக்க கைப்பிடிகூட இல்லாத இடத்தில் செல்ஃபி எடுப்பது போன்ற விபரீத செயல்களில் ஈடுபடாதீர்கள் என எச்சரிக்கவும் செய்தனர்.

எச்சரிக்கைகளைக் காதில் வாங்கிக்கொள்ளாத இளைஞர்கள், ஒரு வழியாக ஆர அமர பல கோணங்களில் செல்ஃபி எடுத்த பிறகே பல்பை பொருத்திவிட்டு கீழே இறங்கி வந்தனர்.

இது குறித்துப் பேசிய ஒருவர், `பள்ளிக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் செல்ஃபி எடுக்கும் பழக்கம் என்பது அதிகரித்துக்கொண்டே வருகிறது. சில சமயம் செல்ஃபி எடுப்பது என்பது ஆபத்தில் முடிவதும் உண்டு. செல்ஃபி எடுக்கும்போது ஏற்பட்ட விபத்தால் சிலர் உயிரிழந்தும் உள்ளனர்.

செல்ஃபி எடுக்கும் இளைஞர்கள்
செல்ஃபி எடுக்கும் இளைஞர்கள்

செல்ஃபி என்பது விளையாட்டான ஒரு விஷயம்தான். ஆனால், அது வினையாகிவிடக் கூடாது. குறிப்பாக, இளைய தலைமுறையிடம் இந்தப் பழக்கம் அதிகமாக உள்ளது. எந்த வித பாதுகாப்பும் இல்லாத இடத்தில் தங்களைப் பற்றியும் குடும்பத்தைப் பற்றியும் துளியும் நினைக்காமல் இரண்டு இளைஞர்கள் செல்ஃபி எடுத்தது கீழே இருந்து பார்த்தவர்கள் அனைவரையும் பதற்றமடைய வைத்தது. நல்ல வேளையாக அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை ,`தம்பி இனி இதுபோல் செய்யாதீங்க என அன்பாகக் கூறினேன்’ இதைப் பின்பற்றுவது அவர்கள் கையில்தான் உள்ளது” என்று கூறினார்.

அடுத்த கட்டுரைக்கு